நடப்பதை மறந்து வாகனங்களில் செல்லும் பிள்ளைகள்
இன்னும் சிறிது காலத்திற்குள்
‘நடத்தல்’ என்பது நமக்கு மறந்து விடும் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு வாகனங்கள்
துணையோடு நாம் கால்கள் என்ற ஒன்று இருப்பதை மறந்தவர்கள் போல் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
சாலையைப் பார்த்தால்
99.9 சதவீத இடங்களை வாகனங்கள் அடைத்துக் கொண்டு இயங்குகின்றன. நடந்து செல்பவரையோ, சைக்கிளில்
செல்பவரையோ சாலையில் காண்பது அரிதாக இருக்கிறது.
பள்ளி விடும் நேரங்களில்
சாலையைப் பார்த்தால் சாலை முழுவதும் சீருடை அணிந்த சிறுவர்களும் சிறுமியர்களும் நிறைந்திருக்கின்றனர்.
அவர்களை அழைத்துச் செல்ல ஆட்டோக்களும் வேன்களும் டூவீலர்களும் பஸ்களும் கார்களும் நிறைந்திருக்கின்றன.
அருகில் இருக்கும் பள்ளிக்கூடங்களில்
சேர்த்தால் பிள்ளைகள் நடந்து சென்று படிக்க வேண்டியிருக்கும் என்பதற்காக அவர்கள் வாகனங்களில்
சென்று படிக்கும் தொலைவுக்கு உள்ள பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்திருக்கிறார்களா என்று
சந்தேகம் உண்டாகும் அளவுக்கு நீங்கள் பள்ளி வாகனங்களைச் சாலைகளில் பார்க்கலாம்.
பள்ளி விடும் நேரத்தில் மிகப்
பெரிய போக்குவரத்து நெருக்கடியைச் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது. இவ்வளவு குழந்தைகள்
ஒரு பள்ளியில் படிப்பதைப் பார்க்கும் போது அங்காங்கே பள்ளிக்கூடங்கள் இல்லையா என்ற
சந்தேகம் உங்களுக்கு வந்து விடும்.
பள்ளிக்கூடங்கள் ஊருக்கு
ஊர் இருக்கின்றன. பெற்றோர்களின் தேர்வும் மாணவர்களின் விருப்பமும் சில குறிப்பிட்ட
பள்ளிகளை நோக்கியே இருக்கின்றன. அந்த நோக்கமே அவர்களைக் குறிப்பிட்ட சில பள்ளிகளில்
கொண்டு போய்க் குவிக்கின்றன.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்காகப்
பேருந்துகளே வராத கிராமங்களில் கூட பேருந்துகள் வருகின்றன. பள்ளிக்கூடத்துக்குக் குழந்தைகளை
ஏற்றிச் செல்லும் பேருந்துகளை நீங்கள் எந்த ஒரு கிராமத்திலும் பார்க்க முடியும்.
அனைத்து கிராமங்களுக்கும்
அரசாங்கத்தால் பேருந்துகள் விட முடியவில்லையே என்று குறையைப் பல பள்ளிக்கூடங்கள் போக்கியிருக்கின்றன.
ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் புகுந்து செல்லும் பள்ளி வாகனங்களால் அந்தந்த ஊர் பள்ளிகள்
காற்றி வாங்கிக் கொண்டிருக்கின்றன.
உண்மையில் பெற்றோர்கள் பிள்ளைகளைப்
பணம் கட்டித்தான் சேர்க்க விரும்புகிறார்களா? அவர்கள் பள்ளயின் நிர்வாக அமைப்புகளைப்
பார்க்கிறார்கள். தங்களுடைய குழந்தைகள் சில குறைந்தபட்ச அறிவை, ஒழுக்கத்தைப் பெற்றிருக்க
வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது அவர்களுக்குப் பணம் கட்டிச் சேர்க்கும் பள்ளிகளில்தான்
கிடைக்கின்றன என்பது போன்று தோன்றுகிறது.
நல்ல நிர்வாகத்தோடு செயல்படும்
இலவசப் பள்ளிக்கூடங்களையும் அவர்கள் நாடுகிறார்கள். அந்தப் பள்ளிகளில் மாணவர்கள் கொள்ளாத
அளவுக்குக் கூட்டமாகப் பிள்ளைகளைக் கொண்டு வந்து சேர்க்கின்றனர். அது போன்ற பள்ளிக்கூடங்களுக்குப்
பிள்ளைகளை அனுப்ப தாங்களே வாகன வசதிகளையும் பெற்றோர்கள் ஏற்பாடு செய்து கொள்கின்றனர்.
சரியான நிர்வாகத்தோடு சரியான
தரநிலையோடும் செயல்படும் நிறுவனங்களையே மக்கள் விரும்புகின்றனர். இலவசமாகவே கிடைப்பதாயினும்
தரமும் நிர்வாக ஒழுங்கும் மக்களின் பார்வையில் முக்கியம். தரத்தையும் ஒழுங்கையும் சரி
செய்தால் பிள்ளைகள் வாகனங்களில் பல கிலோ மீட்டர்கள் சென்று படிக்க வேண்டிய அவசியமும்
இருக்காது. இவ்வளவு பள்ளி வாகனங்கள் சாலையில் இயங்க வேண்டிய தேவையும் இருக்காது. பள்ளி
பிள்ளைகளால் அநாவசிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் இடர்பாடும் இருக்காது.
தரமற்ற நிலையும் ஒழுங்கற்ற
சூழ்நிலையும் நம்மை நெருக்கடியில்தான் தள்ளும் என்பதற்கு பள்ளிகளால் ஏற்படும் போக்குவரத்து
நெருக்கடியே நல்ல உதாரணம் என்று நினைக்கிறேன்.
*****
No comments:
Post a Comment