22 Jul 2022

அங்கே சண்டை போடுகிறார்கள் ஜாக்கிரதை

அங்கே சண்டை போடுகிறார்கள் ஜாக்கிரதை

துப்பாக்கிளை வைத்து டொப் டொப் என்று போட்டுத் தள்ளுவார்கள் என்று தெரிந்தால் நான் அந்தத் திரைப்படத்துக்குப் போயிருக்க மாட்டேன்.

கிட்டதட்ட ஒரு ராணுவ கிடங்கில் இருக்கும் அளவுக்குத் துப்பாக்கிளைப் பயன்படுத்தி இருந்தார்கள்.

அப்படி ஒரு சந்தேகம் வரும் என்பதைச் சாமர்த்தியமாக யோசித்து அந்தப் படத்தின் ஹீரோவை அன்டர்கவர் ஆபரேஷனில் இருக்கும் ஆபீசர் என்று கடைசியாகக் காட்டியிருந்தார்கள்.

தமிழ்த் திரைப்பட ஹீரோக்கள் எல்லாம் இப்படி அன்டர்கவர் ஆபரேஷனில்தான் இறங்க வேண்டுமா?

சமீப காலமாக அதிகரித்துக் கொண்டு வரும் ஆயுத கலாச்சாரத்தைத்தான் திரைப்படங்களில் இப்படிக் குறியீடுகளாகக் காட்டுகிறார்களா என்ற சந்தேகம் என் மனதின் ஓர் ஓரத்தில் வந்தது.

ஏன் சண்டை போடுகிறார்கள், எதற்குச் சண்டை போடுகிறார்கள் என்று தெரியாமல் ஏகப்பட்ட சண்டைகளை அரை மணி நேரம் படத்தைப் பார்த்து முடிப்பதற்குள் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தப் படங்களைப் பார்ப்பதற்குப் பதில் குழந்தைகள் ஆர்வமாகப் பார்க்கும் ரெஸ்ட்லிங் சேனலையேப் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல அவ்வளவு சண்டைகள்.

படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை எவ்வளவு சண்டைகள். இந்தப் படத்தில் கதை எங்கே இருக்கிறது என்று கேள்வி எழுப்பினால் அதுவும் ஒரு சண்டையில் வந்துதான் முடியும்.

சரியான ஸ்டன்ட் மாஸ்டரைத் தேர்ந்தெடுத்து விட்டால் ஒரு தமிழ்ப் படத்தை இயக்கி விடலாம் என்ற நிலைமைக்குத் தமிழ் சினிமா வந்து விட்டது.

ஒரு காலத்தில் சண்டைக்காட்சிக்கு உதவிய தீவிரவாதிகள் இப்போது போதை மாபியாக்களாக மாறியிருக்கிறார்கள்.

போதை மாபியாக்களிடம் மக்களைக் காக்க ஹீரோக்கள் ஏகப்பட்ட சண்டைகளைப் போட வேண்டியிருக்கிறது.

போதை மாபியாக்களும் ஹீரோக்களோடு மூர்க்கமாகச் சண்டையிட்டு ரசிகர்களின் டெம்போவை ஏற்ற மெனக்கெடுகிறார்கள்.

தீவிரமாகத் தமிழ்த் திரையுலகம் போதை மருந்துகளைப் பற்றிப் படம் எடுத்துத் தள்ளுவதைப் பார்க்கும் போது போது அந்த அளவுக்குச் சமூகத்தில் போதை மருந்துகளின் புழக்கம் இருக்கிறதோ என்று கூடுதலாகச் சந்தேகப்படவும் வேண்டியிருக்கிறது.

சமூகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவதற்கு முன்பு திரைப்படங்களில் ஊடுருவி விடுவார்கள் என்று கூறப்படுவதுண்டு. போதை மருந்துகளும் திரைப்படங்களில் அப்படியே ஊடுருவி விட்டன.

அவ்வளவு போதை மருந்துகள் இருக்கிறதா என்பதை நாம் திரைப்படங்களைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

போதை மருந்துகள் கடத்துவதில் இவ்வளவு நுட்பங்கள் இருக்கிறதா என்பதையும் போதை மாபியாக்கள் திரைப்படங்களைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.

சண்டைக் காட்சிகளை உருவாக்க திரையுலகம் உருவாக்கும் இப்படிப் பல வழிகளில் தீவிரவாதிகள், போதை மருந்துகள் என்று யோசித்தபடி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்தடுத்து என்னென்ன விசயங்களைக் கையிலெடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்களோ?

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...