6 Jul 2022

யோசனை கேட்பவர்களிடம் யோசனை சொல்லாதீர்கள்!

யோசனை கேட்பவர்களிடம் யோசனை சொல்லாதீர்கள்!

யோசனை கேட்டால் என்ன செய்ய வேண்டும்? யோசனை சொல்ல வேண்டும் என்பீர்கள்.

நான் அப்படி யோசனை சொல்லி பலரது கோபத்திற்கு ஆளாகியிருக்கிறேன். சிலரது நட்பையும் இழந்திருக்கிறேன். பலரது வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறேன். சிலரது எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறேன்.

தாகம் என்று தண்ணீர் கேட்டால் தண்ணீர் கொடுக்கத்தானே வேண்டும். அது போல யோசனை கேட்டால் யோசனை சொல்லத்தானே வேண்டும் என்றால் அங்குதான் நான் தவறு செய்ததைப் போல நீங்களும் தவறு செய்கிறீர்கள்.

தண்ணீர் கேட்டுக் கொடுப்பதைப் போலல்ல யோசனை. கேட்டுக் கொடுக்கப்படும் பொருளும், கேட்டுக் கொடுக்கப்படும் யோசனையும் ஒன்றல்ல.

தண்ணீர் கேட்டால் கொடுக்கலாம். யோசனை கேட்டால் கொடுக்கக் கூடாது. இதென்னடா புது யோசனையாக இருக்கிறது என்றால் அதுதான் உண்மையான யோசனை.

இது என்னடா புதுக்குழப்பமாக இருக்கிறது என்றால்…

யோசனை கேட்பவர்களை நம்பி ஏமாந்து விடக் கூடாது. அவர்கள் நம்மிடம் யோசனை கேட்பதில்லை. அவர்களின் யோசனைகளை நாம் கேட்க வேண்டும் என்பதை விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது புரியாமல் யோசனை கேட்பவர்களை, என்னிடம் கேட்கிறார்களே என்று நம்பி அவர்களுக்கு யோசனை சொல்லி அவர்களின் வெறுப்பை, பகையை, எரிச்சலை நான் சம்பாதித்ததைப் போல நீங்களும் சம்பாதித்து விடக் கூடாது.

உங்களுக்கும் அப்படி ஒரு நிலைமை வரக் கூடாது என்பதற்காக இதைச் சொல்வதால் இது உங்களுக்குக் கூறும் யோசனையல்ல என்பதை நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் யாருக்கும் யோசனை சொல்வது பிடிக்காது. அப்படி நான் யோசனை சொல்வதாக நினைத்து நீங்கள் என்னை வெறுத்து விடக் கூடாது பாருங்கள்.

ஒருவர் உங்களிடம் யோசனை கேட்கிறார் என்றால் அதைப் பற்றி அவர் விடிய விடிய யோசித்து விட்டுதான் உங்களிடம் வந்து பேசத் தொடங்குவார். நீங்களோ அவர் சொன்ன அந்த வினாடியிலிருந்துதான் அது குறித்தே யோசிக்கத் தொடங்குவீர்கள்.

அவர் விவரத்தோடு யோசித்து வைத்திருப்பதில் நீங்கள் விவரம் புரியாமல் யோசித்து எதையோ சொல்லிக் கொண்டிருப்பீர்கள்.

உங்கள் எதிரில் யோசனை கேட்கும் அவர் உண்மையில் விரும்புவது என்னவென்றால் உங்களுக்கு அது குறித்து யோசித்து யோசனை சொல்லும் அறிவில்லை என்பதைத்தான். அதை விட்டு விட்டு நீங்கள் வியாக்கியானத்தை ஆரம்பித்தால் அவரை அது எரிச்சல்படுத்தும்.

அதற்குப் பதிலாக நீங்கள், ஆகா இது புது விசயமாக இருக்கிறதே, இது குறித்து சரியாகப் புரியவில்லையே, தெரியவில்லையே என்று ஆரம்பித்தால் உங்களிடம் யோசனை கேட்ட ஆள் குஷியாகி விடுவார்.

அது இப்படியாக்கும், அப்படியாக்கும் என்று அவர் யோசனையைத் தொடர்ந்து விடுவார். நம்மிடம் யோசனை கேட்க வந்த ஆளா இப்படி யோசனைகளை மூட்டை கணக்கில் அவிழ்த்து விடுகிறார் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

இதென்னடா புதுக்கதையாக இருக்கிறது என்கிறீர்களா? இது புதுக்கதையல்ல. இதுதான் உண்மையில் உள்ள கதை. காலம் காலமாக விளங்கிக் கொள்ளாமல் நாம் தவறாகப் புரிந்து கொண்டு விட்ட கதை.

அவர்கள் யோசனை சொல்லுங்கள் என்று கேட்பது, டீ சாப்பிடுகிறீர்களா என்று கேட்பது போல ஒரு சம்பிரதாயத்துக்குத்தான். அது சம்பிரதாயம் என்பது புரியாமல் நீங்கள் கதையளக்கத் தொடங்கினால் நீங்கள் முட்டாளாகி விடுவீர்கள்.

யோசனை கேட்க வந்தவர்களிடம் இனிமேல் யோசனைகளைச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அவர்கள் உங்களிடம் தங்களின் யோசனைகளைச் சொல்ல வந்தவர்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். நம் தலை தப்புவதோடு நாமும் அநாவசியமாக யோசித்து நம் மூளையைக் குழப்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அவர்கள் தங்கள் மூளையைக் குழப்பி மண்டை கழன்று போயிருப்பதைக் கேட்டால் போதும.

இந்த உலகம் இப்படித்தான் இருக்கிறது. புரிந்து கொண்டு நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...