14 Jun 2022

திரை கூறு நல்லுலகு

திரை கூறு நல்லுலகு

            கல்யாணம் பண்ணிக்கிறேன்னு யாரும் கேட்க மாட்டேங்றாங்கன்னு ஒரு நடிகை ஸ்டேட்மென்ட் சொன்னதா கேள்விப்பட்டேன். இது நிஜமாக அந்த நடிகையின் ஸ்டேட்மெண்டாக இருக்காது என்பது என் கணிப்பு. ஒரு நடிகை இப்படி சொன்னால்… அவுங்கள கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு வெறி மற்றும் குறியா இருக்குற ஆயிரம் ஆண்களாவது தமிழ் கூறு நல்லுலகில் இருக்கிறார்கள்.  அவுங்க நல்ல ஆக்டராக இருக்க வேண்டும். டயலாக் டெலிவரியும் எவ்வளவு நன்றாக இருக்கிறது.

*

            எங்கு திரும்பினாலும் சூப்பர் ஸ்டார் நடிப்பதை, அல்டிமேட் ஸ்டார் நடிப்பதை, பவர் ஸ்டார் நடிப்பதை, இளைய தளபதி நடிப்பதை, புரட்சி தளபதி நடிப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆம் நடிப்பதைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுதான் எதார்த்தமாக வாழ்வில் நடப்பதைப் பற்றிப் பேசப் போகிறார்களோ?

            தலைவர் 9731, எம்.கே. 3021, தளபதி 4516 என்று எண்களாகச் சொல்கிறார்கள். ஏதோ கைதியின் எண்களைச் சொல்வதைப் போல. நம் ரசிகர்கள் நடிகர்களின் கைதிகள்தான். ஆனால் எண்கள் நடிகர்களுக்குப் போய் சேர்ந்து விடுகிறது.

            தலைவர் ஒரு போலீஸ் அதிகாரியாக நாட்டிலுள்ள முடிச்சவிக்கைகளை எல்லாம் வேட்டையாடுகிறார். தளபதி ஸ்பெஷல் ஆபீஸராக மக்களுக்கு வரும் புதுப்புது ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுகிறார். மற்றும் சில ஸ்டார்கள் வெளிநாடு அளவுக்குச் சென்று மிகையான தன்னம்பிக்கையோடு போராடுகிறார்கள். ரசிகர்கள் எல்லாவற்றுக்கும் கைதட்டுகிறார்கள்.

            என்னத்தைச் சொல்வது? தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. சாத்தான்குளம் சம்பவம் நடந்திருக்கிறது. நடுரோட்டில் ஆணவக் கொலைகள் சர்வ சாதாரண சம்பவங்களைப் போல நடந்து முடிகிறது. நம் நடிகர்கள் என்றாவது ஒரு நாள் அவர்களை பழி தீர்க்க வருவார்கள் என்ற நம்பிக்கை நம்மைப் படம் பார்க்க உந்துகிறது.

*

            ரொம்ப ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறேன் என்கிறார்கள் நடிகர்கள். நடிப்பதற்கே ரிஸ்க் என்றால் வாழ்வதைப் பற்றி என்ன சொல்வது? அவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. நடிப்பது எப்போதும் ரிஸ்க்தான். உண்மை வெளியில் தெரியும் போது சங்கடமாகத்தான் இருக்கிறது.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...