1 Aug 2022

சக்கரங்களாகி விட்ட கால்கள்

சக்கரங்களாகி விட்ட கால்கள்

நான் படித்த பள்ளியை மகளுக்கு அழைத்துச் சென்று காட்டினேன். நாங்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அந்தப் பள்ளிக்கு சென்றிருந்தோம்.

நான் படித்த போது வீட்டிலிருந்து நடந்து வந்துப் படித்ததை மகளிடம் சொன்னேன்.

“எப்படிப்பா இவ்வளவு தூரம் நடந்து வந்து படிச்சே?” என்று மகள் ஆச்சரியப்பட்டாள். அவள் அருகில் இருக்கும் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்திலோ, மகிழ்வுந்திலோ செல்லும் நிலையில் இருக்கிறாள். அவளுக்கு நடத்தல் ஓர் ஆச்சரியம்தான்.

நடந்து பள்ளிக்குச் செல்வதோ, கடைக்கு நடந்து செல்வதோ, உறவினர்களின் வீடுகளுக்கு நடந்து செல்வதோ அவளுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வாகனங்களும் வருவாயும் பெருகிய காலகட்டத்தில் அவள் பிறந்ததால் நடந்து செல்வதற்கான வாய்ப்புகள் அவளுக்குக் குறைந்து விட்டன.

அரை கிலோ மீட்டர் இருக்கும் கடைக்கும், அடுத்தத் தெருவில் இருக்கும் உறவினர் வீடுகளுக்கும் செல்ல அவளுக்கு ஆட்டோவோ, இரு சக்கர வாகனமோ தேவைப்படுகிறது. நடத்தல் என்பது அவளைப் பொருத்த வரையில் வீட்டுக்குள் நடப்பதோ, பள்ளி வளாகத்திற்குள் நடப்பதோ என்பதாக இருக்கிறது.

நான் என்னுடன் படித்த அத்தனை பேரும் அப்போது நடந்து சென்றுதான் படித்தோம் என்று மகளிடம் சொன்னேன். அவ்வளவு தூரமெல்லாம் நடந்து செல்ல முடியுமா என்பது அவளுக்கு அப்போதும் ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு தூரம் நடந்து சென்றால் கால்கள் வலிக்காதா என்றாள் அவள்.

எங்களுக்குக் கால்கள் வலித்ததாக ஞாபகம் இல்லை. வீட்டிலிருந்து பள்ளிக்கும் பள்ளியிலிருந்து வீட்டுக்கும் நடையும் ஓட்டமாக ஓடிய நாட்கள் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தன.

நாங்கள் படித்த காலங்களில் இரு சக்கர வாகனம் வைத்திருந்த ஆசிரியர்கள் அரிதாக இருந்தனர். சைக்கிளில் வரும் ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தனர். நடந்து வரும் ஆசிரியர்கள் அநேகம் இருந்தனர்.

இப்போது பள்ளிக் குழந்தைகளே இரு சக்கர வாகனத்தில் வருகின்றனர். மகிழ்வுந்தில் வரும் மாணவர்களும் இருக்கிறார்கள். அவற்றை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் வேண்டும் என்பதும் அவர்களுக்கு அந்த வயதில் ஓட்டுநர் உரிமம் வழங்க மாட்டார்கள் என்பதும் அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது, அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஆனாலும் அவர்கள் அதில்தான் வருகிறார்கள்.

நமது கால்கள் சக்கரங்களாக மாறி விட்டன. நமது கால்களுக்குப் பதிலாக நாம் இரு சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்துகிறோம். நான்கு சக்கர மகிழ்வுந்தைப் பயன்படுத்தும் போக்கும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டும் இல்லையென்றாலும் ஆட்டோவோ, பேருந்தோ தங்கள் சக்கரங்களால் நம் கால்களின் இயக்கத்தைச் செய்து கொண்டிருக்கின்றன. நம் பிள்ளைகளையும் அப்படியே பழக்கிக் கொண்டிருக்கிறோம்

நமக்குப் பெட்ரோல் கிடைக்கும் வரை, மின்சார வாகனங்களில் மின்சாரம் தீரும் வரை நாம் சக்கரங்களால் இயங்கிக் கொண்டிருப்போம் என்ற முடிவுக்கு நாம் வந்து விட்டோம். நம் பிள்ளைகளையும் அந்த முடிவை நோக்கியே செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

*****

No comments:

Post a Comment

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் மற்றும் சமரசமற்ற ஒன்று

என்னைப் போலிருக்க முயற்சிக்காத நான் அவர்கள் பிரமாண்டவர்களாக ஆனார்கள் தனித்துவம் மிக்கவர்கள் என உலகம் கொண்டாடியது அவர்கள் முன் நான் சாத...