பிரேக் அப்பைப் பிரேக் அப் செய்ய சில வழிமுறைகள்
நாம் அளவுக்கதிகமாகவே பிரிகிறோம்
என்று நினைக்கிறேன். இணைந்திருப்பதில் ஒரு சலிப்பு வந்து விடுகிறது. அவ்வளவு நாள் இணைந்திருந்த
சலிப்புக்குப் பிரிவு ஒரு புதுமையாகி விடுகிறது.
பிரிவுகள் எல்லா நிலையிலும்
நிகழ்கின்றன. சில நாள் வருத்தம், சில மணி நேரம் அழுகை என்று முடிந்து விடும் பிரிதல்கள்
இருக்கின்றன. ஆண் – பெண் பிரிதல்களும் இப்படிப்பட்ட வகையில் வருவனத்தான் என்றாலும்
அதன் தாக்கங்கள் வித்தியாசமானவை.
நவீன வாழ்க்கை பிரிவை ‘பிரேக்
அப்’ என்கிறது. அது பொதுவாக ஆண் – பெண் பிரிவைத்தான் அப்படிக் குறிக்கிறது. இது ஏதோ
புதிது போல அந்தச் சொல்லாடல் தனக்குள்ளே ஒரு மமதையைக் கொண்டிருக்கிறது என்றாலும் இதையெல்லாம்
தமிழ்ச் சமூகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என்று
திணையொழுக்கமாகவே பிட்டுப் பிட்டுப் போட்டிருக்கிறது.
ஒரு பிரிவுக்கு எது காரணமாகிறது
என்பதற்குச் சங்க இலக்கியம் சொல்வது பொருளையும் பரத்தமையையும்தான். இந்தக் காரணம் நவீன
பிரேக் அப் வரை தொடர்வது சங்க இலக்கியம் சொல்லிய சாராம்சத்தில் எந்த வித மாற்றமுமில்லை
என்பதைக் காட்டுகிறது.
ஓர் ஈகோ, ஒரு சண்டை, ஓர்
அல்ப காரணம் – இப்படி ஏதோ ஒன்றும் நவீன பிரேக் அப்புக்குக் காரணமாகலாம். அல்லது காரணம்
இல்லாமல் கூட ஒரு பிரேக் அப் நிகழலாம் என்பதும் ஒரு காரணம் என்பதை விட மனம் ஒரு பிரதான
காரணம்.
ஒவ்வொரு மனமும் ஓர் இணக்கத்தை,
ஓர் இசைவை எப்போதும் எதிர்பார்க்கிறது. அதில் எப்போது குழைவு ஏற்படுகிறதோ அந்தக் குழைவை
மனம் சமாளிக்கப் பார்க்கிறது. எப்போது அந்த எல்லை சமாளிக்க முடியாத அளவுக்குப் போகிறதோ
அடுத்த கட்டம் பிரேக் அப்தான்.
தற்போதைய பிரேக் அப்களில்
ஒரு சுதந்திரம் இருக்கிறது. விருப்பத்தை நிலைநாட்டும் உரிமை இருக்கிறது. சுதந்திரம்,
விருப்பம் ஆகிய இரண்டையும் குடும்பம், சமூகம் என்ற இரட்டை இழையில் அந்நாளைய சமூகம்
கட்டிப் போட்டு இருந்தது. பிரிவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தாலும் அந்த இரண்டையும்
காட்டியே அப்போது அது தடுக்கப்பட்டிருந்தது.
குடும்பமும் சமூகமும் இப்போதும்
பிரிதலுக்கு எதிராகத்தான் இருக்கிறது. குறிப்பாக கல்யாணத்திற்குப் பிந்தைய பிரிவு சாதாரணமானதல்ல.
அப்போது குடும்பமும் சமூகமும் தன்னுடைய இறுக்கமான பிடியைச் செலுத்தவே செய்கிறது. தன்னுடைய
இறுக்கத்தையும் பிடிமானத்தையும் தளர்த்த முடியாத அளவுக்கு அது பஞ்சாயத்து, போலீஸ் ஸ்டேசன்,
கோர்ட் போன்ற பிடிமானங்களை அது வைத்திருக்கிறது.
அந்நாளைய சமூகத்தில் கல்யாணத்திற்கு
முன்பான உறவு பெரும்பான்மையாக நிகழ்ந்ததில்லை. அதனால் அதற்கு கல்யாணத்திற்கு முந்தைய
பிரேக் அப் குறித்த பெரிய விதிகள், கட்டுபாடுகள் எதுவும் தேவையில்லாமல் இருந்தது. மேலும்
கல்யாணத்திற்கு முன்பான உறவை அது ஏற்றதும் இல்லை.
கல்யாணத்திற்குப் பிந்தைய
பிரேக் அப்கள் பிடிமானத்துக்கு உட்பட்டவை. பிடிமானத்துக்கு உட்பட்ட நிலையிலும் பஞ்சாயத்து,
போலீஸ் ஸ்டேசன், கோர்ட் போன்றன இருந்தாலும் பிரேக் அப் நிகழ்கின்றன என்று நீங்கள் சொல்லலாம்.
அந்த பிரேக் அப்கள் சாதாரணப்பட்டவை அல்ல. அதற்குள் ஏகப்பட்ட மன உளைச்சல்கள், சட்ட ரீதியான
தாக்கீதுகள் நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம் முடித்து விட்டுதான் நீங்கள் பிரேக்
அப் சொல்ல முடியும்.
கல்யாணத்திற்குப் பின்பு
பிரேக் அப் ஆவதென்றால் அவ்வளவு சடங்குகளை நீங்கள் முடித்தாக வேண்டும். அதற்கு யோசித்துக்
கொண்டு பிரேக் அப்பிற்குப் பிரேக் அப் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
உங்களால் ஒருவரைப் புரிந்து
கொள்ள முடியாமல், உங்களால் ஒருவரை விரும்ப முடியாமல் போய் விட்டால் அங்கே பிரேக் அப்
தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.
உங்களுடைய இயல்பும் விருப்பங்களும்
சுதந்திரங்களும் இன்னொருவரைப் புரிந்து கொள்ள விடாமல் தடுத்தால் நீங்கள் அவரை விட்டு
விலகி விடுவதுதான் உங்களுக்கும் நல்லது, அவருக்கும் நல்லது.
உணர்ச்சிமயமாக ஒருவரை விரும்புவதற்கு
முன்பாக உங்கள் இயல்பும் அவரது இயல்பும் ஒத்துப் போகிறதா? உங்கள் விருப்பங்களும் அவரது
விருப்பங்களும் முட்டி மோதிக் கொள்ளாமல் இருக்கிறதா? உங்கள் சுதந்திரமும் அவரது சுதந்திரமும்
ஒருவருக்கொருவர் பாதிக்கப்படாமல் இருக்கிறதா? என்பன போன்ற இவற்றை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்கள் பிரேக் அப்புக்கு
ஓர் அல்ப காரணம் போதுமானதாக இருக்கலாம். உங்களுக்குப் பிரேக் அப் நிகழாமல் இருப்பதற்கு
நீங்கள் மேற்கண்ட காரணங்கள் குறித்து யோசித்தாக வேண்டும்.
*****
No comments:
Post a Comment