இங்கே டைனிங் ஹால் எங்கே இருக்கிறது?
அழைப்பிதழைப் பார்த்ததும்
ஒரு நொடி பிரமித்துப் போனான் மோகன். அழைப்பிதழே இப்படியென்றால் கல்யாணம் எப்படி இருக்குமோ
என்ற பிரமிப்பு மாறாதபடித் திருமணத்துக்குப் போனான். கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்திடுடா
என்று ஸ்ருதி சொன்னது அவன் காதில் சதா எதிரொலித்தபடி இருந்தது.
மோகனுக்கு இந்தத் திருமணத்திற்குப்
போக ஒரு பக்கம் விருப்பம் இல்லையென்றாலும் அந்தப் பிரமிப்புதான் அவனை அழைத்துச் சென்றிருந்தது.
மோகனின் கணிப்பு வீண் போகவில்லை.
ஷங்கர் பட செட்டிங்கை விஞ்சம் வகையில் மண்டபத்தையே மறுகட்டமைப்பு செய்திருந்தார்கள்.
மண்டபத்திற்கு முன்பாக பல வண்ண சொகுசு கார்கள் அணிவகுத்து நின்றன. ஆட்டோவில் வந்து
இறங்கியது அவனுக்குள் குற்ற உணர்ச்சியைக் கிளறி விட்டுக் கொண்டிருந்தது.
மண்டபத்தில் நுழைந்ததும்
செக்யூரிட்டிகள் அவனை ஏற இறங்க ஓர் அலட்சியப் பார்வைப் பார்த்தார்கள். அழைப்பிதழைக்
கேட்டார்கள். நல்லவேளை மறக்காமல் எடுத்து வந்திருந்தான். அழைப்பிதழில் இருந்த கியூ
ஆர் கோட்டைக் கேன் செய்ததும் அரை மனதோடு அவனை உள்ளே செல்ல அனுமதித்தனர்.
அழைப்பிதழை மறந்து விட்டு
வந்திருந்த சிலர் தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கெஞ்சிக் கொண்டிருந்தனர். செக்யூரிட்டிகள்
மறுத்து விட்டனர். அதனால் ஒரு சிலர் ஏமாற்றத்தோடு திரும்பிக் கொண்டிருந்தனர். வேறு
சிலர் மீண்டும் வீட்டுக்குச் சென்று அழைப்பிதழை எடுத்து வரும் மும்மரத்தில் இருந்தனர்.
மண்டபத்தில் நுழைய நுழைய
பிரமிப்புக்கு மேல் பிரமிப்பாக இருந்தது மோகனுக்கு. அங்காங்கே செயற்கை நீருற்றுகள்
பீறிட்டன. வாஜி வாஜி என்று சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில்
ஒரு பாடல் வருமே, அப்படி இருந்தது அந்த இடம்.
அலங்காரத்துக்காக பல லட்சங்கள்
செலவு செய்திருந்தார்கள். பூக்கள் மட்டுமே சில லட்சங்கள் ஆகியிருக்கும். இதில் சில
லட்சம் இருந்தால் தன்னுடைய கல்யாணத்தையே முடித்து விடலாம் என்று நினைத்தான் மோகன்.
நினைப்புதான் பொழைப்பைக் கெடுத்ததாம் என்று அவன் அம்மா அடிக்கடி சொல்லும் சொலவம் அவனது
நினைவுக்கு வந்தது.
கல்யாண மேடை பல வண்ண கண்ணாடியால்
கண்ணாடி மாளிகைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கண்ணாடி மண்டபம் பூக்களின்
மேல் இருப்பதற்காக அவ்வளவு பூக்களை பரப்பியிருந்தார்கள்.
மணமகள் ஸ்ருதி அழகு தேவதையாக
அமர்ந்திருந்தாள். அவளும் பார்ப்பதற்கு ஷங்கர் பட நாயகி பாடல் காட்சியில் தோன்றுவது
போல் அவ்வளவு பிரமாண்டமாக இருந்தாள். மணமகன் சாட்சாத் தமிழ்ப் படங்களில் வரும் அமெரிக்க
மாப்பிள்ளையைப் போல இருந்தான். நிஜமாலும் அவன் அமெரிக்க மாப்பிள்ளையும் கூட.
மணமகன் தாலி கட்டி முடித்ததும்
மோகன் பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
ஸ்ருதியின் தேர்வு சரிதான்
என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவன் பசி வயிற்றைக் கிள்ள டைனிங் ஹால் எங்கேயிருக்கிறது
என்று விசாரித்தபடி நடந்தான். அவன் மனதுக்குள் ஸ்ருதியைக் காதலித்த நாட்கள் மங்கலாக
மறைந்து கொண்டிருந்தன.
*****
No comments:
Post a Comment