16 Aug 2022

நம்பிக்கையை வைத்துப் பிழைப்பவர்கள்

நம்பிக்கையை வைத்துப் பிழைப்பவர்கள்

நம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது என்கிறார்கள்

அதென்ன புதிதாக நம்பிக்கையோ

உயிர் இல்லாமல்தானே வாழ முடியாது

காற்றைக் கிழி

அவமானங்களை அழி

மலையை உடை

சிகரத்தை அடை

கடலைத் தகர்

உலகைத் தூக்கு

வானத்தை அள

தடைகள் பல

மேகத்தைத் தாண்டிக் குதி

வெற்றிதான் விதி

என்று எவ்வளவோ சொல்கிறார்கள்

கழைக்கூத்தாடி வித்தைகள் போல்

மேஜிக் செய்பவரின் ரகசியங்கள் போல்

மந்திரவாதியின் தந்திரங்கள் போல்

அவர்கள் இதில் எதைச் செய்தார்களோ

பிழைப்பிருந்தால் பிழைத்திருந்தால் வாழப் போகிறோம்

காற்று பாட்டுக்கு காற்று

மலை பாட்டுக்கு மலை

கடல் பாட்டுக்கு கடல்

சிகரம் பாட்டுக்கு சிகரம்

அதது பாட்டுக்கு அதது

இருந்து விட்டுப் போகிறது

நாம் பாட்டுக்கு நாம்

இருந்து விட்டுப் போகிறோம்

உசுப்பி விட்டு உயிர்க்கொலை புரியாமல் இருந்தால் சந்தோஷம்

உங்கள் நம்பிக்கைகளை நீங்களே எடுத்துச் செல்லுங்கள்

ஒருவர் நம்பிக்கையை வைத்து இன்னொருவர் என்ன செய்ய முடியும்

அவரவர் தேவைக்கு அவரவர் அறிவும் உணர்வும் இயங்க

அவரவரிடமிருந்து பெற்றுக் கொள்ள ஆயிரம் இருக்க

அவரிடம் இருப்பதைப் பிடுங்கி அன்றோ

அவரிடமே கொடுக்கிறீர்கள் நீங்கள்

*****

No comments:

Post a Comment