கட்டுக்கோப்பின் காலக்கணக்குகள்
ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கை
முறையில் இருப்பதால் என்னை நோக்கி ஏவப்படும் கேள்விகள் அதிகம்.
இப்படியெல்லாம் இருப்பது
உங்களைத் தண்டித்துக் கொள்வது போல ஆகாதா என்று கேட்டவர்கள் இருக்கிறார்கள்.
என்னைக் கேட்டால் கட்டுக்கோப்பில்
இல்லாமல் இருப்பது உடலையும் மனதையும் தண்டித்துக் கொள்வது போன்றதாகும்.
கட்டுக்கோப்பைத் தொடர்ந்து
மீறிக் கொண்டே போகும் போது உடலோ, மனதோ மிக மோசமாகப் பாதிப்படைந்து அதிலிருந்து தன்னைத்
தற்காத்துக் கொள்ள உங்களைக் கட்டுக்கோப்பாக இருக்கச் சொல்லி மிரட்டல் விடுக்கும். அந்த
மிரட்டல் பயங்கரமான மிரட்டலாக இருக்கும்.
அந்த மிரட்டலுக்குப் பிறகு
நீங்கள் கட்டுக்கோப்பாக மாறி விடுவீர்கள். அந்த மிரட்டலுக்குப் பிறகும் நீங்கள் மாறவில்லையெனில்
உடலோ, மனமோ அதற்கு மேல் அலட்டிக் கொள்வதில்லை. ஒரு முழு அழிவுக்குத் தயாராகி உடல் இந்த
உலகை விட்டுச் சென்று விடும் நிலையை நோக்கிச் செல்லத் தயங்காது.
எனக்கென்னவோ ஒவ்வொருவரும்
தங்களை அறியாமல் ஒரு கட்டுபாட்டில் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒருவருடைய பார்வைக்கு
இன்னொருவர் கட்டுக்கோப்பில் இல்லாதது போலத் தோன்றலாம். ஒவ்வொருவரும் தங்களுடைய கட்டுக்கோப்பில்
இன்னொருவரின் கட்டுக்கோப்பைப் பொருத்திப் பார்ப்பதால் அப்படித் தோன்றலாம்.
கட்டுக்கோப்பில்லாத மனிதர்களை
உலகில் பார்ப்பது அபூர்வம். கட்டுக்கோப்புகளைத் துறந்த மனிதர்களை அடையாளம் காட்டுவது
மிகவும் கடினம்.
எல்லாவற்றையும் துறந்து விட்டு
மலைகளில் இருக்கும் துறவிகளைக் கூட நீங்கள் கட்டுக்கோப்பில்லாதவர்கள் என்று அடையாளம்
காட்ட முடியாது. அவர்களின் மன கட்டுக்கோப்பு யாராலும் கடைபிடிக்க முடியாத அளவுக்கு
அசாத்தியமானதாக இருக்கும்.
எல்லாருக்கும் என்றேனும்
ஒரு நாள் கட்டுக்கோப்புகளைத் துறந்து விட்டு விச்ராந்தியாக அலையக் கூடிய நிலை வரலாம்.
எத்தனை நாட்கள் அப்படி அலைய முடியும்? விச்ராந்தியாக அலையும் அந்த வாழ்விலும் ஒரு கட்டுக்கோப்பு
நாட்பட நாட்பட இயல்பாக வந்து அமர்ந்து கொள்ளும்.
கட்டுக்கோப்பை மீறி மனிதர்கள்
உட்பட எந்த உயிர்களும் செயல்பட முடியாது என்பதற்கு வலுவான இயற்கைக் காரணங்கள் இருக்கின்றன.
அந்தக் காரணங்கள் இயற்கையின் விதிகளைப் போன்றவை.
நீங்கள் ஆழ்ந்து யோசித்துப்
பார்த்தால் இன்னொரு உண்மையையும் கண்டு கொள்ளலாம். கட்டுக்கோப்பாக இருக்க வேண்டியது
உயிர்களின் இயற்கையான தன்மையாக இருக்கிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் உள்ள வரம்புகள்
அந்தந்த உயிரினத்தின் கட்டுக்கோப்புகளைத் தீர்மானிக்கின்றன.
