16 Jun 2022

மண்புழு மண்டையைப் போட்ட கதை

மண்புழு மண்டையைப் போட்ட கதை

            மாறி விட்ட டெல்டா விவசாய முறைகளைப் பற்றிப் பேசவும் சொல்லவும் எவ்வளவோ இருக்கின்றன. வீட்டிற்கும் வயலுக்கும் ஒரு தொப்புள்கொடி உறவு டெல்டா விவசாயத்திற்கு உண்டு. அந்தத் தொப்புள்கொடியின் வழியாக வீட்டில் சேர்ந்த எரு அனைத்தும் வயலுக்குச் சென்று கொண்டிருக்கும். வயல் எனும் கருவறையில் நெல் பிள்ளைகளைப் போலச் சூல் கொண்டிருக்கும்.

            வயல் வைத்திருக்கும் அத்தனை விவசாயி வீடுகளிலும் மாடுகள் இருக்கும். மாடுகள் இருக்கும் ஒவ்வொரு வீட்டிற்குப் பின்னாலும் குப்பைக்குழி ஒன்றிருக்கும். அதை எருக்குழி என்றும் சொல்வர்.

            மாடுகளின் சாணத்திற்கு மட்டுமல்லாது வீட்டில் எஞ்சும் அத்தனை மக்கும் குப்பைகளுக்கும் அதுதான் குப்பைத் தொட்டி போன்றது. தெருவுக்குத் தெரு குப்பைத் தொட்டிகள் தேவையில்லாமல் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குப்பைத் தொட்டியைப் போலக் குப்பைக்குழிகள் இருந்த காலம் அது.

            வருடத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையோ குப்பைக்குழியை வெட்டுவார்கள். குப்பைக்குழியை வெட்ட வெட்ட அதில் கொட்டப்பட்ட சாணங்கள் அனைத்தும் மண் போன்ற நிறத்திற்கு மாறியிருப்பதைப் பார்க்க முடியும். அது போன்று நன்கு மக்கிய அந்த எருவானாது வயலுக்கான ஊட்டச்சத்து உணவு போன்றது.

            எருக்குழியிலிருந்து எரு எடுக்கும் வேலை துவங்கி விட்டால் வீடே கலகலப்பாகி விடும். எருக்குழி இருப்பது கொல்லை கடைசி என்பதாலும் எருவை ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டி நிற்பது வீட்டின் முன்பு என்பதாலும் எருவை வெட்டி எடுத்து ஏற்றுவதற்கு நான்கைந்து ஆட்களுக்குக் குறைவிருக்காது. வேலை விறுவிறுப்பாக நடைபெறும்.

            மாட்டு வண்டியில் எரு நிறைந்ததும் எருதுகள் இழுக்கும் அந்த வண்டியில் தெருவிலுள்ள அத்தனை பிள்ளைகளும் எருவோடு எருவாக ஏறிக் கொள்வர். வண்டிக்காரர் பிள்ளைகளை விரட்டினாலும் அவருக்குப் போக்குக் காட்டி விட்டு வண்டியில் சாமர்த்தியமாக ஏறிச் செல்லும் பிள்ளைகளுக்கு வயலில் எருவை முட்டு முட்டாக இறக்குவதைப் பார்ப்பது பிடித்தமான வேடிக்கையாக இருக்கும்.

            கொல்லையிலிருந்து எருவை எடுக்கவும் வயலில் கொட்டவும் மாட்டு வண்டி இரண்டு மூன்று நாட்களுக்கு அங்கும் இங்குமாக இயங்கிக் கொண்டிருக்கும். அத்தனை நாட்களுக்கும் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டமும் கும்மாளமும்தான்.

            முட்டு முட்டாகக் கொட்டிய எருவைப் பிறகு கலைக்க வேண்டும். ஒரு சில வயல்களில் வண்டிகளில் ஏறிச் செல்லும் பிள்ளைகளே விளையாட்டுப் போக்கில் எருவைக் கலைத்து விடுவார்கள். மற்ற வயல்களில் வயல்காரரும் வேலையாட்களுமாகக் கலைப்பார்கள்.

            அந்த வருடத்தில் கொல்லையில் எருக்குழி வெட்டாதவர்கள் அக்கம் பக்கத்தில் யாராவது வெட்டினால் அவர்களிடம் வாங்கியாவது வயலில் எருவைக் கொட்டி எரு கலைத்து விடுவார்கள்.

            வருடா வருடம் வயலுக்கு எருவிடுவதில் எந்தப் பஞ்சமும் இருக்காது. வயலும் நெல்லை விளைவித்துத் தருவதில் எந்தப் பஞ்சமும் இருக்காது. இவ்வளவு நடைமுறைகளும் டிஏபி, யூரியா, பொட்டாஷ் உரங்கள் வந்த பிறகும் நடந்து கொண்டிருந்தன.

            என்னதான் உரம் அடித்தாலும் உளுந்தும் பயிறும் விளைய எரு அடிக்க வேண்டும் என்று சொல்லும் விவசாயிகளை நான் பார்த்திருக்கிறேன். இந்த விவசாய வழக்கு முறைகள் இரண்டாயிரம் பிறக்கும் முன்பு வரை இரண்டாயிரம் ஆண்டுகள் பிறந்த சில பல ஆண்டுகள் வரை வழக்கில் இருந்தன.

            எப்போது உளுந்துக்கும் பயிறுக்கும் அடிக்க ரசாயன மருந்துகள் வந்தனவோ அப்போதோ வயலுக்கு எருவிடும் முறைகளும் குறைந்து போயின. வீடுகளில் மாடுகள் வளர்ப்பதும் குறைந்து போயின. முடிவில் வீடுகளில் மாடுகளும் இல்லாமல் போய் வயல்களில் எருவிடும் முறையும் இல்லாமல் போயின.

            உரங்களும் ரசாயன மருந்துகளும் மாடுகளையும் இயற்கையான விவசாய முறைகளையும் முற்றிலுமாக அழித்து விட்டன. உரங்கள் வயலுக்கு மட்டுமா மாடுகள் தந்தப் பாலுக்கும் பயன்படுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்ட பிறகு டெல்டா மாவட்ட வயல்களில் கடைசியாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த மண்புழுவும் மண்டையைப் போட்டு விட்டது. இப்போது இந்த மலட்டு மண்ணில்தான் மனிதர்கள் உண்ணும் நெல் விளைந்து கொண்டிருக்கிறது. மலடாகிப் போய்க் கொண்டிருக்கும் மனிதர்கள் உண்பதும் அந்த நெல்லே.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...