7 Aug 2022

அவள் ஒரு நாய் வளர்க்கிறாள்!


அவள் ஒரு நாய் வளர்க்கிறாள்!

ஆதித்யன் அப்படிப் பேசக் கூடியவர் அல்லர்.

ஆனால் அப்படிப் பேசி விட்டார்.

“வெளியே போடி நாயே!” என்று அவர் பேசியதும் சடுதியில் அவர் மனைவி பெட்டி படுக்கையைக் கூட எடுக்காமல் வெளியேறி விட்டார்.

அப்படிப் பேசியும் அவரது மனைவி வெளியேறாமல் இருக்க வேண்டும் என்றுதான் ஆதித்யன் விருப்பப்பட்டார். அவர் அப்படி விருப்பப்பட்டிருப்பது அவரது மனைவிக்குத் தெரியாமல் போய் விட்டது.

இப்போது வெந்நீர் வைத்துக் குடிக்கக் கூட முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். இணையத்தில் வெந்நீர் வைப்பது எப்படி என்று தேடித் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவு படித்தும் வெந்நீர் வைப்பது அவருக்குக் கடினமாக இருக்கிறது.

அவர் மனைவி இருந்த நாட்களில் அவர் அதை எவ்வளவு அநாயசமாகச் செய்தார் தெரியுமா? சரிதான் போ என்ற ஒரு வாட்டர் ஹீட்டர் வாங்குவது என்ற முடிவோடு அமேசானில் தொலைந்து கொண்டிருக்கிறார்.

ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளாமல் போன பிறகு மனைவியின் சாப்பாடு எந்த அளவுக்கு அவருக்கு ஒத்துப் போயிருக்கிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிகிறது.

இனியும் எத்தனை நாள்தான் சோமோட்டோவையும் ஸ்விக்கியையும் அழைத்துக் கொண்டிருப்பது?

பேண்ட் சட்டையை எடுத்துப் போடுவதில் எவ்வளவு தடுமாறுகிறார்? பட்டன்களைத் தாறுமாறாகப் போட்டுக் கொண்டு விடுகிறார். மனைவி போன நாளிலிருந்து அவரது தடுமாற்றமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

இரண்டு மூன்று முறைக்கு மேல் போய் மனைவியைப் போய் கூப்பிட்டுப் பார்த்தார். அவர் உபயோகித்த ‘நாய்’ என்ற வார்த்தை அவருக்கு எதிராகப் போய் விட்டது.

அவர் மனைவி ஒரு நாயை வளர்த்துக் கொண்டிருக்கிறார். தவிரவும் அதற்கு ஆதித்யன் என்று பெயர் சூட்டியுமிருக்கிறார்.

ஆதித்யன் புரிந்து கொண்டார் இனிமேல் அவர் தன்னுடைய முன்னாள் மனைவிதான் என்பதை.

ஒரு பெண் இல்லாமல் எத்தனை நாட்கள் தடுமாறிக் கொண்டிருக்க முடியும்?

ஆபிஸ் விட்ட அடுத்த நொடியிலிருந்து மேட்ரிமோனியல் சைட்களில் அலைந்து கொண்டிருக்கிறார். அது போகக் கல்யாண தரகர்களுக்கு பாக்கெட்டுகளை ரூபாய் நோட்டுகளால் நிரப்பிக் கொண்டிருக்கிறார். ஜோதிடப் பொருத்தம் பார்ப்பவர்களுக்கும் கட்டுக் கட்டாய்க் கொடுத்துச் சந்தோசப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதெல்லாம் எதற்காக இன்னொருத்தியைக் கட்டிக் கொண்டு அவரையும் ‘வெளியே போடி நாயே!’ என்று ஒரு நாள் தன்னையுமறியாமல் சொல்வதற்காகவா என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...