ஒருவர் கட்டுக்கோப்பு இல்லாமல்
மது அருந்ததுவதாக, சூதாடுவதாக, மனம்போன போக்கில் திரிவதாகச் சொல்லலாம். அதன் பின் விளைவுகள்
அவரைக் கட்டுக்கோப்பான நிலைக்கு மாற்றி விட்டுதான் மறுவேலை பார்க்கும். நெடுநாட்கள்
கட்டுக்கோப்பில்லாமல் போவதால் ஏற்படும் பாதிப்புகளைத்தான் சமூகமும் சமூக நிறுவனங்களும்
ஒழுக்கக்கேடு என்ற பெயரில் தவிர்க்க சொல்லி வலியுறுத்துகின்றன.
எதைத் தவிர்ப்பது கடினமாக
இருக்கிறதோ அதை அதிகமாக வலியுறுத்தும் போது அதன் மேல் வெளிப்படும் எரிச்சலும் வெறுப்பும்தான்
கட்டுக்கோப்பின் மீது கேள்விகளை எழுப்புகின்றன.
நான் யாரிடமும் எந்தக் கட்டுக்கோப்புகளையும்
வலியுறுத்துவதில்லை என்றாலும் என்னுடைய கட்டுக்கோப்பான தன்மைகள் பலவரை என்னை நோக்கி
கேள்விகளை எழுப்பச் சொல்கின்றன. அந்தக் கேள்விகளுக்கான பதில் என்னவென்றால் கடைசியாகக்
கட்டுக்கோப்புகளிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்பதுதான்.
உடலுக்கும் சரி, உடல் உறுப்புகளுக்கும்
சரி ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும் அல்லது எதிர்கொள்ளும் சக்தியில்லை. அதிகபட்சமாக
எதிர்கொள்ளும் அந்த எல்லையின் அளவுக்கு உட்பட்டு இருப்பதுதான் கட்டுக்கோப்பு எனப்படுகிறது.
அந்த எல்லைக்குள் மனிதர்கள்
உட்பட ஒவ்வொரு உயிரும் கட்டுப்பட்டுக் கட்டுக்கோப்புடன் இருந்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால்
அந்தக் கட்டுக்கோப்பில் இருத்தி வைக்கும் வேலையை ஒரு மோசமான பின்விளைவு உருவாக்கும்.
இப்போது ஒருவர் கட்டுக்கோப்பில்
இல்லை என்பதற்காக ஒருவரைக் கட்டுக்கோப்பில்லாதவர் என்று சொல்லி விட முடியாது. நாட்பட்டுக்
கட்டுக்கோப்பில் வர இருக்கும் மனிதர்களுள் அவரும் ஒருவர் என்பதைக் காலத்தால் நீங்கள்
கண்டு கொள்ளலாம்.
ஆகவேதான் ஒன்று நீங்கள் கட்டுக்கோப்புடன்
இருக்க வேண்டும் அல்லது கட்டுக்கோப்பான நிலையில் நீங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற
இரண்டு நிலைகள் உங்களுக்கு இருக்கின்றன. உங்களுக்கு விருப்பம் இருக்கிறதோ, இல்லையோ
நீங்கள் கட்டுக்கோப்பான நிலையை நோக்கி வந்துதான் ஆக வேண்டும்.
இஷ்டம் போல ஆடும் சிறு காலத்தைக்
கட்டுக்கோப்பற்ற காலம் என்று கூறுவதை விட, முழுமையான கட்டுக்கோப்பை நோக்கி நகரும் காலத்தை
உருவாக்கும் காலம் என்று அந்தக் காலத்தைச் சொல்லலாம்.
காலம் எவரையும் இஷ்டம் போல
ஆட விட்டு வேடிக்கை பார்ப்பதில்லை. ஒவ்வொருவரையும் அடக்கிக் கட்டுக்கோப்பான நிலைக்குக்
கொண்டு வருவதை அது கனக்கச்சிதமாகச் செய்து கொண்டே இருக்கிறது.
கட்டுக்கோப்பாக இருப்பதில்
இயற்கையின் காரணங்களோடு காலத்தின் கனகச்சிதமான கணக்கும் அடங்கி இருக்கிறது. ஒருவர்
நீண்ட காலம் ஆடுவதற்கு உடலோ, உடல் உறுப்புகளோ ஒத்துழைப்பதில்லை என்பது இயற்கையின் காரணமாகவும்
காலத்தின் கணக்காகவும் இருப்பது ஒவ்வொரு உயிருக்கும் பிறக்கும் போதே எழுதப்பட்டு விட்டத்
தீர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
*****
No comments:
Post a Comment