15 Jun 2022

நீங்கள் ஏன் ஒரு விவசாயி ஆக வேண்டும் தெரியுமா?

நீங்கள் ஏன் ஒரு விவசாயி ஆக வேண்டும் தெரியுமா?

            பயிர்களை வளப்படுத்த பல வழிமுறைகள் இருக்கின்றன. ரசாயன உரமிடுதலும் ரசாயன மருந்துகளிடுதலும் தற்கால வழிமுறைகள். இவ்வழிமுறைகள் பயிர்கள் வளரும் காலத்தில் செய்யப்படுபவை. இவை பயிர்களை வளப்படுத்தும். பயிர்கள் விளையும் மண்ணை நாசப்படுத்தி விடும்.

            எருவிடுதல் பழைய வழிமுறைகளுள் ஒன்று. பயிர்கள் வளர்வதற்கு முன்னர் செய்யப்படுகின்ற வளப்படுத்துகிற வழிமுறை இது. இம்முறை பயிர்களையும் வளப்படுத்தும், மண்ணையும் வளப்படுத்தும்.

            ரசாயன உரங்களும் மருந்துகளும் கொஞ்சமேனும் விளையும் பொருட்களை நஞ்சேற்றி விடும். இது அமுதத்தை நஞ்சாக்கும் கதை. இயற்கையான எரு விளைபொருளைச் செழுமைப்படுத்தும். நஞ்சும் இதனால் அமுதாகும்.

            மாடுகளும் எருக்குழிகளும் இல்லாமல் போய் விட்ட இந்தக் காலத்தில் மட்கிய சாண எருவைத் தேடி வீடு வீடாக அலைய வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் மற்றுமோர் எதார்த்தத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். மாடுகள் இருக்கும் வீடுகளில் கொல்லையில் குப்பைக் குழிகளும் மாடுகள் இல்லாத வீடுகளில் தெருமுனையில் குப்பைத் தொட்டிகளும் இருக்கின்றன.

            நாம் எவ்வளவுதான் தெருக்கள் தோறும் தூய்மை முழக்கம் செய்து குப்பைத் தொட்டிகளை அமைத்தாலும் வீடுகள் தோறும் குப்பைக்குழிகள் இருந்த பண்டைய தூய்மை முறைக்கு எதுவும் ஈடாகாது.

            குப்பைக்குழிகள் பல செய்திகளை நமக்குச் சொல்கின்றன. குப்பையே ஆனாலும் அது கழிவே ஆனாலும் அதை மக்கச் செய்து வீட்டை விட்டு வெளிக்கொணர வேண்டும் என்ற நற்செய்தி குப்பைக்குழிகளில் இருக்கிறது. மக்காத அத்தனை பொருட்களையும் வீட்டை விட்டு வெளியே தள்ள வேண்டும் என்ற செய்தி தெருமுனைதோறும் அமைக்கப்படும் குப்பைத் தொட்டியில் இருக்கிறது. நம்மால் உண்டான கழிவுக்கும் குப்பைக்கும் நாம் பொறுப்பில்லை என்ற உணர்வைக் கூட அது ஏற்படுத்தி விடுகிறது. நாம் உண்டாக்கும் கழிவுக்கும் குப்பைக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும். மட்கச் செய்தல் என்பதுதான் அந்தப் பொறுப்பேற்பு.

            நமது வீட்டை மட்டும் சுத்தப்படுத்திக் கொண்டு குப்பைகளையும் கழிவுகளையும் வெளித்தள்ளும் ஒரு சுகாதார முறைக்கு நாம் மாறியிருக்கிறோம் என்று சொல்வதை விட அவ்வாறு நாம் மாற்றப்பட்டிருக்கிறோம் என்று சொல்வது வாஸ்தவமானது.

            பண்டைய முறையானது கழிவுகளையும் குப்பைகளையும் மட்கச் செய்து எருவாக்கி அந்த எருவையும் நாம் உண்ணும் உணவுப்பயிர்களுக்கான ஊட்டமாக்கி ஒவ்வொன்றும் ஆக்கப்பூர்வமான மறுசுழற்சிக்கு உள்ளாவதை மையமாகக் கொண்டிருந்தது.

