சொல்லத்தான் வார்த்தைகள்
கடவுள் கற்பனையில்லை என்கிறார்கள்
இருந்து விட்டுப் போகட்டும்
புலவர்கள் என்றால் சர்ச்சை
இருக்கும் என்கிறார்கள்
எவ்வளவோ சர்ச்சைகளில் அதுவும்
இருக்கட்டும்
பணம் மட்டும் வாழ்க்கையில்லை
என்கிறார்கள்
அதுவும் அப்படியே இருக்கட்டும்
சாலையில் இருக்கும் மரங்களை
வெட்டுபவர்கள்
வீட்டுக்கொரு மரம் வளர்க்க
வேண்டுமென்கிறார்கள்
அவர்கள் சொல்வது போல ஆகட்டும்
வைகை எப்போதும் கடலைச் சேராது
என்கிறார்கள்
பரவாயில்லை சேராமல் இருக்கட்டும்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
என்கிறார்கள்
வாழ்வு உண்டாகட்டும்
வாழ்வில் அப்படியே மங்கலம்
உண்டாகட்டும்
பேசத்தானே வாய்
சொல்லத்தானே வார்த்தைகள்
சொல்பவர்களுக்குத் தெரியும்
வார்த்தையின் சால்ஜாப்புகள்
சொல்லாமல் இருக்க முடியுமா
வார்த்தைகளை வைத்துக் கொண்டு
உண்மையோ பொய்மையோ
பலிக்கிறதோ பலிக்கவில்லையோ
நடக்கிறதோ நடக்கவில்லையோ
பேசித்தான் ஆக வேண்டும்
சொல்லித்தான் ஆக வேண்டும்
வார்த்தைகளை
பேசாமலிருப்பது எல்லாருக்கும்
ஆகாது
சொல்லாமல் விடுவது பல நேரங்களில்
கை கூடாது
*****
No comments:
Post a Comment