தம் குழந்தையைத் தாமே வளர்த்தல் வேண்டும்
வாழ்க்கையில் கனவு காண்
கனவில் வாழ்க்கையைக் காணாதே
என்பார்கள்
வாழ்க்கையில் ஒரு பகுதி தூக்கம்
தூக்கத்தில் ஒரு பகுதி கனவு
ஒரு பகுதி கனவெப்படி
முழு வாழ்க்கையை முழுங்க
முடியும் சொல்
கனவு போல் கலைந்து விடுமா
வாழ்க்கை
சினிமா பார்க்க நேரமில்லாத
போது
அன்றிரவு இரண்டரை மணி நேரம்
கனவு கண்டு கொள்
மாலுக்குச் செல்லும் நேரமும்
செலவும் மிச்சம்
ரிசர்வேஷன் மெனக்கெடும் மிச்சம்
பர்கர் பாப்கார்ன் மசால்
வடையும் மிச்சம்
உன் கனவில் நீயே ஹீரோவாக
இருக்கும் சாத்தியம்
சினிமாவில் வாய்க்குமா சொல்
தவிரவும் பெயிலியர் ஆனாலும்
பிரச்சனையில்லை பார்
அடுத்த கனவும் நடிக்கலாம்
அதற்கடுத்த கனவும் நடிக்கலாம்
பைனான்ஸ் தொல்லைகளில் சிக்காது
அப்படி நடி இப்படி நடி என்ற
டைரக்டர் இம்சைகள் இல்லாது
காஸ்டியூம் கன்டினியூட்டி
சென்சார் இடையூறுகள் குறுக்கிடாது
கனவில் நிறைய நன்மைகள் இருக்கின்றன
யாருக்கு நிறைய கனவுகள் இருக்கிறதோ
அவர்கள் கனவுக்குள் நிறைய
சினிமா பார்க்கலாம்
நிறைய படங்கள் ஹீரோவாக நடிக்கலாம்
எனக்கான பிரத்யேகமான சினிமா
என் கனவு என்றால்
இந்த வாரம் சினிமா பார்த்தாயா
என்கிறார்கள்
என்ன கனவு கண்டீர்கள் என்றல்லவா
கேட்க வேண்டும்
அவர்களுக்கு ஒன்றும் சொல்ல
முடியாது விட்டு விடலாம்
கனவு காண அலுப்புப்படும்
சோம்பேறிகள் அவர்கள்
நானெல்லாம் நானென்ன கனவு
கண்டேன் என்று
மறந்து போகும் அளவுக்குக்
கனவுகள் காண்பேன்
காசா பணமா நான்கு கனவுகள்
கண்டால்
நீங்களும் ஹீரோவாக நடிக்கலாம்
என்ற நம்பிக்கை பிறக்கும்
பிறந்தாலும் நம் குழந்தையை
நாம்தான் வளர்க்க வேண்டும்
புரிந்து கொள்ளுங்கள் எடுப்பார்
கைப்பிள்ளை இல்லை
கனவு சினிமாக்கள் சினிமா
கனவுகள்
*****
No comments:
Post a Comment