8 Jul 2022

குழந்தைகளைக் கொண்டாட புத்திசாலித்தனம் தேவை

குழந்தைகளைக் கொண்டாட புத்திசாலித்தனம் தேவை

குழந்தைகளைக் கொண்டாடுவோம் என்பது குழந்தைகள் மீது அதீத அன்பு கொண்டோரின் வேண்டுகோள். குழந்தைகளை நாம் கொண்டாடும் அளவுக்கு அவர்கள் கொண்டாட்டத்திற்குப் பஞ்சம் உடையவர்கள் அல்ல. குழந்தைகள் கொண்டாட்டத்தின் பிரதிகள். அவர்களை நாம் கொண்டாட விட்டாலும் அவர்கள் கொண்டாட்ட உலகில் வாழக் கூடியவர்கள்.

வாழ்க்கையைக் கொண்டாடுவதற்குக் கூரிய புத்திசாலித்தனம் தேவை. அது குழந்தைகளிடம் ரொம்ப கூர்மையாக இருக்கிறது. குழந்தைப் பருவத்தை விட்டு விலக விலக அந்தக் கூர்மை மழுங்கி விடுகிறது.

மழுங்கிப் போன கூர்மையை வைத்துக் கொண்டு வாழ்க்கையைக் கொண்டாட முடியாது. பெரியவர்களின் வாழ்க்கை கொண்டாட்டம் இல்லாமல் போவதற்கு அது ஒரு காரணம்.

குழந்தைகளால் எதையும் புத்திசாலித்தனத்தோடு அணுக முடிகிறது. அந்த அணுகல்தான் அவர்களைக் கொண்டாட்டமாக வைத்திருக்கிறது. குழந்தைகளின் உலகில் பதில் இல்லாத கேள்விகள் இருக்க முடியாது. பதில் சொல்ல முடியாத பிரச்சனைகளும் அவர்களுக்கு இல்லை. இந்த அணுகுமுறை வாழ்க்கையை எளிமையாக வைத்திருக்கிறது. இந்த எளிமையின் பின்னணிதான் குழந்தைகளின் கொண்டாட்டமும் மகிழ்ச்சியும்.

பெரியவர்கள் புத்திசாலித்தனத்தோடு அணுகா விட்டால் இன்றைய குழந்தைகளைச் சமாளிக்க முடியாது. குழந்தைகளை டார்ச்சர்கள் என்று சொல்பவர்கள் இத்தகைய புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தன்னுடைய குழந்தைகக்குக் கூட்டல், கழித்தல் சரியாக வரவில்லையே என்று கவலைப்பட்ட தந்தை ஒருவரை எனக்குத் தெரியும். அந்தக் கவலை அவரை மிகப்பெரிய மன உளைச்சலில் தள்ளியிருந்தது.

பணம் கட்டி பள்ளிகளில் படிக்க வைக்கும் தந்தைகள் பலருக்கும் இது போன்ற ஏதாவது ஒரு கவலை அதாவது தன்னுடைய குழந்தைக்கு இது கூட தெரியவில்லை என்பது போன்ற கவலை இருக்கக் கூடும்.

அந்தக் காலத்தில் கால், அரைக்கால், முக்கால் வாய்ப்பாட்டைத் தலைகீழாகச் சொன்ன அனுபவத்தையெல்லாம் ஒன்று திரட்டித் தன்னுடைய குழந்தையைப் பற்றி அவர் அதீதமாகக் கவலையை வளர்த்துக் கொண்டிருந்தார்.

அந்தக் குழந்தையிடம் அந்தத் தந்தையின் கவலையைப் பற்றிக் குறிப்பிட்ட போது அவருடைய கவலையை அந்தக் குழந்தை “அதான் அதற்கெல்லாம் கால்குலேட்டர் இருக்கிறதே” என்ற அநாயமான பதிலில் அடித்து நொறுக்கிறது.

எல்லா இடத்திற்கும் கால்குலேட்டரைத் தூக்கிக் கொண்டு அலைவாயா என்று அப்போது கோபமாகக் கேட்ட தந்தையை, எல்லா இடத்துக்கும் மொபைலைத் தூக்கிக் கொண்டு அலைகிறோமோ, அதில் கால்குலேட்டர் இருக்கிறதே, பிறகேன் கால்குலேட்டரைத் தூக்கி அலைய வேண்டும் என்று கவலைப்பட வேண்டும் என்று அடுத்த பதிலால் அந்தக் குழந்தை மீண்டும் அசரடித்தது.

கடைக்காரன் உன்னை ஏமாற்றினால் என்ன செய்வாய் என்ற கேள்விக்கு, எல்லா கடைக்காரர்களும் கம்ப்யூட்டரைஸ்டு பில் தருகிறார்களே, அப்படி ஏமாற்றினால் அந்தப் பில்லை வைத்தே அவரை மாட்டி விட முடியாதா என்று அந்தக் குழந்தை கேட்ட போது அந்தத் தந்தையும் கொஞ்சம் அசந்துதான் போனார்.

இருந்தும் விடாமல் உனக்கு கடிகாரத்தில் நேரம் கூட பார்க்கத் தெரிய மாட்டேன்கிறதே என்று அந்தத் தந்தை சொன்ன போது அதான் மொபைல் நேரத்தை நம்பராகக் காட்டி விடுகிறதே, பிறகேன் நான் கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அந்தக் குழந்தை கேட்ட போது அந்தத் தந்தை உண்மையிலேயே வாயடைத்துப் போனார்.

இப்படிதாங்க என் குழந்தையை என்னால் சமாளிக்கவே முடியவில்லை, இந்தக் குழந்தை வருங்காலத்தில் என்ன பண்ணப் போகிறதோ என்று மீண்டும் தன்னுடைய பய கலந்த கவலை உணர்வை வெளிப்படுத்தினார்.

எனக்கோ அந்தக் குழந்தை இவ்வளவு புத்திசாலித்தனமாகப் பதிலளிக்கிறதே என்று ஆச்சரியமாக இருந்தது. குழந்தையின் புத்திசாலித்தனத்தை உணராத அந்தத் தந்தையின் மீது கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.

எனக்கென்னவோ அந்தக் குழந்தையின் புத்திசாலித்தனத்தை உணரும் அளவுக்கு அந்தத் தந்தைக்குப் புத்திசாலித்தனம் போதவில்லையோ என்று தோன்றியது.

இவ்வளவு புத்திக்கூர்மையோடு சிந்திக்கும் குழந்தைகளுக்குத் தட்டையான அறிவுரைகளும், இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போன்ற நெருக்கடிக்குள்ளாக்கும் நீதி போதனைகளும் ஒரு போதும் உதவாது.

அவர்களுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தியே அவர்கள் எப்படி வளர வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படி வளர வைக்க வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம். அதற்கு நாமும் கொஞ்சம் அந்தக் குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதைக் கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் சிந்திக்க வேண்டும்.

ஒரு ஸ்மார்ட்டான பெற்றோராக இருக்க விரும்புபவர்களுக்குத் தங்கள் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்குக் கொஞ்சமாவது புத்திசாலித்தனம் தேவைப்படுகிறது என்பதுதான் கசப்பான உண்மை.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...