20 Nov 2022

எங்கெங்கு காணினும் காங்கிரீட் நிலங்களடா!

எங்கெங்கு காணினும் காங்கிரீட் நிலங்களடா!

நிலத்தை விற்பது – வாங்குவது என்றால் தமிழர்களுக்குத் தனி குஷிதான். இங்கிருக்கும் நிலத் தரகர்கள் போல வேறெங்கும் இருக்கிறார்களா என்பது ஆய்வு செய்ய வேண்டிய விசயம்.

கிராமத்தில் இருக்கும் நிலத்தை விற்பதென்றால் இவர்களைப் போல விற்றுத் தள்ள முடியாது. நகரத்தில் ஒன்றுக்கும் உதவாத இடமென்றாலும் அதை வாங்கித் தள்ளவும் இவர்களைப் போல இயலாது. இந்த மனோவியாதி குறித்து உளவியல் அறிஞர்கள் ஆய்ந்து சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

எங்கு இருந்தாலும் நிலம் என்பது நிலம்தான். உள்ளபடி பார்த்தால் நகரத்து நிலங்களை விட கிராமத்து நிலங்களுக்குத்தான் மதிப்பு அதிகம். கிராமத்தில் இருக்கும் நிலம்தான் காங்கிரீட் மாசு படாமல் தூய்மையாக இருக்கிறது. ஆனால் பண மதிப்பென்னவோ நகரத்து நிலங்களுக்குத்தான்.

அதென்னவோ நம் மக்களுக்கு ஒரு வணிக வளாகமும் ஒரு தேநீர் கடையும் இருந்தால் அதை நகரமென்றும் புற நகரமென்றும் கருதும் மனோபாவம் வந்து விடுகிறது.

புறநகர் மனைகளைப் பாருங்கள். அரசு அங்கீகாரம் பெற்ற மனைகள் என்று எழுதியிருக்கிறார்கள். அரசு அவ்வளவு மனைகளை அங்கீகரித்தால் நாட்டில் விவசாயம் செய்ய நிலங்கள் இருக்குமா?

நிலங்கள் என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா? பறவைகள், விலங்குகள் இருக்கின்றனவே. அவற்றுக்கான புறம்போக்கு நிலங்கள் இருக்க வேண்டாமா? மனிதர்களிலும் நாடோடியாக வாழ்க்கை நடத்துபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கொஞ்சம் நிலங்கள் இருக்க வேண்டாமா?

இருக்கின்ற நிலம் அனைத்தையும் மனைகளாக்கி வாடகைக்கு விடுவதில் நம் மனிதர்களுக்கு அப்படி ஒரு பித்து. ஒரு மனிதருக்கு எத்தனை வீட்டு மனைகள் இருக்க வேண்டும் என்பதில் கணக்கு வழக்கு வேண்டாமா? கண்மூடித்தனமாக வீட்டு மனைகளை வாங்கிப் போட்டு வைத்திருப்பவர்கள் நாட்டில் அநேகம்.

ஆதார் எண்ணை வைத்துதான் இப்போதெல்லாம் பத்திரப்பதிவு செய்கிறார்கள். ஆதார் எண்ணை வைத்துச் சோதித்துப் பார்த்தால் தெரியும், ஒருவருக்கு எத்தனை மனைகள் மிகையாக இருக்கிறது? ஒரு மனை கூட இல்லாமல் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்? என்பது.

நாம் இருக்கின்ற நிலங்களை எல்லாம் காங்கிரீட் மனைகளாக்கி விடலாம். மீண்டும் காங்கீரீட் மனைகளை நிலங்களாக்க முடியாது.

இந்த விசயத்தில் பொதுமக்களும் அரசாங்கமும் இணைந்து யோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். பொதுவாக சில நிலங்களை நிலங்களாகப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...