சொற்களில் உண்டாகும் அறம்
அறம் என்பதற்கு எத்தனயோ ஆயிரம்
பொருள்களைத் தரலாம்.
அறம் என்பதற்கு எத்தனையோ
செயல்களை, நிகழ்வுகளைச் சான்றாகக் காட்டலாம்.
இனிய சொற்களைத் திருவள்ளுவர்
அறம் என்கிறார்.
“இன்சொ லினதே அறம்” (குறள். 93) என்ற குறள் வரியால் அதை
உறுதிப்படுத்தவும் செய்கிறார்.
இனிய சொற்களால் அறம் பெருகும்
என்பதை
“அல்லவை தேயம் அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.” (குறள்.
96)
என்ற குறட்பாவில் காட்டவும்
செய்கிறார்.
ஒரு செயலை அறமாகப் பார்க்கும்
பார்வையினின்று இது மாறுபட்டது. சொல்லை அறமாகப் பார்க்கும் இப்பார்வையினின்று சொல்லானது
செயலுக்கு ஆதாரமாக இருப்பதைத் திருவள்ளுவர் கருத்தில் கொள்கிறார். செயல் மட்டுமல்லாது
விளைவுகள் பலவற்றுக்கும் சொல் அடிப்படையாக இருப்பதைக் கருத்தில் கொண்டு திருவள்ளுவர்
இன்சொல்லை அறம் என்று உரைக்கிறார்.
“திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூங்கு இல்.” (குறள்.
644)
என்று சொல்வதனின்று சொல்லினின்றும்
அறம் பிறப்பதைத் திருவள்ளுவர் முக்கியமாகக் கருத்தில் கொள்வது விளங்கும்.
சொல்லால் என்ன செய்ய முடியும்
என்றால் அதனால் அறத்தை உருவாக்கவும் முடியும் அறமற்றவற்றை அழிக்கவும் முடியும். ஆகச்
சொல்லைக் கவனமாகக் கையாள வேண்டும்.
அறமுள்ள சொற்களால் அறம் உருவாவது
போல அறமற்ற சொற்களால் அறமற்ற நிலை உருவாகவும் வாய்ப்பிருக்கிறது. இது நல்ல சொற்கள்
நன்மையையும் தீய சொற்கள் தீமையை உருவாக்குவதைப் போன்றது.
கெடுதலான சொற்களால் கெடுதல்
உருவாகிறது. அவநம்பிக்கையான சொற்களால் அவநம்பிக்கையான நிலையே ஏற்படுகிறது.
மேற்காணும் வாதங்களை
“நயனீன்று நன்றி பயக்கும் பயனீன்று
பண்பின் தலைபிரியாச் சொல்.” (குறள். 97)
என்ற பாவால் வள்ளுவர் உறுதி
செய்வார்.
சமகாலத்தில் இதனை மறைந்த
பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்திராஜனும் தன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களோடு ஒப்பிட்டு
உறுதி செய்திருக்கிறார்.
“ஏன் பிறந்தாய் மகனே” என்ற பாடலைப் பாடிய பிறகு தன் மகனை அவர் இழந்திருக்கிறார்.
“நான் ஒரு ராசியில்லாத ராஜா”, “என் கதை முடியும் நேரம் இது”
என்பன போன்ற
பாடல்களைப் பாடிய பிறகு அவர் திரைத்துறையில் பாடல் வாய்ப்புகள் இல்லாமல் பின்னணிப்
பாடல்கள் பாடாமல் நெடுங்காலம் இருந்திருக்கிறார்.
நம்முடைய சொற்களுக்கு வருங்காலத்தைக்
கணிக்கும் ஆற்றல் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. நம் வருங்காலம் நல்ல விதமாக அமைய
வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஓர் எளிய வழியாக நல்ல சொற்களை மட்டும் கையாள்வது
சிறந்த வழியாக அமையும்.
நாம் நேர்மறையாகப் பேசினால்
அது நம் வாழ்வில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எதிர்மறையாகப் பேசினால் எதிர்மறையான
விளைவுகளை ஏற்படுத்துகிறது. எதிர்மறை சொற்களால் எதிர்மறை விளைவுகளை உருவாக்குவதை அறம்
பாடுதல் என்று சொல்லும் ஒரு வழக்கு தமிழில் இருக்கிறது.
ஆக சொற்கள் அறத்தை உருவாக்குகின்றன.
அறத்தை உருவாக்க நாம் பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. அறமான சொற்களைச் சொல்வதைக் கூட
பொதுமானது.
ஔவைப் பிராட்டியும் “அறம் செய விரும்பு” (ஆத்திசூடி, 1) என்று
அறத்தைச் செய்ய அறம் வாய்ந்த சொற்களால்தானே கூறுகிறார்.
*****
No comments:
Post a Comment