கல்யாணப் பயிர் வளர்!
கல்யாணம் என்றால் அப்படித்தான்.
கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும்.
மாமியார் வருகிறார்,
மாமனார் வருகிறார்,
கொழுந்தன் வருகிறான், கொழுந்தி
வருகிறாள்,
மச்சான் வருகிறான், மச்சினி
வருகிறாள்,
போட்டோகிராபர் வருகிறார்,
பீரோ வருகிறது,
கட்டில் வருகிறது,
மெத்தை வருகிறது,
இன்னும் என்னென்னவோ வரதட்சணைகள்
வருகின்றன,
விருந்தினர்கள் வருகிறார்கள்,
மொய்கள் வருகின்றன,
பரிசுப் பொருட்கள் வருகின்றன
கொஞ்சம் சங்கடங்களும் வரத்தானே
செய்யும்.
அது பாட்டுக்குக் கொஞ்சம்
கொஞ்சமாய் வந்து கொண்டிருக்கும்.
அதைக் கொஞ்சம் கூட கண்டு
கொள்ளக் கூடாது.
வெகு முக்கியமாக அதைத் தீர்க்க
முயலக் கூடாது.
தீர்க்க நினைத்தால் தீர்ந்து
போவாய்.
இதுவும் கடந்து போகும் என்று
கண்டும் காணாமல் இருக்க வேண்டும்.
பரஸ்பரத் தம்பத்திகளைப் பார்த்து
பொறாமை கொள்ளக் கூடாது. அவர்கள் பார்ப்பவர்களுக்காகப் பேசிக் கொள்பவர்களாக இருப்பார்கள்,
உள்ளுக்குள் பேசிக் கொள்ளவே மாட்டார்கள் என்பன போன்ற ரகசியங்கள் நிறைய இருக்கின்றன.
சில அடிதடிகள், ரத்தங்கள்,
காயங்கள், வீர தீர தழும்புகள் இருக்கத்தான் செய்யும். அதன் பின் அமைதி நிலவக் கூடும்.
போருக்குப் பின் அமைதி என்று
அப்போதே சொல்லி விட்டார்கள்.
இவ்வளவும் ஏன் இன்னும் கூடுதலாகவும்
இருக்கத்தான் செய்யும். அதற்காகச் சோர்ந்து போகக் கூடாது. மனம் தளர்ந்து போய் விடக்
கூடாது. ஐ.நா.வின் மனித உரிமைக் கழகத்தில் முறையீடு செய்வேன் என்று முஸ்தீபுகள் காட்டக்
கூடாது. அது இளம் தலைமுறையை நம்பிக்கை இழக்கச் செய்து விடக் கூடும். யாரைப் பார்த்தாலும்
சீக்கிரம் கல்யாணம் செய்து கொள் என்ற வாசகத்தை முக மலர்ச்சியோடு மறக்காமல் சொல்ல வேண்டும்.
கல்யாணம் என்ற ஆயிரம் காலத்துப்
பயிர் இப்படித்தான் காலந்தோறும் வளர்க்கப்பட்டுக் கொண்டே போய்க் கொண்டிருக்க வேண்டும்.
பயிர்கள் வளர வளர பசுமை உருவாகவும் வெப்பமயமாதல் குறையவும் ஆர்டிக்கில் உருகும் பனிப்பாறைகளைத்
தடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.
யாம் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம் என்று இருப்பதில் என்ன குறைந்து விடப் போகிறாய்?
ஒரு கல்யாணத்தை நடத்தி வைத்து
விட்டால் அந்தக் கல்யாண வாழ்க்கைக்கு நம் கல்யாண வாழ்க்கை எவ்வளவோ பரவாயில்லை என்று
தேற்றிக் கொள்ள, ஆறுதல் பட்டுக் கொள்ள ஆயிரம் வழிகள் இருக்கின்றன என்பதை மட்டும் புரிந்து
கொள். கல்யாண வாழ்க்கைத் தேனாய் இனிக்கும்.
*****
No comments:
Post a Comment