6 Aug 2022

இன்றைய திரைப்படங்களைப் புரிந்து கொள்ளுதல்

இன்றைய திரைப்படங்களைப் புரிந்து கொள்ளுதல்

இன்றைய திரைப்படங்கள் பார்வையாளர்களை ஏமாற்றுகின்றன. பார்வையாளர்களும் ஏமாற்றப்படுவதை விரும்புகிறார்கள். விரும்புகிறார்கள் என்பதை விடவும் ரசிக்கிறார்கள் என்றும் சொல்லாம்.

ஒரு பயில்வான் என்றாலும் இரண்டு பேர் சேர்ந்து எதிர்த்தால் சமாளிப்பது சிரமம். நான்கு பேர் எதிர்த்தால் நிலைமை ரொம்பவே கஷ்டம். மனித பலம் அவ்வளவுதான். ஆயுதங்கள் வைத்திருப்பவர் என்றாலும் பத்து பதினைந்து பேரைச் சமாளிப்பது கடினம்.

திரை நாயகர்கள் ஒரே நேரத்தில் நூறு, இருநூறு, ஆயிரம் பேர் வரை சமாளிக்கிறார்கள். அடித்துத் துவம்சம் செய்கிறார்கள்.

ஒல்லிப் பிச்சான் நாயகர்கள் ஒரு லட்சம் பேர் வரை சமாளிக்கிறார்கள்.

இன்றைய திரைப்படங்களைப் பொதுவான ஒரு வகைபாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.

சண்டைக் காட்சிகள்தான் இன்றைய திரைப்படங்கள்.

நாயகருக்கு இருக்கு அசுர பலம்தான் இன்றைய திரைப்படங்களின் பொதுவான மையம்.

இந்தப் பொதுவான மையத்தை வைத்துக் கொண்டு அவரவர் பாணியில் மசாலாக்களைக் கிண்டித் திரையில் அள்ளிப் பூசுகின்றனர். ஒரே நெடி. அடிக்கடி அச் அச் தும்மல் போட வேண்டியிருக்கிறது.

ஒரு நாயகர் எத்தனை பேரோடு சண்டை போடுகிறார் என்பதைத் தீர்மானிப்பதுதான் இன்றைய திரைக்கதைகள்.

நாயகர்களின் சண்டை சுவாரசியத்திற்காக அரிவாள், துப்பாக்கிகள் சேர்க்கப்படுகின்றன. வாகனங்கள் நொறுக்கப்படுகின்றன. வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன.

ஓடும் ரயிலின் மீது வீடு கட்டி சண்டைப் போடுவதில் தொடங்கி ஏரோப்ளேனில் புட் போர்ட் அடித்து சண்டை போடுவது வரை பல விதமான சண்டைகள் திரையில் காட்டப்படுகின்றன.

சண்டையின் போது தலையை வெட்டி வீசுவதைச் சர்வ சாதாரணமாகச் செய்கிறார்கள். ஆடுகளைக் கோழிகளைப் பலி கொடுப்பதைப் போல பார்வையாளர்களின் ரசனைக்காக மனிதர்களைப் பலி கொடுப்பதைக் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் யோசிக்கிறார்கள்.

பார்வையாளர்களுக்குள் ஒரு வன்முறையாளர் இருக்கிறார். அவர் பல நேரங்களில் மறைந்திருக்கிறார். அதை நீங்கள் உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகம் என்று சொல்லலாம். திரையாக்கத்தைச் சார்ந்தவர்கள் அதைக் கலைப்பூச்சுக்காக சிங்கம் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு பார்வையாளருக்குள்ளும் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தை / சிங்கத்தை எழுப்பி விட முயற்சிக்கும் வேலையைத்தான் இன்றைய திரைப்படங்கள் செய்கின்றன. மனிதர்களை மீண்டும் விலங்குகளாக மாற்றுவதில் இன்றைய திரைப்படங்களுக்கு அவ்வளவு சந்தோசம்.

பாருங்கள், நம் ரசனைக்காக ஒருவர் பல பேரை அடிக்க வேண்டும், கொல்ல வேண்டும். அந்த அடிதடியைக் கொலையை எப்படியாவது நாயக சாகசத்துக்காக நியாயப்படுத்த வேண்டும். அவ்வளவுதான் இன்றைய திரைப்படங்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அதற்கு மேல் அதில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்றும் தோன்றுகிறது.

அதற்குப் பேசாமல் நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் கேமையோ, ரெஸ்ட்லிங்கையோ பார்த்து விட்டுப் போய் விடலாம். பாட்டும், டான்சும், ரொமான்சும் அவற்றில் இல்லை என்பதற்காக நாம் திரைப்படங்களைப் பார்ப்பது ரொம்ப கொடுமையானது. இந்தக் கொடுமையை நாம் இன்னும் எவ்வளவு காலம் அனுபவிக்க வேண்டுமோ?

உலக நாயகன் கமலே துப்பாக்கியை எடுத்தக் கொண்டு சுட்டுத் தள்ளும் போது பாவம் சாதாரண நாயகர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் கோடரியை எடுத்துத் தலையைத்தான் துண்டாக்குவார்கள். மனிதத் தலைகளை வேறு விதமாகப் பார்சல் செய்து கொண்டிருக்கின்றன இந்தத் திரைப்படங்கள்.

மனிதத் தலை என்றால் மனிதத் தலை மட்டுமல்ல, அதற்குள் இருக்கும் மூளையும் சேர்த்தி. அந்த மூளையை எப்படியெல்லாம் குரூராக யோசிக்க வைக்கலாம் என்பதில் வெற்றி பெறுவதில் இன்றைய திரைப்படங்கள் அக்கறை காட்டுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளாமல் இன்றைய திரைப்படங்கள் குறித்த ஒரு மதிப்பீட்டிற்கு வர முடியாது.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...