பாத்திரங்கள்
பங்ஷன் போனால்
பொண்டாட்டி ஞாபகம் வர மாட்டேன்கிறது
பங்ஷன் நடக்குமிடம் வீடா
என்ன
அங்கும் போய் பாத்திரங்களைத்
துலக்கிக் கொண்டிருக்க
வீடெனில்
அவள் சமைப்பாள்
நான் அலம்புவேன்
இங்கு எல்லாம் அவர்களே செய்து
கொள்கிறார்கள்
ஹோட்டலும் பிடித்தமாய்த்தான்
இருக்கிறது
என்ன ஒன்று சாப்பிட்ட பின்பு
பணம் கேட்கிறார்கள்
கொடுக்காவிட்டால்
பொண்டாட்டியைப் போல
பாத்திரம் அலம்பச் சொல்லி
விடுகிறார்கள்
உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா
ஒரு காலத்தில்
என் மாமனார்
ஹோட்டல் நடத்தியிருக்கக்
கூடும்
மேலும் ஓர் உண்மை தெரியுமா
பாத்திரங்கள் அலம்புதல் தவம்
பாத்திரங்கள் அலம்புதல் பேரின்பம்
அன்றன்று நடிக்கும் பாத்திரங்களை
அன்றன்றே அலம்பி வைத்திட
வேண்டும்
*****
No comments:
Post a Comment