17 Jul 2022

குழந்தைகளை ஆற்றுப்படுத்தும் உரையாடல்கள்

குழந்தைகளை ஆற்றுப்படுத்தும் உரையாடல்கள்

இந்தக் காலத்துக் குழந்தைகளைக் கையாள்வது சந்தேகம் இல்லாமல் சவால் நிறைந்த ஒன்றுதான். பெற்றோர்களின் மனதில் இயல்பாக இருக்கும் மென்மையான பக்கத்தை அதாவது அந்த சாப்ட் கார்னரைத்தான் இன்றைய குழந்தைகள் குறி வைத்துத் தாக்குகிறார்கள்.

பெற்றோர்களின் மென்மையான பக்கத்தைக் குழந்தைகள் எப்படி யாரும் சொல்லிக் கொடுக்காமலே தெரிந்து கொள்கிறார்கள் என்பதும் அந்த சாப்ட் கார்னரை எப்படி அவர்களையும் அறியாமல் கண்டுபிடிக்கிறார்கள் என்பதும் அதிசயம்தான்.

வலிமையான பக்கமே அடி மேல் அடிக்கும் போது வழி விடும் எனும் போது மென்மையான பக்கம் எம்மாத்திரம்? ஓர் அழுகை அல்லது ஒரு கோபம் அல்லது ஒரு கூச்சல் அல்லது ஓர் அடாவடித்தனம் – இப்படி எதையாவது ஒன்றைக் குழந்தைகள் பிரயோகித்துப் பெற்றோர்களிடம் சாதித்துக் கொள்ள வேண்டியதைச் சாதித்துக் கொள்கிறார்கள்.

தங்களுக்குக் கிடைக்காமல் போனது தங்கள் பிள்ளைகளுக்கும் கிடைக்காமல் போய் விடக் கூடாது என்று நினைப்பில் பெற்றோர்களும் பிள்ளைகள் கேட்பது அனைத்தையும் நிறைவேற்றுகிறார்கள்.

தங்களின் தேவைகளை நிறைவேற்றுவது பெற்றோர்களின் கடமை என்றும் அவற்றை எப்பேர்பட்டாவது அடைவது தங்களுடைய உரிமை என்றும் பிள்ளைகள் நினைக்கிறார்கள். அதன் விளைவுதான் இன்றைய பிள்ளைகளைச் சமாளிப்பதில் சவால்களை உருவாக்குகின்றன.

பெற்ற பிள்ளைகளிடம் பாசம் காட்டாமல் அவர்களின் ஆசைகளை நிறைவேற்றாமல் வாழ்க்கையில் வெறென்ன சந்தோசம் இருந்து விடப் போகிறது என்பது பெற்றோர்களின் நினைப்பாக இருக்கலாம்.

பிள்ளைகள் ஆசைப்படுவனவற்றை நிறைவேற்றுவதே அவர்களது சுதந்திரமான வாழ்க்கைக்கு அடிப்படை என்ற எண்ணமும் பெற்றோர்களுக்கு இருக்கலாம்.

பிள்ளைகளின் விருப்பங்களை எந்த அளவுக்கு நிறைவேற்றுவது, எந்த அளவில் நிறைவேற்றாமல் இருப்பது என்பதற்கு இடையே நுட்பமான கோட்டினை வரைந்து விட முடியாது. ஆனாலும் இந்தக் கோட்டைக் குறிப்பிடத்தக்க முறையில் வரைவதற்கான வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் வரையப்படும் போது அந்தக் கோடு அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். இரண்டு பக்கமும் எந்த விதமான புரிதல் இல்லாமல் வரையப்படும் கோடு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளியை உருவாக்கி விடும்.

ஒரு தேவையை அல்லது விருப்பத்தை நிறைவேற்றும் போது பிள்ளைகளிடம் அது குறித்துப் பேசுகிறோமா என்பது முக்கியம். இயல்பான எளிமையான உரையாடல் தேவைப்படும் அந்த சந்தர்ப்பத்தை விட்டு விடக் கூடாது. இந்த இடத்தில் கேள்விகளும் விவாதங்களும் கலந்து இருக்க வேண்டும். அதுவும் எவ்வித செயற்கைத்தனமும் இல்லாமல் இயற்கையாக ஒருவருக்கொருவர் உள்ளங்களை அறிந்து கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்.

ஒரு விருப்பம் குறித்துப் பேசி விவாதித்து அதன் விளைவுகள் வரை கலந்தாலோசித்து விட்டால் பிள்ளைகள் புரிதலில் பலவிதமான பரிமாணங்களை அறிந்து கொள்வார்கள். அவர்களின் சின்ன சின்ன விருப்பங்களையும் தேவைகளையும் மறுதலிக்காமல் இந்த விவாதத்தை மற்றும் கலந்தாலோசிப்பதைச் செய்தால் பிள்ளைகளிடம் நல்ல பல குணங்கள் வளர அது அடித்தளமாகும்.

குறிப்பாகத் தமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு முன் பலரது இணக்கத்தையும் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஜனநாயகத் தன்மைக்கு இந்த முறை வித்திடும்.    

அதற்கு முதலில் நமக்குப் பிள்ளைகளிடம் பேசத் தெரிகிறதா என்பதைச் சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளிடம் அவர்களாக மாறி அவர்களாகவே பேச வேண்டும். அவர்களுடைய மனதை வெளிக்கொணர வேண்டுமானால் அப்படித்தான் செய்தாக வேண்டும்.

நம்மால் ஒருவரது உள்ளத்தைப் பேச்சின் மூலம் வெளிக்கொணர முடிந்தால் அவர் எதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ அதைப் புரிந்து கொண்டு விடும்படி செய்து விட முடியும். குழந்தைகளை ஆற்றுப்படுத்துவதில் இதுதான் முக்கியமான அணுகுமுறை.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...