வருடத்துக்கு ஒரு முறை வாந்தியும் சினிமாவும்
சுமதிக்கு ஐந்தாவது திருமண
நாள். திருமணமாகி இத்தனை ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை. அதற்குள் இரண்டு பிள்ளைகள்.
ஒன்று யூ.கே.ஜி. போய்க் கொண்டிருக்கிறது. இன்னொன்று அடுத்த வருடத்தில் எல்.கே.ஜி.க்குத்
தயாராகி விடும் அளவுக்கு இடுப்பில் இருந்தது. இரண்டோடு போதும் அவளே முன் வந்து குடும்ப
கட்டுபாட்டையும் செய்து கொண்டாள்.
கல்யாணம் நடந்த போது அந்த
நாள் விஷேசமாக இருந்ததோடு சரி. ஒவ்வொரு வருட திருமண நாளும் சாதாரணமாகத்தான் கழிகிறது.
சுந்தரிடம் ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லியிருந்தாள். இந்த வருடமாவது கொஞ்சம் மாற்றமாய்
வெளியில் போய் வர வேண்டும் என்று.
சுந்தருக்கும் சுமதி சொல்வது
சரியாகத்தான் பட்டது. அவர்களின் திருமண நாள் சரியாக செப்டம்பர் மூன்றில் வருகிறது.
மாதம் பிறந்து பத்து நாள்கள் வரை சுந்தர் வேலை பார்க்கும் மளிகைக் கடையில் நிற்க நேரம்
இருக்காது.
காலையில் ஏழு மணிக்கு வேலைக்குக்
கிளம்பினான் என்றால் மாதத்தின் முதல் பத்து நாள்களும் இரவு வீடு வர பதினோரு மணியாகி
விடும். அது வரை வீட்டைப் பார்த்து பிள்ளைகளை மேய்ப்பது எல்லாம் சுமதிதான்.
இந்தத் திருமண நாளில் ஒரு
நாள் லீவ் எடுத்துக் கொண்டு சுமதியையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பீச், பார்க்,
சினிமா என்று சுற்ற வேண்டும் போலத் தோன்றியது சுந்தருக்கும். அதைச் சுமதியிடம் சொன்ன
போது அவள் முகத்தில் எழுந்த சந்தோசத்தைப் பார்த்த போது சுந்தருக்கு உலகத்தையே வென்றதைப்
போன்ற மமமை மனதுக்குள் வந்து போனது.
முன்கூட்டியே முதலாளியிடம்
கல்யாண நாளைச் சொல்லி லீவ் கேட்டான் சுந்தர். முதலாளி அவனை ஏற இறங்க பார்த்தார். அதன்
பின் அவர் முகம் கல்லா பெட்டியைத் திறந்து கொண்டு அதற்குள் போய் விட்டது. “அன்னைக்கு
லீவ்ல போவணும்ன்னு நெனைச்சின்னா ஒரே அடியா போயிடு. வேறு ஆளை வெச்சு நான் யேவாரத்தைப்
பாத்துக்கிறேன்.” என்றார் முதலாளி கல்லா பெட்டியில் இருந்த முகத்தைக் கொஞ்சம் கூட திருப்பாமல்.
சுந்தருக்கு ஒரு மாதிரியாகப்
போய் விட்டது. அன்று முழுவதும் முகத்தைத் தொங்க போட்டபடியே வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனை அப்படிப் பார்த்ததில்
முதலாளிக்கு மனதில் ஏதோ செய்திருக்க வேண்டும். “வேணும்ன்னா அன்னிக்கு மூணு மணிக்கு
மேல போ!” என்றார் இம்முறையும் அவனை ஏறெடுத்துப் பார்க்காமல்.
“போதும் முதலாளி. அது போதும்.
உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.” என்று காலைத் தொட்டுக் கும்பிட்டான் சுந்தர் என்னவோ
மனம் இரங்காத தெய்வம் மனம் இரங்கி வரம் கொடுத்து விட்டதைப் போல.
அன்றொரு நாள் லீவ் கிடைக்காததில்
சுமதிக்குக் கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும் சாயுங்காலம் வந்தால் கூட தியேட்டருக்குப்
போய் ஒரு படம் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டாள். கல்யாண நாளில் முதன் முறையாகத்
தியேட்டருக்குப் போகும் சந்தோசமும் அதில் கலந்திருந்தது.
