15 Jul 2022

ஒரே தலைப்பில் இரண்டு சுடுதல்கள்

ஒரே தலைப்பில் இரண்டு சுடுதல்கள்

ஒரே படத்தலைப்பில் இரு வேறு காலங்களில் இரு வேறு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. ‘நான் அவன் இல்லை’, ‘நான் மகான் அல்ல’, ‘பொல்லாதவன்’, ‘மனிதன்’ போன்ற திரைப்படங்கள் அதற்கு உதாரணங்கள்.

சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘விக்ரம்’ திரைப்படமும் அதற்கு மற்றொரு உதாரணம். அந்த மற்ற உதாரண படங்களிலிருந்து ‘விக்ரம்’ திரைப்படம் குறிப்பிடத்தக்க விசயங்களில் வேறுபடுகிறது.

இந்த இரண்டு ‘விக்ரம்’ படமும் கமல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு திரைப்படங்களிலும் கமல்தான் விக்ரமாக இருக்கிறார் என்று குறிப்பிடுவதும் பொருந்தும்.

‘விக்ரம்’ படத்தின் முதல் பாதி அதாவது இடைவெளை வரை பார்த்த போது அந்தப் படத்தில் கமல் கெஸ்ட் ரோலில்தான் வருகிறார் போலும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். பட விளம்பரத்திற்காகக் கமல் நடிப்பதுபோலக் காட்டியிருக்கிறார்கள் என்றும் கூட நினைத்தேன். முதல் பாதி அப்படித்தான் கமல் என்னவோ கனவுக் காட்சியில் வந்து போகுபவர் போல வந்துப் போய் கொண்டு இருந்தார்.

இந்தக் குறிப்பிடத்தக்க ‘விக்ரம்’ படத்தில் நல்லவர், கெட்டவர் என்று மாறி மாறி கமல் வருவது அவரை நல்லவரா? கெட்டவரா? என்ற வசனக் காட்சியைக் கொண்டு வருவதற்காகவும் இருந்திருக்கலாம்.

பொதுவாகத் திரைப்படங்களில் வரும் கனவுக்காட்சிகள் அப்படித்தானே இருக்கும். நடக்காத ஒன்றை நடப்பது போலக் காட்டி, அப்படி நடக்கவில்லை என்பதை கனவிலிருந்து விழிப்பது போலக் காட்டுவது தமிழ்த் திரைப்படங்களின் வழக்கமான ஓர் உத்தி என்பதால் நான் அப்படி நினைத்திருந்தேன்.

‘விக்ரம்’ படத்தின் இடைவேளை உடைபடும் இடத்தில்தான் மற்ற எல்லாரும் கெஸ்ட் ரோல் பண்ணியிருக்கிறார்கள், கமல்தான் மெயின் ரோல் பண்ணியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். படத்தின் முக்கியமான டிவிஸ்ட் என்று இதைச் சொல்லலாம்.

முதல் பாதி முழுவதுமாகக் கமல் பிரேம் டூ பிரேம் வெளிப்படாத குறையை இரண்டாம் பாதியில் விதவிதமான துப்பாக்கிகளால் சுட்டுச் சுட்டுத் தீர்க்கிறார். கிட்டதட்ட திரை கிழிந்து தொங்கும் அளவுக்கு துப்பாக்கிச் சூடுகள்.

படத்தின் டெம்போவைக் கூட்ட வேண்டுமென்று விஜய் சேதுபதியிலிருந்து சூர்யா வரை வில்லனாகியிருக்கிறார்கள். வில்லனாக்கியிருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

படத்தில் நடக்கும் கொலைகள் சாதாரண கொலைகள் அல்ல. எல்லாம் தலை அறுத்துத் துண்டுபடும் கொலைகள். தலையறுந்த முண்டங்களைக் காட்டி ஆக்சன் காட்சியின் டெம்போவைக் காட்டுவது தற்போதைய இயக்குநர்களின் ஒரு முறையாகி விட்டது என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

தங்கள் ஆக்சன் காட்சிகளுக்காக இந்த இயக்குநர்கள் மனித உயிர்களை எவ்வளவு மலிவாக்குகிறார்கள்! அதற்கிடையே கொஞ்சம் சென்டிமெண்ட் வகையறாவான அன்பு, பாசம் போன்றவற்றைப் பூசி நெஞ்சை நக்கிக் கொள்ளவும் வைக்கிறார்கள்.

கமலின் முதல் விக்ரம் படம் பார்த்தவர்களுக்குத் தெரியும் அவர் ஏவுகணை வீச்சிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவார். இந்த இரண்டாம் விக்ரம் படத்தில் அவர் போதை மாபியாக்களிடமிருந்து அரையும் குறையுமாகக் கொஞ்சம் காப்பாற்ற முயன்றிருக்கிறார். அடுத்தடுத்த விக்ரம் படங்களில் முழுமையாகக் காப்பாற்ற முயற்சிப்பார் என்று நம்பலாம் மற்றும் எதிர்பார்க்கலாம்.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...