10 Jul 2022

டென்ஷன் பிடிக்காதவர்கள் இதைப் படியுங்கள்!

டென்ஷன் பிடிக்காதவர்கள் இதைப் படியுங்கள்!

குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பெரியவர்களுக்குச் சிறுசிறு மனச்சுமைகள் இருந்தன. அது குடும்பப் பொறுப்புகள் தொடர்பானது. அந்த பொறுப்பை முடித்து விட்டால் மனபாரத்தை இறக்கி வைத்து விடுவார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படித்தான் இருந்தார்கள் குழந்தைகளும் பெரியவர்களும்.

இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து வேகமாகச் சுழன்ற இருபது வருடங்கள் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. குழந்தைகளைக் கேட்டால் டென்ஷனாக இருக்கிறது என்கிறார்கள். பெரியவர்களும் டென்ஷனாகவே இருக்கிறது என்கிறார்கள். யாரைக் கேட்டாலும் டென்ஷன் டென்ஷன்தான்.

இரண்டாயிரத்துடன் இருபதும் அத்துடன் இரண்டும் கூடி விட்ட இந்த இரண்டாயிரத்து இருபத்து இரண்டு குழந்தைகள், இளைஞர்கள், இளைஞிகள், ஆண்கள், பெண்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் எல்லாருக்கும் டென்ஷனை வாரி வழங்கியிருக்கிறது.

புராண காலத்தில் துர்வாசர், விசுவாமித்திரர் போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய டென்ஷன் பார்ட்டிகள் இருந்திருக்கிறார்கள். இந்த நவீன காலத்தில் புராண காலத்திலிருந்து முன்னேற்றம் அடைந்து எல்லாரும் துர்வாசராகவும் விசுவாமித்திரராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு மட்டும் துர்வாசருக்கும் விசுவாமித்திரருக்கும் இருந்த சக்திகள் இருந்தால் உலகம் அவ்வளவுதான். இந்நேரம் இந்த உலகம் நூறு உலகப் போர்களையாவது எதிர்கொண்டிருக்கும்.

ஒரு குடும்பத்தில் ஒரு டென்ஷன் பார்ட்டி இருந்தால் நான்கு சாந்த சொரூபிகள் இருப்பார்கள். இப்போது நிலைமை அப்படியே தலைகீழாகி விட்டது. இருக்கின்ற ஐந்தும் டென்ஷன் பார்ட்டிகளாவே இருக்கிறார்கள். ஒருவர் டென்ஷனை இன்னொருவர் ஏற்றி சாந்த சொரூபியாக இருக்க நினைப்போரையும் டென்ஷன் பார்ட்டிகளாக மாற்றி விடுகிறார்கள்.

ஏனிந்த டென்ஷன்? எதற்கிந்த டென்ஷன்? அதற்கு முன்பு நாம் இன்னொரு வகையான கேள்விகளுக்கு விடை கண்டாக வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் டிபால்ட்டாக இன்பில்டாக இந்த டென்ஷன் இருக்கிறதா? அதாவது டென்ஷன் என்பதுதான் இந்தக் காலத்து மனிதர்களின் இயல்பா? அல்லது இயல்பாகவே நம்மை அறியாமல் இந்த டென்ஷனை உருவாக்கிக் கொள்கிறோமா?

இதே நிலை தொடர்ந்தால் டென்ஷன் மனிதர்களின் இன்பில்டாக மாற வாய்ப்பிருக்கிறது. நம்மை அறியாமல் கூட நமக்கு நாமே டென்ஷனை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.

ஆகவே இன்பில்டாக மாறப் போகும் நம்மை அறியாமல் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் இந்த டென்ஷனைப் பற்றி அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம்.

ஒரு மனிதர் என்பவர் யார் என்ற கேள்விக்கு விடை கண்டால் இந்த டென்ஷனுக்கான கேள்விகளுக்கும் விடை கண்டு விடலாம்.

வேறெந்த நூற்றாண்டில் மனிதர்கள் எப்படியோ? ஆனால் இந்த நூற்றாண்டில் மனிதர்கள் என்போர் எதிர்பார்ப்புகளின் வடிவங்கள். அவர்கள் உண்மையான மனித வடிவங்களே அல்ல என்று சொன்னால் தயவுசெய்து கோபப்படாதீர்கள்.

மிகையாகிப் போகும் எதிர்பார்ப்புகள்தான் நிறைவேற வாய்ப்பில்லாத போது டென்ஷனை வடிகாலாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன.

இந்த நொடி பிரசவமான ஒரு குழந்தையை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் குழந்தையைச் சுற்றி எவ்வளவு எதிர்பார்ப்பகள் உருவாக்கப்படுகின்றன. அந்த உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகளைச் சார்ந்து எவ்வளவு எதிர்பார்ப்புகளை அந்தக் குழந்தை உருவாக்கிக் கொள்கிறது.

