7 Jul 2022

நானென்ன மாத்ருபூதமா?

நானென்ன மாத்ருபூதமா?

வாழ்க்கையில் நினைத்த நேரத்திற்கு எல்லாம் நடக்க மாட்டேன் என்கிற கவலை எல்லாருக்கும் இருக்கிறது. அந்தக் கவலைக்கு ஒரே மருந்துதான் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்பதுதான் அந்த மருந்து.

பொறுத்திருப்பதில் இரண்டு விதமான நன்மைகள் இருக்கின்றன. கொஞ்ச காலம் பொறுத்திருந்தால் கொஞ்ச நாட்கள் ஓடுவதில் நமக்கு இருந்து கவலை நமக்கே ஞாபகத்தில் இல்லாமல் போய் விடும். கொஞ்ச நாட்கள் ஓடுவதில் எது நடக்கவில்லை என்று நினைத்தோமோ அதுவே தானாக நடந்து விடும்.

என் நண்பர் ஒருவருக்கு இப்படிப்பட்ட கவலைகள் அதிகம். எனக்கு எதுவும் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க மாட்டேன்கிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்.

கொஞ்சம் பொறுமையா இருப்பா எல்லாம் மாறிடும் என்று அவரைப் பார்க்கும் போதெல்லாம் நான் சொல்லாமல் இருந்ததில்லை. ஆமாம் உனக்கு இதைத் தவிர வேறொண்ணும் தெரியாது என்று அதற்கும் என் மேல் கோபப்படுவார்.

இருபத்தைந்து வயது ஆகியும் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று இந்தச் சமூகத்தையும் அரசாங்கத்தையும் சகட்டு மேனிக்குத் திட்டிக் கொண்டிருந்தார்.

கொஞ்சம் பொறுமையா இருப்பா கிடைத்து விடும் என்றதற்கு என்னையும் சகட்டு மேனிக்குத் திட்டினார். நான் சொன்னபடியே இருபத்து ஏழு வயதில் அவருக்கு வேலை கிடைத்ததும் அவர் என்னைத் திட்டியதையெல்லாம் மறந்து விட்டார்.

அதன் பிறகு தனக்கு இருபத்து ஒன்பது வயது ஆகியும் கல்யாணம் ஆகவில்லை என்று கண்ணில் படும் புரோக்கர்கள் மீதெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குப் போய்க் கொண்டிருந்தார்.

கொஞ்சம் பொறுத்திருப்பா ஆகிடும் என்று நான் சொன்ன போது என்னிடமும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்தார். நான் சொன்னது போல முப்பது வயதில் கல்யாணம் ஆனதும் என்னோடு மல்லுக்கு நின்னதையெல்லாம் மறந்து விட்டார்.

கல்யாணம் ஆன பிறகு இப்போதும் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார். கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களாகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்று கண்ணில் படும் கோவில்களையும் கோவில்களில் இருக்கும் தெய்வங்களையும் திட்டிக் கொண்டிருக்கிறார்.

வழக்கம் போல கொஞ்சம் பொறுமையா இருப்பா என்கிறேன் நான். அதற்கு எனக்குக் கொஞ்சம் திட்டு விழுகிறது. வழக்கம் போல இன்னும் சில ஆண்டுகளில் குழந்தை பிறக்கத்தான் போகிறது. அப்போது நான் முன்னர் சொன்னதை மறந்து விடத்தான் போகிறார். அப்போதுதானே இன்னொரு பிரச்சனைக்கும் கவலைக்கும் வழக்கம் போல கோபப்பட முடியும், சண்டைப் போட முடியும் மற்றும் திட்டித் தொலைக்க முடியும்.

அப்படியே குழந்தை பிறந்தாலும் அவருக்கு வேறென்ன கவலைகள் பிறக்குமோ? அவர் கவலைபப்டுவதை விட்டு விடுவார் என்றா நினைக்கிறீர்கள்? குழந்தை தான் நினைத்தது போலப் படிக்கவில்லை என்று வருத்தப்படலாம். அவர் சேர்க்க நினைத்த பள்ளியில் சீட் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படலாம்.

குழந்தை வளர்ந்ததும் வேலை கிடைக்கவில்லையே, இன்னும் அதற்குக் கல்யாணம் பண்ண முடியவில்லையே, கல்யாணம் பண்ணியும் பேரக் குழந்தைகள் பிறக்கவில்லையே என்று பலவிதமாக வருத்தப்படலாம் மற்றும் கவலைப்படலாம்.

வருத்தம், கவலைகளுக்கு முடிவேது? கொஞ்சம் பொறுயைமாக இருப்பதன் மூலமாக அதற்கான நிவாரணத்தை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.

அன்று அப்படித்தான் ரொம்ப உணர்ச்சிவயப்பட்டு இருந்த நண்பன், எப்பப்பா எனக்குக் குழந்தை பிறக்கும்? நீயாவது எனக்கு உருப்படியா யோசனை சொல்றீயா என்றான்.

கொஞ்சம் பொறுமையா இருப்பா, எல்லாம் நல்லபடியா நடக்கும் என்றேன். உனக்கு இதைத்தவிர வேறு எதுவும் தெரியாதா? எப்பப் பார்த்தாலும் இதையே சொல்றீயே என்று என் மேல் வழக்கம் போலவே வரிந்து கட்டிக் கொண்டு வந்து விட்டான்.

அதற்கு மேல் குழந்தை பிறக்காததற்கு நான் என்னதான் சொல்ல முடியும்? நான் என்ன மாத்ருபூதமா? நீங்களே சொல்லுங்கள்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...