மனிதப் பிறவிகளின் சாதனை நோய்
அதென்னவோ மனிதராகப் பிறந்து
விட்டால் எதாவது சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் மனிதர்கள்
துரதிர்ஷ்டத்தின் பிறவிகள் எனலாம். பிற உயிர்களுக்கு இப்படி ஒரு நெருக்கடி இல்லை.
ஒரு பூனை, ஒரு நாய், ஒரு
முயல், ஒரு புலி, ஒரு சிங்கம் என இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுக்குச் சாதிக்க
வேண்டும் என்ற நெருக்கடி இல்லை.
மனிதர்கள் உருவாக்கிய கதைகளில்தான்
முயலும் ஆமையும் போட்டிப் போட்டு சாதிக்க வேண்டியிருக்கிறது. மற்றபடி முயலுக்கு ஆமையையோ,
ஆமைக்கு முயலையோ பற்றி என்ன கவலை? இரண்டும் சந்தித்தால் பேசிக் கொள்ளுமா என்ன? சவாலுக்கு
அழைக்குமா என்ன?
மனிதர்கள் நாய்களை, காளைகளை
வளர்க்கும் போது இதே போன்ற சாதனை பிரச்சனை தலைதூக்கி விடும். நாய்களுக்கும் காளைகளுக்கும்
போட்டிகள் நடத்தி அவற்றையும் சாதனைப் பிறவிகளுக்குள் கொண்டு வந்து விடுவர்.
பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்
என்பது போல மனிதர்களோடு சேர்ந்த விலங்குகளும் சாதனையெனும் தொற்றுநோயால் அவதிப்பட வேண்டியிருக்கிறது.
சாதித்தால்தான் மனிதர்கள்
என்கிறார்கள். அதுவும் சினிமாவில் சாதித்தால்தான் பெரிய மனிதர் என்று ஒத்துக் கொள்கிறார்கள்.
மற்ற துறைகளில் சாதித்தவர்களுக்கும் சினிமாவில் பயோபிக் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
சினிமாவுக்கு இருக்கும் விளம்பர
வெளிச்சம் அப்படி. நாம் சாதனையாளராக நினைக்கத்தக்க பலர் விளம்பர வெளிச்சம் இல்லாமல்தான்
இருக்கிறார்கள். அவர்கள் சாதனைகளைப் பெரிய விசயமாகக் கருதுவதில்லை.
சாதிக்க வேண்டும் என்பது
என்ன? இயல்பாக மனிதர்களுக்குள் சாதிப்பதற்கான அனைத்தும் இருக்கும் போது அதைத் தாண்டியும்
சாதனையைப் பெரிதாக்குவது ஒரு வகை மனநோய்தான்.
என்னைக் கேட்டால் சாதிக்க
வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சமயோசித புத்தியே இருப்பதில்லை என்பேன். சமயோசித்த
புத்தி இருப்பவர்களுக்குச் சாதிப்பது ஒரு பெரிய விசயமே இல்லை.
படிப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.
டாக்டராவதைச் சாதனை என்கிறார்கள். இன்ஜினியரிங்கை எடுத்துக் கொள்ளுங்கள் அமெரிக்காவில்
பணி புரிவதைச் சாதனை என்கிறார்கள்.
சம்பாதிப்பதை எடுத்துக் கொள்ளுங்கள்.
கோடி கோடியாகச் சம்பாதிப்பதைச் சாதனை என்கிறார்கள். ரிட்டையர்மெண்டிலும் நாற்பது வயதுக்குள்
சம்பாதித்து விட்டு ஓய்வு பெறுவதைச் சாதனை என்கிறார்கள்.
பிள்ளைகளைப் பெற்றெடுத்தால்
தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதைச் சாதனை என்கிறார்கள். தமிழ்நாட்டில் பிறந்து ஆங்கிலத்தில்
பேசுவதைச் சாதனை என்கிறார்கள்.
வசிப்பதென்றால் புறநகரில்
இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டு வியர்வையிலும் புழுக்கத்திலும் சாக்கடையின் மத்தியிலும்
வாழ்வதைச் சாதனை என்கிறார்கள்.
இப்படிப் பற்பல சாதிக்கும்
இவர்களது சாதனைகள் எல்லாம் கடைசியில் முதியோர் இல்லத்திலும் சர்க்கரை நோயிலும் சென்று
முடிகின்றன.
உண்மையான சாதனை என்பது எதைப்
பற்றியும் கவலையில்லாமல் சந்தோசமாக நோய் நொடியின்றி வாழ்ந்திருப்பதுதான் என்பது வாழ்க்கையின்
நிறைவில்தான் புரிகிறது.
அது சாதனையைப் பெரிதுபடுத்தாமல்
இயல்பாக எப்படி வாழ முடியுமோ அப்படி வாழ்வதாக இருக்கிறது.
உண்மையில் சாதனைகள் என்று
நாம் சொல்வது நம் இயல்பைக் கெடுத்து விடுகிறது. நம் இயல்பைக் கெடுக்காதது எதுவோ அதனோடு
வாழ்ந்து முடிப்பதுதான் சாதனை என்று அறியும் போது நாம் சாதனைகளாய் நினைத்தவை நம்மை
அழித்து முடித்திருக்கும். வயோதிகத்தின் நிழலும் படிந்திருக்கும்.
இனி மீள முடியாது எனும் நிலை
வரும் போதுதான் உண்மையான சாதனை என்பது பலருக்கு உணர வருகிறது. அதற்குள் விழித்துக்
கொள்வது அவரவர்களது விழிப்புணர்வில் இருக்கிறது.
*****
No comments:
Post a Comment