13 Jul 2022

ரத்தாக வேண்டிய முன் முடிவுகளும் அழுகுணிச் சித்தாந்தங்களும்

ரத்தாக வேண்டிய முன் முடிவுகளும் அழுகுணிச் சித்தாந்தங்களும்

விவகாரத்துக்கான முடிவு ஆண்களின் ஏக போகச் சொத்து என்ற நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது. பெண்கள் ஆண்களின் சொத்தாகக் கருதப்பட்ட காலம் வரை நிலைமை அப்படித்தான் இருந்தது. சொத்தை விற்பதும் வாங்குவதும் உடைமையாளர்களுக்கான உரிமை என்பது போல ஆண்களும் நடந்து கொண்டார்கள்.

இன்று பெண்களும் விவாகரத்து முடிவைத் துணிந்து எடுக்கிறார்கள். அது அவர்களுக்கான உரிமையும் கூட. தங்களது கல்வியாலும் வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையாலும் பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் நிலையை நோக்கி முன்னேறியுள்ளனர்.

விவாகரத்து தவறென்றால் அதற்கான முடிவை ஆண்கள் எடுப்பதும் தவறுதானே. ஆனால் நம் சமுதாயம் அந்த முடிவை ஆண்கள் எடுக்கலாம், பெண்கள் எடுக்கக் கூடாது என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்துவதைப் பார்க்க முடியும்.

ஒரு பெண் விவாகரத்துக்கான முடிவை அவ்வளவு விரைவில் எடுத்து விட மாட்டார் என்பதை நம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி ஒரு முடிவை எடுக்க ஒரு பெண் துணிந்து விட்டால் சக பெண்கள் அந்த முடிவை மதிப்போடும் மரியாதையோடும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

பெண்களின் விவாகரத்து முடிவை சக ஆண்கள் கூட ஏற்றுக் கொள்வார்கள் போல. ஆனால் சக பெண்கள் அதற்கு எதிரான நிலையில் இருப்பதைப் பல சூழ்நிலைகளில் காண முடிகிறது.

முக்கியமாக ஒரு தாயால் தன் பெண்ணின் விவாகரத்து முடிவை ஏற்க முடியாது. சகோதரிகளும், தோழிகளும் கூட அம்முடிவை மறுபரிசீலனைச் செய்யவே சொல்வதைக் காண முடியும்.

வாழ்க்கை என்பது வன்கொடுமை சூழும் நேரங்களில் திருமண பந்தத்துக்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதல்ல. அதிலிருந்து துணிந்து வெளிவருவதுதான் வாழ்க்கைக்கான திறவுகோல். அந்தத் திறவுகோலை எடுக்க ஒரு பெண்ணிற்கு விவாகரத்துதான் வழி எனும் போது அதைச் சக பெண்கள் ஏற்று ஆற்றுப்படுத்த வேண்டும்.

விவாகரத்தான பெண்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுவார்களோ என்ற ஆழ்மனதின் அச்சமே சக பெண்களை அப்படி ஒரு முடிவை ஒரு பெண்ணை எடுக்க விடாமல் செய்கிறது.

நான் கண்ட வரையில் விவாகரத்தான எந்தப் பெண்ணும் வாழ்க்கையைத் தொலைத்து விட வில்லை. ஆனால் விவாகரத்தான ஆண்கள் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள்.

விவாகரத்தான பெண்களால் குடும்ப அமைப்பும் கெட்டு விடவில்லை. அவர்கள் தனி மனுஷியாகக் குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவதைப் போல எந்த ஆணாலும் தூக்கி நிறுத்தி விட முடியாது.

ஒரு பெண்ணுக்குச் சுதந்திரமாகவும் கௌரமாகவும் வாழ்வதற்கு விவாகரத்துதான் வழி எனும் போது அதை குடும்பமும் சமூகமும் முழு மனதோடு ஏற்று துணை நின்றால் போதும். அந்தப் பெண் எழுந்து விடுவாள். அப்படி துணை நிற்க முடியாவிட்டாலும் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைக்காமல் இருந்தால் கூட போதும்.

பாறையில் ஒரு விதை முளை விடும் போது, பெண்களால் எந்தப் போராட்ட களத்திலும் விருட்சமாக தழைக்க முடியும். விதைக்குள் இருக்கும் அதே முட்டி மோதி முளைக்கும் சக்திதான் பெண்களிடமும் உள்ளது.

தான் ஒரு சக மனுஷியாக நினைக்கப்படுகிறோம் என்ற நினைப்புள்ள எந்தப் பெண்ணும் விவாகரத்துக்கான முடிவை நோக்கிப் போவதில்லை. அப்படியே ஒரு பெண் விவாகரத்துக்கான முடிவை நோக்கிப் போனாலும் அவளைச் சக மனுஷியாகப் பார்ப்பதில் எந்தப் பிழையுமில்லை. அது அவர்களுக்கான உரிமையும் சுதந்திரமும் ஆகும். அதைக் கண்டு நாம் அலறவோ, அழுகுணிச் சித்தாந்தங்களைக் கூறி உளறவோ வேண்டியதில்லை.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...