உதாரணத்துக்கு குறிப்பிட்ட இப்படி ஒரு எதிர்பார்ப்பு குறித்த கோணத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதாகப்பட்டது, குழந்தை பிரசவமாகி விட்டது. இனி அதன் மேலான எதிர்பார்ப்புகள் இப்படியெல்லாம் கட்டமைக்கப்படும். எல்.கே.ஜி, யூ.கே.ஜி.க்கு எந்தப் பள்ளியில் சேர்ப்பது? இப்போதே அட்வான்ஸ் புக்கிங்கில் பணம் கட்டி வைப்பதா? படிக்க படிக்க நீட்டுக்குத் தயார் செய்வதா? ஜேஇஇக்குத் தயார் செய்வதா? ஒருவேளை எதிர்பார்த்த மார்க் கிடைக்காமல் அந்தப் படிப்பைத்தான் படிப்பேன் என்று பிள்ளை பிடிவாதம் செய்தால் அதற்கேற்றபடி பேமென்ட் சீட்டில் படிக்க வைக்க எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும்? இப்படி எவ்வளவு எதிர்பார்ப்புகள். இது ஒரு பொதுவான குறிப்பிட்ட கோணம் மட்டுமே.

இன்னும் மேற்படி எதிர்பார்ப்புகளைத் தாண்டி அதிகமான எதிர்பார்ப்புகளில் கட்டமைக்கப்படும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இந்தக் குறிப்பிட்ட கோணத்தை குழந்தைகள் என்றில்லாமல் இளைஞர்கள், இளைஞிகள், குடும்பஸ்தர்கள், வேலையில் இருப்போர், வேலையில் இல்லாதோர், ஓய்வுக்குப் பின் வாழ்க்கையைக் கழிக்கத் திட்டமிடுவோர்கள் என்று பல வகைகளிலும் பல வித கோணங்களிலும் அவரவர் வாழ்க்கைச் சூழ்நிலைக்கேற்ப பொருத்திப் பார்க்கலாம்.

எதிர்பார்ப்புகளே கூடாதா என்றால் எதற்கும் ஓர் அளவு இருக்கிறது என்பதுதான் அதற்கான பதில். எந்த ஒன்று அளவுக்குள் நிற்கிறதோ அதனால் எந்த டென்ஷனும் இல்லை. எந்த ஒன்று அளவைக் கடந்து போகிறதோ அதனால் டென்ஷன்தான்.

உதாரணத்துக்கு அணைக்கட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அணையின் கொள்ளளவு என்ற அளவுக்குள் தண்ணீர் இருந்தால் எந்த டென்ஷனும் இல்லை. அணையின் கொள்ளவைக் கடந்தால் அது எவ்வளவு டென்ஷனை உருவாக்கும் என்பதை சென்னையைச் சுற்றியுள்ள ஏரிப்பகுதிகளில் குடியிருந்தோரைக் கேட்டால் சொல்வார்கள்.

மனதும் ஓர் அணைக்கட்டைப் போன்றதுதான். உபரியான எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும் போது அதை டென்ஷன் எனும் வடிகால் வழியாகத் திறந்து விட்டுதான் ஆக வேண்டும். அணைக்கட்டுக்கு வரும் தண்ணீயை இயற்கையைத் தவிர வேறு யாராலும் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம். மனித மனம் அப்படியல்ல. மனிதர்கள் நினைத்தால் மனதுக்கு வரும் எதிர்பார்ப்புகளை அளவோடு கட்டுப்படுத்தி நிர்வகிக்கலாம்.

ஒவ்வொரு மனிதரும் தன்னைப் புரிந்து கொள்வது என்பது அவரவர் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்வதுதான். உங்கள் எதிர்பார்ப்புகளை உங்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியுமானால் உங்களால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும் என்பதற்கு என்னால் முழு உத்திரவாதம் கொடுக்க முடியும்.

இந்தத் திசையில் யோசித்து உங்கள் டென்ஷன் குறைந்தால் அது குறித்து எழுதுங்கள். அது மற்றவர்களின் டென்ஷன் குறைவதற்கு ஒரு வழியாக இருக்கும். உங்களால் நான்கு பேருக்கு டென்ஷன் குறைகிறது என்றால் உங்களுடைய டென்சனும் நான்கு மடங்கு குறையும்.

ஆக எதிர்பார்ப்புகள் அதிகமாகும் போது அதை உங்களை மட்டும் மையமிட்டு குறுக்காமல் அதை எல்லாருக்குமான பயனுள்ள பொதுவான எதிர்பார்ப்பாக மாற்றிப் பாருங்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் அழகாக மடைமாற்றம் செய்யப்பட்டு உங்கள் டென்ஷன் உங்களை அறியாமல் கரைந்தோடிக் கொண்டிருக்கும்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...