18 Oct 2022

குழந்தைகள் குடோன்களும் தலை அடமானக் கடைகளும்

குழந்தைகள் குடோன்களும் தலை அடமானக் கடைகளும்

என் பிள்ளை என்னைப் போலப் படிக்காமல் போய் கஷ்டபடக்கூடாது ஐயா (சார்!) என்கிறார்கள். அந்தப் பிள்ளைகளைப் பள்ளிப் பேருந்தில் புளி மூட்டைப் போல அடைத்து அனுப்பி கஷ்டப்படுத்தலாம் போல.

இலவசப் பேருந்துகளே காற்றாடிக் கொண்டு போய்க் கொண்டிருக்கையில் பள்ளிப் பேருந்துகள் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள குடோன்களைப் போலப் போய்க் கொண்டிருக்கின்றன.

அதைத் தாண்டி அடிக்கடி லொக்கு லொக்கென இருமிக் கொள்வதைப் போல இப்படி ஒரு வசனத்தைக் கேட்க முடிகிறது.

தலையை அடமானம் வைத்தாவது பிள்ளைகளைப் படிக்க வைத்து விடுவேன் என்கிறார்கள். நல்லது எந்தச் சேட்டுக் கடையில் தலையை அடமானம் வைக்கிறார்கள் என்று சொன்னால் உபயோகமாக இருக்கும்.

பிள்ளைகள் படிக்க பெற்றோர்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். வன்கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். வன்கொடுமைத்  தடுப்புச் சட்டத்திலிருந்து காக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் பெற்றோர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சட்ட ரீதியான பாதுகாப்பு வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலகெங்கும் நிலவுகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், ரஷ்ய அதிபர் விளாமிடிர் புதினும், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரசும் இதற்கு நிச்சயம் ஏதேனும் தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுவது ஆறுதல் அளிக்கிறது.

அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் பெற்றோர்களுக்கான உளவியல் ஆலோசனை மையங்கள் திறப்பது நிச்சயம் பயன் தரும். லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகளாவது அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...