11 Jul 2022

அஜித் பைக்கின் வேகம் குறைந்தது

அஜித் பைக்கின் வேகம் குறைந்தது

தனியாகப் பைக்கில் செல்லும் அஜித்திடம் லிப்ட் கேட்டு ஏமாறுபவர்கள் தினமும் இருபது முப்பது தேறும். யாருக்கும் அஜித் லிப்ட் கொடுப்பதில்லை. பைக்கை யார் கேட்டாலும் தருவதில்லை. இது அவனுக்கேயான பைக். பின்னாலும் யாரும் அமர்ந்து வரக் கூடாது. யாரேனும் அவசரம் என்று பைக்கைக் கேட்டாலும் ஆட்டோ பிடித்து அனுப்பி விடுகிறான்.

இப்போதெல்லாம் அஜித்தின் பைக்கின் வேகம் இருபது கிலோ மீட்டர் வேகத்துக்குக் குறைந்து விட்டது. அறுபதுக்குக் குறைந்து அவன் பைக்கை ஓட்டியதில்லை. டிராபிக்கிலும் அறுபது குறையாமல் விர் விர் என்று சீறிக் கொண்டுதான் போவான்.

சமந்தாவுக்கு அறுபது கிலோ மீட்டர் வேகம் கம்மி. அவளுக்கு எண்பதுக்கு மேல் போக வேண்டும். அதை ரொம்பவே ரசிப்பாள்.

அவளுக்காகவே ஈ.சி.ஆரில் நூறு கிலோ மீட்டர் வேகத்துக்குப் போனதெல்லாம் அவ்வபோது நினைவுக்கு வந்து அச்சுறுத்துகின்றன அஜித்தை.

பல நேரங்களில் ஏன்டா பைக்கில் போகிறோம், பேசாமல் பஸ்ஸில் போய் விடுவோமா என்று அவன் நினைப்பதுண்டு. அப்படியும் ஒரு நாள் போய் பார்த்தான். பஸ் போகும் பத்து கிலோ மீட்டர் வேகத்தில் வெறுத்துப் போய் இருபது கிலோ மீட்டரில் போகும் பைக்கே பரவாயில்லை என்று பைக்கில் போய்க் கொண்டிருக்கிறான்.

இன்னொரு காரணமும் இருக்கிறது. அது நீங்களே புரிந்து கொள்ளக் கூடியதுதான். அதே நேரத்தில் ஆக்சிடென்ட் ஆன பைக்கை மாற்றி விடு என்று எவ்வளவோ பேர் சொல்லி விட்டார்கள். அஜித்துக்கு மாற்ற மனதில்லை. இந்தப் பைக்கில்தானே சமந்தா பின்னால் உட்கார்ந்திருந்த ஞாபகங்கள் எஞ்சியிருக்கின்றன.

நூறு கிலோ மீட்டரைத் தாண்டிப் போன ஒரு பயணத்தில் எதிரே திடீரென வந்த லாரியைத் தவிர்க்க வளைவில் சற்றே ஒடித்து நிறுத்த முயல பின்னால் உட்கார்ந்திருந்த சமந்தா தூக்கி வீசப்பட்டு, பைக் எதிரே இருந்த மரத்தில் மோதி மரம் அதிர்ந்து நிற்க கீழே விழுந்தவள் சம்பவ இடத்திலேயே போய் சேர்ந்தாள்.

அஜித் மட்டும் உயிர் பிழைத்து இப்படி இருபது கிலோ மீட்டர் வேகத்தில் சமந்தா பின்னால் அமர்ந்திருப்பதாகப் பைக்கை ஓட்டிக் கொண்டு திரிகிறான். அஜித்திடம் லிப்ட் கேட்டு கொடுக்கவில்லை என்றால் தயவுசெய்து அதற்காக வருத்தப்படாதீர்கள்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...