28 Aug 2022

இந்தக் காலத்தில் காப்பி குடிப்பது இல்லை

இந்தக் காலத்தில் காப்பி குடிப்பது இல்லை

ஒரு நேரத்தில் மனம் ஆசைப்படுவதை எல்லாம் சாப்பிடுவது மகிழ்ச்சி தருவதாக இருந்தது. அப்படி சாப்பிட்டுச் சாப்பிட்டு இப்போது அளவோடு சாப்பிட்டால் போதும் என்ற முடிவுக்கு மனம் வந்து விட்டது.

ஒட்டலுக்குள் ஒற்றை ஆளாய் அமர்ந்து கொண்டு இரண்டு காப்பி சொல்லிய போது சர்வர் ஆச்சரியமாய்ப் பார்த்ததை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

வீட்டில் லோட்டா நிறைய, சொம்பு நிறைய காப்பி குடித்த எனக்கு ஓட்டலில் காப்பி கொடுப்பதற்கென்றே அளந்தெடுத்து வைத்த டம்பளரும் டபராவும் உவப்பானதாக இருந்ததில்லை. அதற்காக ஓட்டல் டம்ப்ளரையும் டபராவையும் லோட்டா அளவுக்கோ சொம்பு அளவுக்கோ மீள் உருவாக்கம் செய்ய முடியாது என்பதால் எனக்கு எப்போது ஓட்டல் சென்றாலும் இரண்டு காப்பி குடிக்கத் தோன்றும்.

இரண்டு என்பது கூட ஒருவித நாகரிகம் கருதித்தான். உண்மையில் ஓட்டல் காப்பி என்றால் எனக்கு பத்து காப்பி வரை குடிக்கத் தோன்றும். ஒற்றை ஆளாய் உட்கார்ந்து கொண்டு அப்படி பத்து காப்பி வாங்கிக் குடித்தால் அதை பார்ப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று கூச்ச உணர்வால் இரண்டோடு நிறுத்திக் கொள்வேன்.

இரண்டு காப்பி வாங்கிக் குடிப்பதை வேடிக்கையாகப் பார்ப்பார்கள் எனும் போது பத்து குடித்தால் இது இன்னும் ரொம்ப வேடிக்கையாக இருக்கும். அது போன்ற நேரங்களில் எனக்குப் பத்துத் தலை ராவணனின் நினைவு வந்து விடும். அது போன்று பத்து தலைகள் இருந்தால் தைரியமாக பத்து காப்பிகள் கூச்சப்படாமல் வாங்கிக் குடிக்கலாம். அப்போது பத்து காப்பிகள் வாங்கிக் குடிப்பதை வித்தியாசமாகப் பார்க்க மாட்டார்கள். பத்துத் தலைகள் இருப்பதை வித்தியாசமாகப் பார்ப்பார்கள்.

பத்துத் தலைகளை வித்தியாசமாகப் பார்த்தாலும் பரவாயில்லை, பத்துத் தலைகளோடு போய் பத்து காப்பிகள் குடிக்க எனக்கு ஆசைதான்.

காப்பி மீது அலாதியான பிரியத்தோடு அப்படி இருந்த நான் இப்போது ரொம்பவே மாறி விட்டேன். காப்பி மட்டுமன்றி டீ குடிப்பதையும் நிறுத்தி பத்தாண்டுகளுக்கு மேல் ஓடி விட்டன.

ஒரு நேரத்தில் இரண்டு காப்பிக்குக் குறையாமல் குடித்த நான் திடுதிப்பென எப்படி நிறுத்த முடியும் என்று நீங்கள் கேட்கலாம். செயின் ஸ்மோக்கர் புகைப்பதை நிறுத்துவது போல இது ஓர் ஆச்சரியம்தான். காப்பி குடிப்பவர்களும் கிட்டதட்ட செயின் ஸ்மோக்கர் நிலையில் இருப்பவர்கள்தான். காப்பி குடிக்காவிட்டால் அவர்களுக்குக் காரியம் ஓடாது. மண்டை வெடித்து விடுமோ, பிரளயம் நேர்ந்து விடுமோ என்ற நினைப்பு கூட வந்து விடும்.

சாப்பாட்டு ருசியின் மேல் இருக்கும் மேல் ஆசையில் நான் காப்பி குடிப்பதை நிறுத்தினேன். இதன் தர்க்கம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று போலத் தோன்றலாம். என் மனம் அப்படி ஒரு தர்க்க்ததை ஏன் கற்பித்துக் கொண்டது என்பதற்கு என்னால் சரியான காரணத்தைத் தேடிச் சொல்ல முடியாமல் போகலாம். உத்தேசமாக ஒரு வாரியாகச் சொல்கிறேன்.

சாப்பாட்டின் ருசி சாப்பாட்டில் இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். எல்லா நேரங்களிலும் ருசியான சாப்பாடு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கொடுக்க முடியாது. ருசியாகச் சமைப்பவரும் எல்லா நேரங்களிலும ருசியாகச் சமைப்பார் என்று சொல்ல முடியாது.

சாப்பாட்டின் ருசி நிரந்தரமாக எதில் இருக்கிறது என்று தேட ஆரம்பித்த பிறகு ருசியில்லாத சாப்பாடும் எப்போது ருசிக்கும் என்று பல மாதங்கள் தொடர் யோசனையில் இருந்தேன்.

ஒரு நாள் எனக்கான விடை கிடைத்தது. ஒரு வெளியூர் பயணம்தான் அந்த விடைக்கான அனுபவத்தைத் தந்தது.

