9 Jul 2022

மனசுக்குச் சர்வீஸ் செய்ய ஒரு ஸ்டேஷன்

மனசுக்குச் சர்வீஸ் செய்ய ஒரு ஸ்டேஷன்

டிவி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் நான் எனது டூவீலரைச் சர்வீஸ் செய்ய எடுத்துச் செல்கிறேன். அது வீட்டிலிருந்து ஒரு ரிலீப்பும் கூட.

சர்வீஸ் செய்யும் இடத்தில் எவ்வளவு வசதி வைத்திருக்கிறார்கள். ஒரு பெரிய எல்.இ.டி. திரை. கிட்டத்தட்ட மினி தியேட்டர் போல இருக்கிறது.

பதினொரு மணிக்குச் சரியாக ஒரு பேப்பர் கப்பில் டீ கொண்டு வந்து தருகிறார்கள்.

இப்படி நம்மைப் போல யோசிக்கும் நான்கைந்து பேர்கள் அந்த அறையில் இருக்கிறார்கள். எல்லாருடனும் சேர்ந்து கொண்டால் அரட்டை களை கட்டி விடுகிறது.

ஊர் கதை, உலகக் கதையில் தொடங்கி டூவீலர் தொடர்பான அனுபவத்தில் வந்துபேச்சு நிற்கிறது.

எந்த வண்டியை வாங்கலாம் என்பதில் தொடங்கி எந்த வண்டியை வாங்கக் கூடாது என்பது வரை ஏகப்பட்ட ஆலோசனைகள்.

எந்தெந்த சேட் கடையில் எந்தெந்த ஸ்பேர் பார்ட்ஸை சீப்பாக வாங்கலாம் என்பதற்கு ஒவ்வொரிடமும் ஏகப்பட்ட ஆய்வு அறிக்கைகள் இருக்கின்றன.

மைலேஜை அதிகரிப்பதற்கெல்லாம் எவ்வளவு யோசனைகள் சொல்கிறார்கள் தெரியுமா? அந்தப் பெட்ரோல் பாங்கில் பெட்ரோல் போடாதீர்கள், வண்டி மைலேஜே கொடுக்காது என்று சோதனைச் சாலையில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து முடிவுகள் வெளியிடுவதைப் போல அவ்வளவு அழுத்தம் திருத்தமாக முடிவுகளைச் சொல்கிறார்கள்.

கிட்டதட்ட யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் என்றுபடி நான் உட்கார்ந்திருக்கும் போது என்னுடைய வண்டி தயாராகி விட்டதாகச் சொல்கிறார்கள்.

நான் வண்டியை எடுக்கக் கிளம்புகிறேன்.

“சார்! இப்படியே ரெண்டு கட்டிங் லெப்ட்ல போனீங்கன்னா ரைட்ல ஒரு மெக்கானிக் கடை இருக்கு. என்னமா சர்வீஸ் பண்றாங்றீங்க. அங்க ஒரு தடவைப் போய் பாருங்க சார். ப்ரீ சர்வீஸ்ங்றதால இங்க வந்திருக்கேன். இது முடிஞ்ச பிற்பாடு அவன்கிட்டேதான் சர்வீஸ். நீங்க ஒரு தடவைப் போய்ப் பாருங்க. இங்க இப்படி வந்து டிவியைப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்க மாட்டீங்க. வண்டியைக் கொண்டு போட்டீங்கன்னா அவனே ஒரு ஸ்பேர் வண்டியைத் தர்றான். அதெ எடுத்துக்கிட்டு உங்க வேலையைப் பார்க்க நீங்க போயிடலாம். வண்டி சர்வீஸ் முடிஞ்சதும் அவனே போன்ல கூப்புடுவான். நீங்க ஸ்பேர் வண்டியப் போட்டுட்டு உங்க வண்டிய எடுத்துட்டு வந்துடலாம் சார்.”

நான் தலையாட்டியபடி வெளியே வந்தேன்.

நிச்சயம் அடுத்த முறையும் நான் இங்கேதான் வருவேன். இங்கே வந்தால்தான் இப்படிப் பேச மனிதர்கள் கிடைப்பார்கள். பேச நேரமில்லாமல் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களை இங்கேதான் நான் பேசிப் பார்க்க முடிகிறது. அத்துடன் எவ்வளவு அனுபவங்களைக் கேட்டுக் கொள்ள முடிகிறது.

இந்த அனுபவத்தை ஒரு ஸ்பேர் வண்டியை எடுத்துக் கொண்டு என் சொந்த வேலையைத் தொய்வின்றிப் பார்ப்பதால் நான் இழக்க விரும்பவில்லை. இவர்களின் பேச்சு என் மனதுக்கு சர்வீஸ் செய்வது போல இருக்கிறது. ஒரே நேரத்தில் வண்டிக்கும் மனதுக்கு சர்வீஸ் செய்யும் இதை நான் பெரிதும் விரும்புகிறேன். எப்போதும் வேலை என்ற சகதியில் விழுந்து உழல்வதை இது போன்ற தருணங்களிலாவது மாற்ற விழைகிறேன்.

என்னைக் காக்க வைக்கும் இடங்களில் என் மனம் விடுதலையாவதற்கான அத்தனை வாய்ப்புகளும் பிறருடைய மனம் திறந்த பேச்சுகளைக் கேட்பதற்கான அதிர்ஷ்டமும் வாய்க்கும் போது நான் ஏன் காத்திருத்தலை வெறுக்க வேண்டும்? நான் காத்திருத்தலை அவ்வளவு நேசிக்கிறேன். என் சக மனிதர்களோடு பேசுவதற்கான களத்தையும் வாய்ப்பையும் அதுவே ஏற்படுத்தித் தருகிறது.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...