4 Jul 2022

அதிர்ஷ்ட தேவதையின் குழந்தைகளாவதற்கான சூக்கும முறைகள்

அதிர்ஷ்ட தேவதையின் குழந்தைகளாவதற்கான சூக்கும முறைகள்

நினைத்ததை நினைத்தபடி முடிப்பது எல்லாராலும் முடியாத ஒன்று. சொன்னதை சொன்னபடி நிறைவேற்றிக் காட்டுவது ஆயிரத்தில் ஒருவருக்கே சாத்தியம்.

எல்லாரும் கல் எறியலாம். ஒரு சிலரின் குறியே சரியாக இலக்கைச் சென்று தாக்கும்.

ஒரு சிலரால் மட்டும் எப்படி நினைத்தபடியெல்லாம் வாழ முடிகிறது? நினைத்தபடியெல்லாம் காரியம் ஆற்ற முடிகிறது? அவர்களால் மட்டும் எப்படி வெற்றி மேல் வெற்றி பெற முடிகிறது?

இப்படி இந்தக் கேள்விகள் எழாமல் வாழ்ந்தால் நீங்கள் இதற்கு மேல் இதைப் படிக்க வேண்டியதில்லை. ஒருவேளை இந்தக் கேள்விகள் அடிக்கடி உங்கள் மனதில் எழுந்தால் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம்.

அது சரி நம்மால் முடியாதது ஒரு சிலரால் மட்டும் முடிவது எப்படி? ஒரு சிலருக்கு மட்டும் தொட்டதெல்லாம் பொன்னாவது எப்படி?

அது அவர்களுக்கு மட்டும் கடவுள் அளித்த வரமோ? அவர்கள் மட்டும் விஷேஷத் திறமை பெற்ற சாகசக்காரர்களோ? அதிர்ஷ்ட தேவதை பெற்றெடுத்த குழந்தைகளோ?

அவர்களின் மனம் அப்படிச் செயல்படுகிறது. மற்றவர்களது மனமோ அவர்களைக் காரியத்தைச் செய்வதற்கு முன்னே பின்னோக்கி இழுக்கிறது.

அப்படி மனதைப் பின்னோக்கி இழுப்பது அச்சமாக இருக்கலாம். சந்தேகமாக இருக்கலாம். அவநம்பிக்கையாக இருக்கலாம். எதிர்மறை உணர்வாக இருக்கலாம். ஏதோ ஒன்று பின்னோக்கி இழுக்கிறது. அது எதுவாகவும் இருக்கலாம்.

நமது கண்ணில் படும் எதிலும் வெற்றியை ருசிப்பவர்களுக்கு அப்படி எதுவும் பின்னோக்கி இழுக்காதா?

ஒருவருக்கு இழுப்பது இன்னொருவருக்கு மட்டும் எப்படி இழுக்காமல் இருக்கும்? எல்லார் உடலிலும் ஓடும் ரத்தம் போலத்தான் அதுவும்.

ஒருவரைப் பின்னோக்கி இழுக்கும் சக்தி இன்னொருவரை மட்டும் எப்படி முன்னோக்கி ஒட விடும்?

உங்களை எது பின்னோக்கி இழுக்கிறதோ அதை எதிர்கொள்ளுங்கள். திரும்ப திரும்ப மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளுங்கள்.

அச்சத்திலிருந்து விடுபட அச்சத்தை எதிர்கொள்ளுங்கள். சந்தேகத்திலிருந்து விடுபட அதை எதிர்கொள்ளுங்கள். எதிர்மறை உணர்வுகளிலிருந்து விடுபட அவற்றை எதிர்கொள்ளுங்கள். வெற்றியை நோக்கிச் செல்ல நினைப்பவர்கள் அதைத்தான் செய்கிறார்கள்.

அப்படியானால் நானென்ன செய்கிறேன் என்று நீங்கள் கேட்டால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். அச்சமா, ஓ அப்படித்தான் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள். சந்தேகமா, ஓ அப்படித்தான் போலிருக்கிறது என்று ஏற்றுக் கொள்கிறீர்கள். அவநம்பிக்கையான உணர்வா, ஓ அப்படித்தான் இருக்கும் என்று ஏற்றுக் கொள்கிறீர்கள்.

அச்சம் என்றால் ஏனிந்த அச்சம்? எதற்கிந்த அச்சம்? இந்த அச்சம் எப்படி வருகிறது? எங்கிருந்து வருகிறது? என்பதைப் புரிந்து கொண்டு அதை எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம் என்று சிந்தித்து எதிர்கொள்ளுங்கள்.