            நாம் எதிர்கொள்ளும் கழிவு மற்றும் குப்பைசார் பிரச்சனைகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க அனைவராலும் சாத்தியமாக்கத்தக்க ஒரு முறையை முன் வைக்க முடியும்.

            ஒவ்வொரு மனிதரும் அடிப்படையில் ஒரு விவசாயியாக இருப்பதன் மூலம் கழிவு மேலாண்மையை இயற்கையோடு இயைந்த முறையில் செயல்படுத்த முடியும். விவசாயி எனும் போது எல்லாரும் நெல்லையோ கோதுமையையோ விளைவிக்கும் விவசாயியாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதிக் கொள்ள வேண்டியதில்லை. தன் வீட்டுக் குழம்புக்கு நான்கு காய்கறிகளைப் பயிர் செய்யும் ஒருவரும் ஒரு விவசாயிதான்.

            நீங்கள் அடிப்படையில் என்னவாக இருந்தாலும், நீங்கள் ஒரு விஞ்ஞானியாக இருந்தாலும், நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தாலும், நீங்கள் நாட்டை ஆளும் தலைவராக இருந்தாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் ஒரு மரத்தை, இரண்டு பூச்செடிகளை வளர்ப்பது சாத்தியமில்லாத ஒன்றல்ல. அப்படிச் செய்யும் பட்சத்தில் நீங்களும் ஒரு விவசாயிதான்.

            ஒரு தாவரத்தை வளர்க்கும் ஓர் உயிரை வளர்க்கும் அனைவரும் விவசாயிதான்.

            ஒன்றை வளர்க்கும் போதுதான் இயற்கையின் மீதான மற்றும் இயற்கையுடனான அன்பை நீங்கள் உணர முடியும். நீங்கள் ஒரு மரத்தின் பிரியத்துக்கு உரியவராக இருந்தால் உங்களால் ஒரு பாலிதீனை மண்ணில் போட முடியாது. நீங்கள் போடும் பாலிதீன் நீங்கள் வளர்க்கும் தாவரத்தின் வேரினை முடக்குமோ என்று சிந்திக்க ஆரம்பிப்பீர்கள்.

            நாம் வளர்க்கும் தாவரத்திற்கு ஊட்டம் வேண்டுமே என்றும் யோசிப்பீர்கள். இயற்கையான தாய்ப்பாலைப் போன்ற மட்கும் பொருட்களை ஓர் உரக்குழியில் இட வேண்டுமே என்று சிந்திப்பீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் இயற்கையுடன் நெருங்கி வருவீர்கள். ‘எப்படி இருந்தால் அது இயற்கையானது’ என்ற பிரக்ஞைப் பிறந்து விட்டால் இயற்கையின் சுழற்சியில் நீங்களும் ஒரு பங்கு என்பதை உணரத் தலைப்படுவீர்கள்.

            பிறகென்ன? நம்முடைய கழிவுகளையும் குப்பைகளையும் எப்படி மேலாண்மை செய்ய வேண்டும் என்ற மெய்யறிவு பிறந்து விடும். அப்படி ஒரு மெய்யறிவு பிறந்து விட்டால் ஒரு பொருள் குப்பையானாலும் கழிவானாலும் இயற்கைக்கு மீண்டும் பயன்படுமா என்பதை யோசித்து விட்டுதான் அந்தப் பொருளை உங்களால் வாங்க முடியும்.

            ஆகவேத்தான் சொல்கிறேன், இயற்கையின் ஓர் அங்கமாக நீங்களும் ஒரு விவசாயி ஆக வேண்டும். உங்கள் அன்பு மகளுக்காக நீங்கள் இரண்டு ரோஜா செடிக்களை வளர்த்தாலும் நீங்களும் இந்த உலகின் ஓர் ஒப்பற்ற விவசாயி என்பதை இந்த உலகத்துக்கு உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...