11 Aug 2022

சர்க்கரை நோயாளிகள் எதைச் சாப்பிடலாம்?

சர்க்கரை நோயாளிகள் எதைச் சாப்பிடலாம்?

சர்க்கரை நோய் உள்ள நண்பர்கள் சிலர் இதைச் சாப்பிடலாமா? அதைச் சாப்பிடலாமா? என்று உணவு பற்றிப் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள்.

அவர்கள் பீட்சா சாப்பிடலாமா? கிரில் சிக்கன் சாப்பிடலாமா? பட்டர்நான் சாப்பிடலாமா? சிக்கன் சிக்ஸ்டி பைவ் சாப்பிடலாமா? பீப் பிரியாணி சாப்பிடலாமா? இப்படி மேலும் பல கேள்விகள்.

சர்க்கரை நோயாளிகள் ஆசை ஆசையாகக் கேள்விகளை எழுப்புகிறார்கள். யாராவது அவர்களைப் பார்த்து அதைச் சாப்பிடுவதால் சர்க்கரை அதிகரித்து விடாது என்று சொல்வார்களா என்று எதிர்பார்க்கிறார்கள்.

அவர்கள் அதையெல்லாம் சாப்பிட்டால்தான் என்ன? அதனால் என்ன வந்து விடப் போகிறது?

ஒரு நோய் உணவில் கட்டுக்கோப்பான நிலையைக் கொண்டு வருகிறது. ஒரு நோய் ஓர் உயிரியிடம் நாடுவது கட்டுக்கோப்பைத்தான். ஒரு கட்டுக்கோப்பைக் கொண்டு வர முடியுமானால் நோய்களை மருந்துகள் இன்றி எதிர்கொள்ளலாம்.

மிகினும் குறையினும் நோய் செய்யும்” (குறள். 941) என்று வள்ளுவர் கூறுவதில் ஒரு கட்டுக்கோப்பான தன்மையைப் பார்க்க முடியும்.

கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையில் மிகுவதற்கோ, குறைவதற்கோ என்ன இருக்கிறது?

கட்டுக்கோப்பிற்கு உட்பட்டு சர்க்கரை நோய் வந்தவர்கள் எதை உண்டால் என்ன? அதனால் என்ன பாதிப்பு வந்து விடப் போகிறது?

அரிசி உணவை உண்பவர்களுக்குக் கோதுமை உணவை உண்பது சர்க்கரை நோய்க்கான உணவு முறையாக மருத்துவர்கள் கூறினால் கோதுமை உணவை உண்பவர்களுக்கு அரிசி உணவை உண்பதை உணவு முறையாக மருத்துவர்கள் கூறுவார்கள்.

மற்றபடி சர்க்கரை நோய் வந்தவர்கள் அரிசி உணவை உண்டாலும், கோதுமை உணவை உண்டாலும் சர்க்கரை நோயில் என்ன மாற்றம் வந்து விடப் போகிறது?

எங்கள் மாமா ஒருவருக்குச் சர்க்கரை நோய் வந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகப் போகிறது. அவரது இரவு உணவு இரண்டு சப்பாத்திகள்தான்.

இருபது வருடங்களாக இரண்டு சப்பாத்திகளைச் சாப்பிட்டும் எங்கள் மாமாவுக்குச் சர்க்கரை நோய் குறைந்தபாடாக இல்லை. அரிசி உணவை உண்பவர்களைக் கோதுமை உணவுக்கு மாறச் சொல்வதில் ஒரு சின்ன அனுகூலம் மட்டும்தான் இருக்கிறது.

எங்கள் மாமாவை எடுத்துக் கொண்டால் சப்பாத்தி என்பதால் இரண்டோடு நிறுத்திக் கொள்கிறார். எங்கள் அத்தைச் சுட்டுக் கொடுக்கும் சப்பாத்தியும் இரண்டுக்கு மேல் சாப்பிட முடியாத சுவையோடுதான் இருக்கும். அதே இட்டிலி என்றால் எப்படி இருந்தாலும் எங்கள் மாமா பத்து பதினைந்து என்று வெளுத்து வாங்குவார்.

அந்த ஒரு விசயத்தைத் தவிர அரிசி மற்றும் கோதுமை மாற்றத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.

அளவோடு சாப்பிடக் கூடிய நாவடக்கம் இருக்குமானால் இரண்டு குளோப்ஜான்களைச் சாப்பிட்டுக் கூட சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் அலுவலகம் செல்லலாம். அவர்கள் இரண்டு குளோப்ஜான்களோடு நிறுத்துவார்களா என்பதுதான் கேள்வி. எதற்குச் சிக்கல் என்றுதான் குளோப்ஜானோ வேண்டாம் என்று அவர்களை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் புரோட்டா சாப்பிடலாமா? மட்டன் சிக்கன் சாப்பிடலாமா? என்றால் கண்டிப்பாகச் சாப்பிடலாம். அவர்களின் சர்க்கரை அளவு அதிககரித்து விடாதபடிக்குக் கட்டுக்கோப்புடன் அவர்கள் சாப்பிட விரும்பும் அத்தனையையும் சாப்பிடலாம்.

கூடுதலாகச் சாப்பிட்டாலும் அன்றன்று நடைபயற்சியோ, உடற்பயிற்சியோ மேற்கோண்டு சர்க்கரையைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள முடியும் என்றால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

ஒருவர் தன்னுடைய உடல் உழைப்பையும் உணவு அளவையும் கருத்தில் கொண்டு அதன் விகிதாச்சாரத்துக்கு ஏற்றாற்போல் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். அந்த விகிதாச்சார அளவுக்குள் நிறுத்த விடாமல் நாவின் ருசி உங்களை அதிகமாக உண்ணத் தூண்டி விடும் போதுதான் நீங்கள் கொழுப்பு என்றும் சர்க்கரை என்றும் உண்ணும் உணவுளைக் கண்டு கவலை கொள்ள வேண்டும்.

இதை இன்னும் சரியாகச் சொல்வதென்றால்,

உங்கள் உடல் உழைப்பு, உங்கள் செரிமான அளவு இவற்றைக் கருத்தில் கொண்டு உங்களுக்குத் தேவையான அளவோடு நீங்கள் உண்ணும் உணவை நிறுத்திக் கொள்ளும் மனக்கட்டுபாடு உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் எந்த உணவை வேண்டுமானாலும் எந்தக் கவலையுமின்றி, கணக்கும் இன்றிச் சாப்பிடலாம்.

உணவின் மீதான உங்கள் மனக்கட்டுபாடு சுத்த பூச்சியம் என்றால் நீங்கள் கொழுப்பு, சர்க்கரை என்று பார்த்துப் பார்த்துச் சாப்பிவதுதான் நல்லது. கொழுப்பு, சர்க்கரை என்று ஒதுங்கிக் கொண்டாலும் நல்லதுதான்.

உங்கள் கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவைத் தீர்மானிப்பது உங்கள் மனமா? உங்கள் உணவா? என்பதை நீங்கள்தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனதால் கட்டுபாடாக இருக்க முடியுமானால் உணவு ஒரு பொருட்டில்லை. அஃது ஆகாது என்றால் உணவில் கட்டுபாடாக எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக் கூடாது என்று யோசித்து அதன்படி இருப்பதே நல்லது.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...