கல்யாணம் ஆனதிலிருந்து டிவிடியில்
அவனோடு இரண்டு மூன்று படங்கள் பார்த்ததோடு சரி. அதற்குப் பிறகு அதற்கெல்லாம் நேரமில்லாதது
போல வீட்டு வேலைகளைப் பார்ப்பதையும் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதையும் அவள் இடை விடாமல்
செய்ய வேண்டியிருந்தது.
கல்யாண நாளை சுந்தரும் சுமதியும்
ரொம்ப ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நாளன்று மூன்று மணிக்கு விடுவதாகச்
சொன்ன முதலாளி ஐந்து மணிக்குத்தான் விட்டார். சுந்தர் அரக்கப் பரக்க பஸ் பிடித்து வீடு
வந்து சேர்த்தான்.
ஆட்டோவைப் பிடித்து அதில்
சுமதியையும் பிள்ளைகளையும் அள்ளிப் போட்டுக் கொண்டு தியேட்டருக்கு விடச் சொன்னான்.
தியேட்டரில் நான்கு சண்டைகள்,
ஐந்து பாட்டுகள், ஏழு காமெடி சீன்கள் கொண்ட படம் முடிந்ததும் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு
பிள்ளைகளோடும் சுமதியோடும் வீடு திரும்பிய போது சுமதியின் தோளில் ஒரு குழந்தையும் சுந்தரியின்
தோளில் இன்னொரு குழந்தையும் தேவாங்கைப் போல சுருண்டு தூங்கிப் போயிருந்தன.
சுந்தருக்கு அடித்துப் போட்டது
போல இருந்தது. சுமதிக்கும் ரொம்ப அயர்ச்சியாகத்தான் இருந்தது என்றாலும் அவள் முகத்தில்
ஒரு திருப்தி இருந்தது. அது போதும் என்றிருந்தது சுந்தருக்கு.
சுமதிக்கு முகத்தில் மகிழ்ச்சி
நிரம்பியிருந்தாலும் வாயும் வயிறும் ஒரு மாதிரியாக எதுக்களித்துக் கொண்டே இருப்பது
போல இருந்தது. குழந்தையைத் தொட்டியில் போட்டவள் சட்டென ஓடிப் போய் வாந்தி எடுத்தாள்.
“என்னாச்சு சுமதி?” என்றான்
சுந்தர் ஓடிப் போய்.
“ஒண்ணுமில்ல. வாந்தி.” என்றாள்
சிரிப்பைத் தவழ விட்டபடி சுமதி.
“சந்தோஷமா வெளியில போய் இப்படி
ஆயிடுச்சே?” என்று முகம் தொங்கிப் போனது சுந்தருக்கு.
“இப்படி மறுபடி வாந்தி எடுக்கவும்
சினிமாவுக்குப் போகவும் அடுத்த கல்யாண நாள் வரணும்ல.” என்றாள் சுமதி.
சுந்தருக்கு என்ன சொல்வதென்று
தெரியாமல் தொங்கிப் போயிருந்த முகத்தைக் கொஞ்சம் தூக்கி வைத்துக் கொண்டு லேசாகச் சிரித்து
வைத்தான். “ஆமாம்ல அதுக்கு இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கணும்ல.” என்று யாருக்கோ சொல்லிக்
கொள்வது போல சொல்லிக் கொண்டான்.
சுந்தரின் மனதில் இரண்டு
கேள்விகள் மட்டும் இப்போது தொக்கி நின்றன. சுமதி வாந்தி எடுத்ததற்குக் காரணம் அவள்
பார்த்த சினிமாவா? ஹோட்டலில் அவள் சாப்பிட்ட சாப்பாடா? ரொம்ப நேரம் யோசித்தும் அவனால்
விடை காண முடியவில்லை. மறுநாள் சீக்கிரமே போய் கடையைத் திறக்க வேண்டும் என்று நினைத்த
போது விடை காண நினைத்த கேள்விகளுக்குள் ஒரு சட்டர் வந்து விழுந்து சட்டென்று மூடிக்
கொண்டு விட்டது.
*****
No comments:
Post a Comment