ஏன் நீங்கள் பசியைச் சேமிக்கக் கூடாது?
சேமிப்பு ஓர் அருமையான பழக்கம்.
நெருக்கடியான நிலமைகளில் சேமிப்புதான் கைகொடுக்கும். நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கும்
சேமிப்பு பக்கபலமாக இருக்கும்.
பணத்தைச் சேமிக்கிறோம். செலவுகளைச்
சிக்கனப்படுத்திச் சேமிக்கிறோம். நகைக்காகச் சேமிக்கிறோம். வீட்டிற்காகச் சேமிக்கிறோம்.
விருப்பமான பொருட்களை வாங்கச் சேமிக்கிறோம்.
உங்கள் உடல் நலத்திற்காகப்
பசியையும் சேமிக்கலாம். அதெப்படி பசியைச் சேமிப்பது? சாப்பிட அமர்கிறீர்கள். உங்கள்
பசிக்கு ஐந்து இட்டிலிகளைச் சாப்பிடலாம் என்றால் நீங்கள் நான்கு இட்டிலிகளைச் சாப்பிடுங்கள்.
மீதமுள்ள ஒரு இட்டிலிக்கான பசி அங்கே சேமிக்கப்படுகிறது.
உங்கள் பசி நூறு சதவீதம்
என்றால் நீங்கள் அறுபது சதவீத பசிக்குச் சாப்பிடுவதே போதுமானது. அது முடியாது போனாலும்
எண்பது சதவீத பசிக்கு மேல் சாப்பிடாதீர்கள்.
உங்களது பசித் தேவை நூறு
சதவீதம் எனும் போது அதற்கான உணவுத் தேவை அறுபதிலிருந்து எண்பது சதவீதம் மட்டுமே.
ஒரு நாளுக்கு மூன்று வேளை
உணவு என்றால் ஒரு வாரத்துக்கு இருபத்தொரு வேளை உணவு. இதுவே அதிகபட்ச உணவுதான். இதற்கு
இடையில் சிற்றுண்டிகளை உண்பது மிக மிக அதிகபட்சமான உணவு உண்பதில் சேரும்.
உங்களால் ஒவ்வொரு முறை உணவு
உண்ணும் போதும் எண்பது சதவீத பசி அளவுக்கு உண்டு இருபது சதவீத பசி அளவைச் சேமிக்க முடிந்தால்
நல்லது. அது முடியாது போனால் வாரத்தின் இருபத்தொரு வேளை என்றிருக்கும் உணவு அளவில்
இருபது சதவீத்தைக் குறையுங்கள். அதாவது நான்கு வேளை உணவைக் குறையுங்கள். உங்களுக்குப்
பிடித்தமான நான்கு நாட்களில் ஏதேனும் ஒரு வேளை உணவை நிறுத்துங்கள்.
இந்தப் பழக்கம் மிகு உணவினால்
உண்டாகும் அனைத்து விதமான நோய்களையும் அணுகாமல் உங்களைக் காக்கும்.
உணவைக் குறைப்பது போன்ற அற்புதமான
மருத்துவ முறை வேறு எதுவும் இல்லை. மேலும் இந்த மருத்துவ முறைக்காகச் செலவு செய்வதில்லை.
மாறாக உங்கள் உணவுச் செலவை இந்த முறை சேமித்துத் தருகிறது.
*****
No comments:
Post a Comment