பிராப்தம்
நிறுத்துவார் நிறுத்துவார்
என்று பார்த்தால்
எங்கும் நிறுத்தாமல் சென்று
கொண்டிருக்கிறார்
மெது மெதுவாய் வேகமெடுத்து
தடதடக்கும் ஓசையில் படபடப்பின்றி
எனக்கென்ன என்பது போல
ஏகாந்தமாய்ச் செலுத்தும்
ஓட்டுநர்
சிறுநீர்க் கிடங்கு வெடித்து
விடுமோ என்று
அபாயச் சங்கு ஒலித்த நேரத்தில்
யார் செய்த புண்ணியமோ
எவர் செய்த காரியமோ
கிரகச்சார நிமித்தமோ
பேருந்தை நிறுத்தி
இட்டிலியும் தோசையும் சாம்பாரும்
சட்டினியும்
பரோட்டாவும் சப்பாத்தியும்
சால்னாவும் குருமாவும்
டீயும் காப்பியும் வடையும்
சமோசாவும்
சாப்பிட இறங்கினர் ஓட்டுநரும்
நடத்துநரும்
சாலையோரம் மூத்திரச் சுமையை
இறக்கி வைத்து வண்டியேறினால்
ஆங்காங்காங்கே நிறுத்தி நிறுத்தி
உற்சவ வாகனத்தைப் போல ஓட்டிச்
செல்லும் ஓட்டுநர்
சுமை இறக்கி சுமை ஏற்றிக்
கொள்கிறார்
எத்தனை எத்தனை வாய்ப்புகள்
கிடைத்தும்
சொட்டு மூத்திரமாவது வருமோ
இனி
*****
No comments:
Post a Comment