எடுத்த எடுப்பிலேயே யாரும் மனதின் உணர்வுகளை எதிர்கொண்டு அவ்வளவு விரைவில் வெற்றி பெற்று விட முடியாது. விடாப்பிடியாக வைராக்கியத்தோடு நீங்கள் தொடர்ந்து எதிர்கொள்ள நேரிட வேண்டியிருக்கும்.

அடி மேல் அடித்து அம்மி நகர்வது போலத்தான், எறும்பு ஊர கல்லும் தேய்வது போலத்தான் பன்முறை பயின்று பழகியதற்குப் பின்பு உங்களுக்கே தோன்றும் இதற்கா அச்சப்படுவது? இதற்கெல்லாமா சந்தேகப்பட்டு நேரத்தை வீணடிப்பது? இந்த எதிர்மறை உணர்வுகளையெல்லாமா ஏற்று தடைபட்டு நிற்பது? என்று.

அதற்குப் பின்பு உங்கள் மனம் அதுவாக வெற்றியை நோக்கிச் செயல்படுவதை உணர்வீர்கள். நீங்களும் மனமும் உங்கள் இலக்கில் உங்கள் குறிக்கோளில் கைகோர்த்து விட்டால் அதன் பின் உலகமே எதிர்த்து நின்றாலும் உங்களால் அதை நிறைவேற்ற முடியும்.

இப்போது அதிர்ஷ்டம் உங்கள் பக்கம். எதையும் செய்யும் திறமை உங்கள் பக்கம். நினைத்ததை முடிக்கும் வல்லமை உங்கள் பக்கம். ஆனால் அது பன்முறை முயற்சிக்கும் பலமணி நேர பயிற்சிக்கும் பின்பே கிடைக்கிறது.

நாம் ஒருவரின் பன்முறை முயற்சியையும் பலமணி நேர பயிற்சியையும் பார்ப்பதில்லை. வெற்றி பெறும் அந்தக் கணத்தை மட்டுமே பார்க்கிறோம். அதனால்தான் நமக்கு வெற்றிகள் என்பது அதிர்ஷ்டங்களைப் போல, திறமையான சிலருக்கே கிடைக்கும் என்பது போலத் தோன்றுகிறது.

முயற்சியும் பயிற்சியும் உள்ளவர்களின் வெற்றி பெற்ற கணங்களே நம் கண்ணுக்குத் தெரிகின்றன. ஒரு கணத்தில் உருவாகும் வெற்றிக்காக அவர்கள் பல்லாயிர மணி நேரங்கள் உழைத்திருக்கலாம். பல்லாயிர மணி நேர உழைப்பும் அவர்களின் மனதுக்கானது.

மனம் அதுவாகச் செயல்பட்டு அதுவாக எதையும் நிகழ்த்தி விடுவதில்லை. பலமணி நேர பயிற்சிக்கும் முயற்சிக்கும் பிறகு அதுவாகச் செயல்பட்டு நிகழ்த்தும் அற்புதத்தைப் பெறுகிறது.

அதிர்ஷ்டத்தின் ரகசியம் பன்முறை முயற்சியாலும் பலமணி நேர பயிற்சியாலும் கண்டடையும் மனமாற்றம்தான். மனமதை மாற்றும் சூட்சமம் உங்களுக்குத் தெரிந்து விட்டால் நீங்களும் அதிர்ஷ்ட தேவதையின் குழந்தைதான். அந்தச் சூட்சமம் முயற்சியிலும் பயிற்சியிலும் இருக்கிறது. அதற்காக நீங்கள் பல மணி நேரம் பல முறைகள் மெனக்கெட நேரிடலாம்.

வேறெந்த குறுக்கு வழிகளிலும் ஒருவருடைய அதிர்ஷ்டமும் இல்லை இதனால் அடித்துச் சொல்லலாம். ஒருவேளை நீங்கள் முயற்சிப்பதற்கும் பயிற்சி செய்வதற்கும் அலுப்போ சோம்பலோ பட்டால் அதிர்ஷ்டம் என்ற அவநம்பிக்கையில் வைக்கும் உங்கள் நம்பிக்கை துரதிர்ஷ்டவசமானது. உங்களை அதிர்ஷ்ட தேவதையே வந்தாலும் கை தூக்கி விட முடியாது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...