அந்தத் தினத்தில் நண்பகல் பனிரெண்டு மணிக்கு நான் ஏறிய பேருந்து நடக்கத் தெரியாத தவழ்ந்து செல்லும் குழந்தையைப் போல உருண்டு உருண்டு போய்க் கொண்டிருந்தததில் பேருந்தை விட்டு இறங்கிய போது மணி இரண்டரை ஆகியிருந்தது.

அகோரப் பசியில் இருந்த நான் பேருந்தை விட்டு இறங்கியதும் எதிரில் இருந்த ஓட்டலுக்கு ஓடிச் சென்றேன். அந்த ஓட்டல் சாப்பாட்டை நான் ருசித்துச் சாப்பிட்டேன். எனக்கு அந்தச் சாப்பாடு ருசியாகத்தான் இருந்தது. சாப்பிட்டு வெளியில் வந்த பலரும் சாப்பாட்டில் ருசியில்லை, சாப்பாடும் சரியில்லை என்று பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சோடு பேச்சாக அந்த ஓட்டலைச் சகட்டு மேனிக்குத் திட்டவும் தொடங்கி விட்டார்கள்.

யாருக்குமே ருசிக்காத உணவு எனக்கு மட்டும் எப்படி ருசியோடு இருந்திருக்க முடியும்? பசிதான் அந்த ருசியைத் தந்திருக்கிறது என்பது புரிந்தது.

மதிய உணவுக்கான நேரம் நெருங்க நெருங்க பேருந்தில் இருந்த பலரும் தாங்கள் வாங்கி வைத்திருந்த நொறுக்குத் தீனிகளைத் தின்று கொண்டிருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக நொறுக்குத் தீனிகள் ஏதும் வாங்காமல் பேருந்தில் இருந்த எனக்கு பசியோடு பயணித்துப் பசியோடு இறங்கியோடி அந்த ஓட்டலில் சாப்பிட வேண்டிய நிலைமை. பசியோடு உண்டால் ருசிக்காததும் ருசிக்கும் என்ற அந்த அனுபவம்தான் என்னை மாற்றிப் போட்டுக் கொள்ள காரணமாக இருந்தது.

பசியோடு இருந்தால் எப்பேர்பட்ட உணவும் ருசிக்கும் என்று தெரிந்த பின் மூன்று வேளை சாப்பிட்டாலும் பசியினால் ருசிக்கும் உணவைச் சாப்பிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

சாப்பிடும் போது எனக்குப் பசிக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும். சாப்பாட்டுக்கு இடையில் உள்ள நேரங்களை நொறுக்குத் தீனியால் நிரப்பக் கூடாது என்பது எனக்குப் புரிந்தது.

அன்றிலிருந்து மூன்று வேளை உணவைத் தவிர இடையில் சிற்றுண்டியோ, டீயோ, காப்பியோ எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு என்னை அறியாமல் என் மனம் வந்து விட்டது.

மூன்று வேளை உணவுக்கு இடையில் எடுக்கும் எந்த உணவும் அந்த நேரத்துப் பசியைப் போக்கலாம். நாவிற்கு இணையற்ற ருசியைத் தரலாம். ஆனால் அது மூன்று வேளை உணவை ருசியில்லாமல் ஆக்கி விடுகிறது என்ற முடிவுதான் என்னை டீ, காப்பி அணுக விடாமல் செய்து விட்டது. 

எனக்கு காலை – மதியம் – இரவு என்று மூன்று வேளை சாப்பிடும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் அதாவது அந்த உணவு ருசியில்லாமல் சமைக்கப்பட்டிருந்தாலும் எனக்கு ருசியாக இருக்க வேண்டும் என்ற பிரயாசையில் மூன்று வேளை உணவைத் தவிர இடையில் வேறு எதையும் சாப்பிடும் பழக்கத்தை அன்றிலிருந்து விட்டு விட்டேன்.

இப்படித்தான் நான் டீ குடிப்பதும், காப்பி குடிப்பதும், சிற்றுண்டி கொரிப்பதும் நின்று போனது. எப்போதாவது சில வற்புறுத்தல்களில் சில நேரங்களில் டீயோ, சிற்றுண்டியோ சாப்பிடும் நிலை வந்தாலும் என்னை வற்புறுத்தாமல், எனக்கு டீயோ, காப்பியோ, சிற்றுண்டியோ தராத உறவினர்களையும் நண்பர்களையும்தான் நான் அதிகம் நாடிச் செல்கிறேன்.

வீட்டிற்கு வந்தால் எதாவது சாப்பிட்டு விட்டுதான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதை அண்மை காலமாக நான் தவிர்த்துக் கொண்டு வருகிறேன்.

தன் வீட்டிற்கு வந்தும் என்னைப் பசியோடு அணுப்பும் நண்பர்களும் உறவினர்களும் என் பாக்கியத்திற்கு உரியவர்கள்.

நண்பர்கள், உறவினர்கள் வீடு என்றல்ல, யார் வீட்டுக்கும் நான் வரத் தயாராக இருக்கிறேன், ஆனால்…

உங்கள் வீட்டுக்கு வரும் போது என் வயிற்றுக்கு எதுவும் கொடுக்காமல் இருந்தால் மட்டுமே நான் வரத் தயாராக இருக்கிறேன் என்பதை மிகுந்த பணிவுடனும் பேரன்புடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் விருந்தோம்பலை விடவும் எனக்கு அடுத்த வேளை உணவுக்குப் பசிக்க வேண்டும் என்பது முக்கியமாக இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...