6 Aug 2022

எப்படி என் வரலாற்றைத் தொலைத்தேன்?

எப்படி என் வரலாற்றைத் தொலைத்தேன்?

நாங்கள் பள்ளிப் பிள்ளைகளாக இருந்த காலம்.

பழைய நோட்டுகளில் ஸ்டாம்ப் ஒட்டி, அது ஒரு விளையாட்டு. நிறைய பக்கங்களில் அதிக ஸ்டாம்புகளை ஒட்டி வைத்திருப்பவர் இந்த விளையாட்டில் வெற்றி பெற்றவர். அதற்காக நிறைய ஸ்டாம்புகளைச் சேகரித்துச் சேகரித்து ஒட்டுவோம். ஒவ்வொருவரிடமும் குறைந்த பட்சம் நான்கைந்து ஸ்டாம்பு ஒட்டிய நோட்டுகளாவது இருக்கும்.

இப்போதுள்ள குழந்தைகள் இந்த மாதிரியான விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்களோ? மாட்டார்களோ? அப்படியே ஆர்வம் காட்டினாலும் அவர்கள் ஸ்டாம்ப் சேகரிப்பது கடினம்.

இப்போது தபால்கள் குறைந்து விட்டன. வருகின்ற தபால்கள் கொஞ்சம் என்றால் பாதி கூரியரில் வருகிறது, பாதி தபாலில் வருகிறது. தபாலில் வரும் சில கடிதங்களும் ஸ்டாம்புகளுக்குப் பதிலாக முத்திரை இட்டு வருகின்றன.

இந்தக் காலத்து தலைமுறைக்கு ஸ்டாம்ப் சேகரித்து விளையாட ஒரு விளையாட்டு குறைந்து விட்டது என்று சொல்லலாம். இதனால் ஒரு விளையாட்டு அழிந்து விட்டது என்று சொல்ல முடியாது.

முந்தைய விளையாட்டுகளின் எச்சம் ஏதோ ஒரு வடிவில் தொடரத்தான் செய்கிறது. பிள்ளைகள் இப்போது ஸ்டிக்கர் ஒட்டி ஏதேதோ தயாரிக்கிறார்கள். அதைப் பார்ப்பதற்கு ஸ்டாம்ப் விளையாட்டைப் போலத்தான் இருக்கிறது.

எதற்குப் பிள்ளைகளே இந்த விளையாட்டு என்று கேட்டால், இது விளையாட்டு இல்லைப்பா மார்க் என்கிறார்கள். விளையாட்டுக்குப் பாய்ண்ட்தானே, அது என்ன மார்க் என்றால், இப்படி ஒட்டிக் கொண்டு போனால் மிஸ் முழுதாகப் பத்து மார்க் போடுவதாகச் சொல்கிறார்கள்.

இது என்னப்பா புது அதிசயமாக இருக்கிறது என்றால், இப்போது பரீட்சை அறுபது மார்க்கிற்கு என்கிறார்கள். நாற்பது மார்க்கை இப்படி ஒட்டி வெட்டித் தேற்றி விட்டால் அறுபது மார்க்கு மட்டும் பரீட்சை எழுதினால் போதும் என்கிறார்கள்.

பரவாயில்லை நம் தலைமுறை காலத்து விளையாட்டை ஆசிரியர்கள் இப்படி ஒரு வகையில் தொடர விட்டிருக்கிறார்களே என்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காகப் பிள்ளைகள் கடை கடையாக அலைந்து ஸ்டிக்கர் வாங்கி ஒட்டுகிறார்கள். பழைய புத்தகங்களின் படங்களை அங்கங்கே கிழித்து ஒட்டிக் கொண்டு போகிறார்கள்.

இப்படி பத்து மதிப்பெண்கள் கொடுப்பதன் மூலமாகக் கல்வித் துறை பழங்காலப் பழக்கம் ஒன்றை மீட்டிருப்பதாக நினைக்கிறேன்.

நாங்கள் அந்தக் காலத்தில் ஸ்டாம்ப் ஒட்டி விளையாடியதற்கு மார்க் எல்லாம் வாங்கவில்லை. முழுதாக நூறு மதிப்பெண்களுக்குதான் பரீட்சையை எழுத வேண்டியிருந்தது. இப்படி ஸ்டிக்கர், படம் ஒட்டி மதிப்பெண் வாங்கும் சமாச்சாரங்கள் அப்போது இல்லை. நாங்கள் முழுதாக நூறு மதிப்பெண்களுக்கும் பரீட்சை எழுத வேண்டியிருந்தது.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது பிள்ளைகளே உங்களுக்குக் காலம் நிறைய வழங்கியிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

பிள்ளைகளே நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லவும் தோன்றுகிறது.

நான் பிள்ளைகளிடம் அந்தக் காலத்தில் ஸ்டாம்ப் தேடி அலைந்த கதைகளை அவ்வபோது பகிர்ந்து கொள்கிறேன். அதைக் கேட்டுப் பிள்ளைகள் சிரிக்கிறார்கள். இப்படியா ஸ்டாம்புக்கு அலைவார்கள் என்ற பரிகாசம்தான் அது. அவர்கள் ஸ்டிக்கர்கள் தேடி அலைவதிலும் அப்படி ஒரு பரிகாசம் இருந்தாலும் அவர்கள் முன் நான் சிரித்ததில்லை.

பிள்ளைகள் சில நேரங்களில் நான் ஸ்டாம்ப் சேகரித்த நோட்டு ஏதேனும் ஒன்று இருக்குமா என்று கேட்கிறார்கள். இவ்வளவு ஆர்வமாக கேட்கிறார்களே, எதற்கு என்று கேட்டால் அதிலிருந்து சில ஸ்டாம்புகளை வெட்டி ஒட்டினால் பத்து மார்க் வாங்கி விடலாம் என்கிறார்கள்.

அடடா அவர்களுக்காக ஒரு ஸ்டாம்ப் நோட்டைக் கூட பத்திரப்படுத்தாமல் போய் விட்டேனே என்ற வருத்தம் இப்போது ஏற்படுகிறது.

காலம் வரலாற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நான்தான் அந்த முக்கியத்துவத்தை அறியாமல் வரலாற்றைத் தொலைத்து விட்டேன் என்று பல நேரங்களில் நினைத்துக் கொள்கிறேன்.

பால் கணக்கு எழுதும் பழைய நோட்டு என்றாலும் அதுவும் ஒரு வரலாற்றுப் பொக்கிசம்தான். அது எவ்வளவு விசயங்களைச் சொல்கிறது. அந்தக் காலத்தில் எழுதிய எழுத்து, அந்தக் காலத்துப் பாலின் விலை என்று எல்லாவற்றையும் பார்க்கும் போது அதுவும் எட்டணாவுக்குப் பால் வாங்கிய வரலாற்றையெல்லாம் நினைத்தால் வரலாறு மீண்டும் திரும்பாது என்றுதான் தோன்றுகிறது.

திரும்பாத வரலாற்றை ஒரு முறை பார்த்துக் கொள்ளவேனும் நாம் வரலாற்றைப் பத்திரப்படுத்ததான் வேண்டும் இல்லையா!

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...