வருஷத்துக்கு ஒரு புத்தகமாச்சும் படிக்கணும் சார்!
ஆண்டிற்கு ஒரு முறைதான் உலக புத்தக தினம் வருகிறது. அன்றாவது
ஒரு புத்தகம் படிக்கலாம். அன்றும் அப்படியேதான் கழிகிறது. மீண்டும் பள்ளிக்கூடத்தில்
சேர்ந்து படித்தால்தான் இனிமேல் புத்தகம் படிக்கலாம் போலிருக்கிறது.
அப்படியும் தாழ்வு மனப்பான்மை கொள்ளத் தேவையில்லை. வாட்ஸாப்பிலும்
பேஸ்புக்கிலும் நாம் படிக்காத படிப்பா?
*
அப்போல்லாம் ஆனந்த விகடனும், குமுதமும் படிக்கிறவனைப் பொறுக்கிப்
பயல் என்பார்கள். ஒரு காலத்தில் படிக்க கூடாத புத்தகங்களின் பட்டியலில்தான் அவை இருந்தன.
அந்தப் புத்தகங்கள் தொங்காத பெட்டிக் கடைகளைப் பார்ப்பது அரிதாக இருக்கும்.
இப்போதெல்லாம் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. குறைந்த பட்சம்
ஆனந்தவிகடன், குமுதம் கூட படிக்க முடியவில்லையே என்றாகி விட்டது. ஆனந்த விகடனையும்,
குமுதத்தையும் தொங்க விடும் பெட்டிக் கடைகள் அபூர்வமாகத்தான் தென்படுகின்றன.
பெரிய பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளில்தான் ஆனந்தவிகடனோ,
குமுதமோ வாங்க முடிகிறது. குமுதம் கிடைக்கும் அளவுக்கு ஆனந்தவிகடன் கிடைக்க மாட்டேன்கிறது.
ஏன்ய்யா குமுதம் தொங்க விடுகிற இடத்தில் ஆனந்த விகடனையும் தொங்க
விட்டால் குறைந்தா போய் விடுவீர்கள் என்று ஆனந்த விகடனுக்கு நிகழ்த்தப்படும் அநீதிக்கு
எதிராக நான் குரல் எழுப்பியிருக்கிறேன்.
அதை ஏன் சார் கேட்குறீங்க? ஆனந்த விகடன் ஓடுற அளவுக்கு மற்ற
சக்தி விகடன், மோட்டார் விகடன், அவள் விகடன்ல்லாம் இங்க ஓடாது சார். விகடன் குரூப்
எப்படின்னா எல்லா விகடன்களையும் வாங்கித் தொங்க விடணும்ங்றாங்க. இல்லன்னா ஒரு விகடனையும்
தொங்க விடாதேங்றாங்க. நாங்க என்ன பண்றது சார்? என்கிறார்கள் பெட்டிக்கடை பாவாத்மாக்கள்.
சார் ஒண்ணும் பிரச்சனையில்லை. இப்படியே நேரா போய் லெப்ட் எடுத்து,
ரைட் கட் பண்ணி போனீங்கன்னா லைப்ரரி வரும் சார். அங்க எல்லா விகடனும் இருக்குது. இப்போ
எல்லாரும் அங்க போய்தான் சார் படிச்சிக்கிறாங்க. ஒரு நடை போய்ட்டு வந்தீங்கன்னா ஓசியிலேயே
படிச்சிட்டு வந்திடலாம் என்று அவர்களால் முடிந்த கெய்ட்சிப் பணியையும் செய்கிறார்கள்
அவர்கள்.
என்ன சார் நடந்துகிட்டு இருக்கு நம்ம நாட்டுல என்று என் புரபஸரிடம்
கேட்டால், அட நீயொரு ஆளப்பா? ஆன்லைன்ல படிக்கிற மாதிரி ஸப்கிரிப்ஷன் பண்ணிக்கிறீயா?
அதெ விட்டுட்டு இன்னும் பெட்டிக்கடைக்குப் போறேன், ஆனந்த விகடன வாங்குறேன், படிக்கிறேன்னுகிட்டு.
டிஜிட்டல்ல படிக்குறதுதான் பெஸ்ட்ப்பா. படிச்சமோ, அப்படியே க்ளோஸ்
பண்ணோமான்னு போய்கிட்டே இருக்கலாம். இதே பேப்பர் எடிசன்னா வெச்சுககோ, அதெ படிக்கணும்,
அதெ படிக்குற இடத்துக்கு எடுத்துட்டுப் போறதுக்கு ஒரு பையத் தூக்கணும், படிச்சு முடிச்சிட்டு
ஒரு எடத்துல வைக்கணும், நாப்பது புக்கு சேர்ந்தா பழைய பேப்பர்காரனப் பாக்கணும், அவங்கிட்டெ
பேரம் பேசி வெயிட்டுக்குப் போட்டு பணத்தெ வாங்கணும். ஸோ மச் ஆப் டைம் வேஸ்ட்ப்பா என்கிறார்.
ஒரு புரபஸரே சொல்லும் போது அதில் மறுப்பு சொல்வதற்கு என்ன இருக்கிறது?
இனி அப்படித்தான் படித்தாக வேண்டும் போலிருக்கிறது. இனிமேல் ஆனந்த விகடன்களும், குமுதங்களும்
பெட்டிக் கடைகளில் தொங்காது. நம் மொபைல்களில் தொங்க எல்லா இதழ்களும் தயாராகி விட்டன.
என்னதான் இருந்தாலும் பேப்பர் படிக்குற சொகம் இருக்கே. அது இந்த
டிஜிட்டல்ல வராதுதான். அதுல நமக்குப் புடிச்சதெ கட் பண்ணி பைண்ட் பண்ணி… இனுமே அதுக்குல்லாம்
வாய்ப்பு இல்ல. பழையப் பேப்பர்காரரோடு பொழப்பும் போச்சு. பெட்டிக்கடைகாரங்களோட பத்திரிகை
வியாபாரமும் போச்சு.
*****
No comments:
Post a Comment