3 Jul 2022

மிகை நாடும் முட்டாள்தனம்

மிகை நாடும் முட்டாள்தனம்

ஒவ்வொரு நாளும் சந்திக்கும் மனிதர்கள் எவ்வளவு வித்தியாசமாய் இருக்கிறார்கள். பணத்தேவையுள்ள மனிதர்களிடம் கூட நீங்கள் பணத்திற்கான வேட்கையை அவ்வளவாகப் பார்க்க முடியாது. அவர்களுக்கு அன்றாட அடிப்படைத் தேவைகளுக்கும், கடன் தவணைக்கான பணமும் கிடைத்தால் போதும் என்றிருக்கிறார்கள்.

அனைத்துத் தேவைகளும் நிறைவு பெற்ற மனிதர்களின் பணம் குறித்த வேட்கையை அறிய நேர்ந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.

நீங்கள் உட்கார்ந்து சாப்பிட்டால் கூட இந்தத் தலைமுறை முழுவதற்கும் இந்தப் பணம் போதுமே என்று கேட்டுப் பாருங்கள். இந்தத் தலைமுறைக்குப் போதும், அடுத்தத் தலைமுறைக்கு எங்கே போவேன் என்பார்கள்.

நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள் என்றால் ஒரு மூன்று தலைமுறைக்காவது சொத்து சேர்த்து வைத்து விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறேன் என்கிறார்கள்.

ஒருவர் மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்ப்பது என்றால் அன்றாட சம்பாத்தியத்திற்கே போராடும் மக்கள் நிறைந்த நாட்டில் அது முப்பதாயிரம் மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகத்தான் அமையும்.

பணத்தை ஒரு பாதுகாப்பாகப் பணக்காரராக விரும்பும் மனிதர்கள் ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள். எந்தக் காலத்திலும் பணம் ஒரு பாதுகாப்பாக இருந்ததில்லை. உங்களின் பாதுகாப்பின்மையே பணத்திலிருந்துதான் துவங்குகிறது.

பணத்தை மடியில் கட்டிக் கொண்டு நீங்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்து விட்டு வாருங்கள் பார்ப்போம். உங்கள் மடியில் இருக்கும் பணம் உங்களை நிம்மதியாகப் பயணிக்க விடாது.

உலகில் நடக்கும் அத்தனை திருட்டுகளும் பணத்திற்காகத்தான். உலகில் நடக்கும் அத்தனை கொள்ளைகளும் பணத்திற்காகத்தான். உலகில் நடக்கும் பெரும்பான்மையான கொலைகளும் பணத்திற்காகத்தான்.

உங்களிடம் அபரிமிதாக இருக்கும் பணம்தான் உங்களைப் பாதுகாப்பைத் தேடச் சொல்கிறது. உண்மையில் உங்களுக்குப் பாதுகாப்பே தேவையில்லை. உங்கள் தலைமுறைகளுக்கும் பணத்தால் ஆன பாதுகாப்பு தேவையில்லை.

பணமில்லாமல் உங்கள் தலைமுறைகள் பாதுகாப்பாக வாழ்வார்கள். பணத்தோடுதான் உங்கள் தலைமுறை பாதுகாப்பாக வாழ முடியாது.

உங்களிடம் அபரிமிதமாக இருக்கும் பணத்தைப் பார்த்துதான் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் துரோகியாக மாறுகிறார்கள். ஏழேழ் தலைமுறைக்காக நீங்கள் சேர்த்த சொத்தோடு உங்கள் சுற்றத்தாரின் பகையையும் துரோகத்தையும் ஒருங்கே சேர்த்திருக்கிறீர்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் எந்தத் தலைமுறையும் பணமில்லாததால் வீழ்ந்து விடாது. உங்கள் தலைமுறைக்காகப் பணத்தை அபரிமிதமாகச் சேர்த்து வைத்தால் அது வீழ்ந்து விடும்.

பணத்தைச் சம்பாதிப்பதில் புத்திசாலித்தனமாக இருங்கள் என்று சொல்வார்கள். உண்மை அதுவன்று. பணத்தை எவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என்பதில் புத்திசாலியாக இருங்கள்.

அபரிமிதமாகப் பணம் சேர்ப்பதைப் புத்திசாலித்தனமாகச் சொல்ல முடியாது. அது மாபெரும் முட்டாள்தனம். அந்த முட்டாள்தனத்தால் உங்களுடைய வாழ்க்கை மட்டுமல்லாமல் உங்கள் தலைமுறையின் வாழ்க்கையும் பணத்தைப் பாதுகாக்கும் முட்டாள்தனத்திலே கழிந்து விடும்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...