தி லெஜன்ட் – ஒரு புதிய எம்.ஜி.ஆர். வரவு
தி லெஜன்ட் திரைப்படத்தை
வெறித்தனம் பிடித்த ரசிகர்களின் மத்தியில் பார்த்தேன். ஒரு புதிய எம்.ஜி.ஆர். பிறந்த
விட்டார் என்பதைச் சரவணன் அண்ணாச்சியைப் பார்த்ததும் புரிந்து கொண்டேன்.
ஜேடி – ஜெர்ரி இயக்கியிருக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். யாரையும் ஏமாற்றவில்லை. யாரையும் ஏமாற்றி விடக்
கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் சரவணன் அண்ணாச்சியே படத்தையும் தயாரித்திருக்கிறார்.
சரவணன் அண்ணாச்சியின் நடிப்பைப்
பார்க்கையில் அரவது வேகம், துடிப்பு எல்லாம் ரோபோட்டை நினைவுபடுத்துவது போல இருக்கிறது.
சண்டைக் காட்சிகளில் அனிமேஷன் செய்யப்பட்ட உருவமோ என நினைக்க வைத்து விடுகிறார்.
மிகவும் ஒல்லியாகவும் கொஞ்சம்
கட்டையாகவும் இருக்கிறார் என்று தோன்றியது. உயரத்தைக் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்திருக்கலாமோ
என்றும் நினைக்கத் தோன்றியது. அவர் தனுஷ் போல வரவும் வாய்ப்பிருப்பதால் அவசரப்பட்டு
விமர்சனம் செய்து விட முடியாது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.
படத்தில் சரவணன் அண்ணாச்சி
ரொமான்ஸ் செய்கிறார். சண்டை போடுகிறார். சர்க்கரை வியாதிக்காக மருந்து கண்டுபிடிக்கும்
முயற்சியில் ஈடுபடுகிறார். கணையத்தில் இருக்கும் ஆல்பா செல்களை பீட்டால் செல்களாக மாற்றி
விட்டால் விசயம் முடிந்து விட்டது என்று மருந்தும் கண்டுபிடித்தும் விடுகிறார். அந்த
மருந்துக்கு பார்முலா – ஜெ என்று பெயரும் வைக்கிறார். அது ஒரு குறியீடு என்று நினைக்கிறேன்.
எம்.ஜி.ஆர். படப் பாணி என்பதால் ஜெயலலிதாவைக் குறியீடாகக் காட்டும் வகையில் பார்முலா
– ஜெ என வைத்திருப்பாரோ என்னவோ.
சர்க்கரை நோய்க்கு மருந்து
கண்டுபிடிக்கும் சரவணன் அண்ணாச்சியை மருந்து மாஃபியா கும்பல்கள் வைத்துச் செய்கிறார்கள்.
சரவணன் அண்ணாச்சியும் அலுக்காமல் சலிக்காமல் அவர்கள் அனைவர்களோடும் சண்டை போட்டு வெளுத்து
வாங்குகிறார். இப்படி ஒரு விஞ்ஞானி விஞ்ஞானியாகவும் ஸ்டன்ட் மாஸ்டராகவும் இருப்பது
அபூர்வம்தான். அந்த அபூர்வம்தான் அவரை லெஜன்ட் ஆக மாற்றுகிறது.
படத்தின் முடிவில் சரவணன்
அண்ணாச்சியைச் சுற்றியிருக்கும் அனைவரும் வில்லன்களாகி விடுகிறார்கள், பார்வையாளர்களாகிய
நம்மைத் தவிர. கடைசியில் அவர் மட்டும் நல்லவராக நீடிக்கிறார்.
எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும்
வாலிபன் போன்ற ஒரு படம்தான். அதை உல்டா அடித்து வாலிபன் சுற்றும் விஞ்ஞானம் என்பதாக
மாற்றியிருக்கிறார்கள். ஒரு விஞ்ஞானி என்பதால் படத்தில் அதிகம் உணர்ச்சிகளை அவர் தன்
முகத்தில் காட்டவில்லை என்று நினைக்கிறேன். கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் ‘நான் சயின்டிஸ்ட்
இல்லைடா, அப்பாடா’ என்று கொஞ்சம் உணர்ச்சியைக் காட்ட இயக்குநர் கொஞ்சம் இடம் வழங்கியிருக்கிறார்.
சரவணன் அண்ணாச்சியின் தி
லெஜன்ட் பட முயற்சி ஒரு நல்ல துவக்கம். அடுத்து லலிதா நகைக்கடை உரிமையாளர், போத்தீஸ்
துணிக்கடை உரிமையாளர் ரமேஷ் போன்றோர் நடிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
அரசியலிலும் பல எம்.ஜி.ஆர்கள்
உருவாக வாய்ப்பிருக்கிறது.
தமிழ் சினிமாவுக்கு நல்ல
எதிர்காலம் இருக்கிறது.
*****
No comments:
Post a Comment