18 Oct 2022

சிறிய புராணம்

சிறிய புராணம்

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் வீட்டுக்கார அம்மாவுக்கு பிள்ளைகள் புராணம்தான்.

கணக்கில் நூற்றுக்கு நூறு (சென்டம்) என்பார்.

தமிழ்நாட்டில் இந்தியை எதிர்த்தால் என்ன? என் பிள்ளை தொண்ணூற்று எட்டு என்பார்.

பாட இணைச் செயல்களில் (கோ கரிக்குலார் ஆக்டிவிட்டிஸ்) தங்கப் பதக்கம் (கோல்ட் மெடல்) என்பார்.

பிள்ளை எதைச் செய்தாலும், மதிப்பெண்கள் வாங்கினாலும், பரிசுகள் வாங்கினாலும் உடனுக்குடன் என்னிடம் சொல்லி மகிழ்வதில் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

அந்த அளவுக்கு பிள்ளைகளைப் பற்றி ஆவலாகப் பகிர்ந்து கொள்ளும் அவர் எல்லாவற்றையும் என்னிடம் சொல்ல வேண்டும் இல்லையா!

போன வாரம் நடந்த ஒரு காரியத்தை எனக்குத் தெரியாமல் சாமர்த்தியமாக மறைத்து விட்டார் பாருங்கள்.

நானென்ன குற்றம் செய்தேன்? அல்லது பாவம் செய்தேன்? அந்த அம்மாவுக்கு விரோதமாக ஒரு வார்த்தை பேசியிருப்பேனா? கோபப்படும் விதமாக ஒரு சொல்லை விட்டிருப்பேனா? எது சொன்னாலும் மகிழ்ச்சி, சிறப்பு என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

பிறகெப்படி அவர் என்னிடம் மறைக்கலாம்.

நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

நான்காம் வகுப்பில் படிக்கும் அவரின் பிள்ளை மூன்றாம் வகுப்பில் படிக்கும் பிள்ளைக்கு முத்தம் கொடுத்திருக்கிறான்.

இதைச் சொன்னால் நான் சந்தோசப்பட மாட்டேனா என்ன?

என்னத்தைச் சொல்வது?

நானாக ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த அம்மாவிடம் பேசினேன்.

“பிள்ளையாண்டான் தமிழில் எத்தனை மதிப்பெண்?”

“12”

அதைக் கேட்ட நேரத்தில் முரசு தொலைக்காட்சியில் சிவாஜி கணேசன் பாடிக் கொண்டிருந்தார், “மலரே! குறிஞ்சி மலரே! தலைவன் சூட நீ மலர்ந்தாய்! சிறந்த பயனை நீ அடைந்தாய்!”

சரியான சூழ்நிலைப் பாட்டு (சுட்சுவேஷனல் சாங்).

அந்தப் பிள்ளையாண்டானும் சரியான குறிஞ்சி மலர் பிள்ளையாண்டான்தான்.

வருங்காலத்தில் அவனும் ஒரு சிவாஜியாக வர வாய்ப்பிருக்கிறது.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...