14 Jun 2022

தேவைகளின் பின்னுள்ள அரசியல்

தேவைகளின் பின்னுள்ள அரசியல்

              எல்லாம் தேவையில்தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கை வண்டியின் ஓட்டத்திற்கான எரிபொருள் தேவைதான். அந்தத் தேவை இல்லையென்றால் வண்டியோட்டம் நின்று விடும்.

            பிரியாணியும் குவார்ட்டரும் என்ற தேவை வாக்காளர்களுக்கு இருக்கிறது. ஓட்டு என்ற தேவை அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. இந்தத் தேவைகள்தான் மக்களையும் அரசியல்வாதியையும் இணைக்கின்றன.

            இந்தத் தேவைகள் இல்லையென்றால் ஓசிக்குப் பிரியாணியும் குவார்ட்டரும் கொடுக்க அரசியல்வாதியும் முட்டாள் இல்லை. ஓசிக்கு ஓட்டைப் போட்டு விட்டு வர மக்களும் முட்டாள்கள் இல்லை.

            ஒரு வேளை அந்தத் தேவை பணம் – ஓட்டு என்ற தொடர்பாகவும் இருக்கலாம். பணத்தைக் கொடுத்து ஓட்டை வாங்க வேண்டிய தேவை அரசியல்வாதிக்கு இருக்கிறது. ஓட்டைப் போட்டு பணத்தை வாங்க வேண்டிய தேவை மக்களுக்கு இருக்கிறது.

            இந்தத் தேவை இல்லையென்றால் வெறுமனே பணத்தை வாரி இறைக்க அரசியல்வாதியும் முட்டாள் இல்லை. ஓசிக்கு ஓட்டைப் போட்டு விட்டு வர மக்களும் முட்டாள்கள் இல்லை.

            அப்படியெல்லாம் இல்லை, நல்ல குடிமக்கள் அப்படியெல்லாம் நடந்து கொள்ள மாட்டார்கள் என்றால் அதுவும் ஒரு தேவைதான். மக்களுக்கு நல்லாட்சி என்ற தேவை இருக்கிறது. அப்போதும் அரசியல்வாதிகளுக்கு ஓட்டு தேவை என்ற இருக்கிறது.

            ஆக மக்களின் தேவை என்ன என்பதைப் பார்த்து அதைக் கொடுத்து ஓட்டு என்ற தேவையைப் பெற வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது. மக்களின் தேவை நல்லாட்சி என்பதை மக்கள் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்து விட்டால் அரசியல்வாதிகள் ஓட்டு என்ற தேவைக்காக அதை நோக்கித்தான் போவார்கள்.

            மக்களின் தேவையில்தான் பிரச்சனையா என்றால், அது சரிதான். மக்களை எப்படிப்பட்ட தேவையில் வைக்க வேண்டும் என்ற சூட்சமம் தெரிந்தவர்களாக அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

            மக்களை எப்படிப்பட்ட தேவையில் வைக்க வேண்டும் என்பது அரசியல்வாதிகள் தீட்டும் திட்டங்களிலும் அவர்கள் வழங்கும் நிர்வாகத்திலும்தான் இருக்கிறது. இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு மக்களை எப்படிப்பட்ட தேவையில் வைக்க வேண்டும் என்பதை அரசியல்வாதிகள் மறைமுகமாகத் தீர்மானித்து விடுவார்கள். இதை அவர்கள் நுணுக்கமான நிர்வாக நடைமுறையாக நிகழ்த்துகிறார்கள் என்பதுதான் இதன் பின்னுள்ள உண்மை.

            மக்களால் அரசியல்வாதிகள் செய்யும் இந்த மறைமுக உள்குத்தை மாற்றியமைக்க முடியாது என்றில்லை. அவர்கள் விழிப்போடு சிந்தித்தால் மாற்றி விடக் கூடிய நிலைதான் இது.

            மக்கள் அரசியல்வாதிகள் தங்களுடைய தேவைகளை எப்படி நிறைவு செய்து அரசியல் செய்கிறார்கள் என்பதைக் கூர்ந்து அவதானிக்க வேண்டும். அநேகமாக அவர்களின் அரசியல் என்பது நாய்க்கு ஓர் எலும்பைத் தூக்கிப் போட்டு விட்டு வீடு புகுந்து கொள்ளையடிக்கும் ஊழல் தன்மை நிறைந்ததாகத்தான் இருக்கும்.

            இலவசம் என்ற சொல்லைக் கையில் எடுக்கும் அரசியல்வாதி இலவசத்தை வைத்துதான் கொள்ளையைத் துவக்குகிறார். இலவசம் என்பது தேவையில்லையா என்றால் எதற்கு இலவசம்?

            அடிப்படை தேவைகளை வாங்க முடியாதவருக்கு இலவசத்தைத் தவிர வேறு வழியில்லை என்பது சரியான போக்கு ஆகாது. மக்கள் வாங்க கூடிய விலையில் அடிப்படை தேவைக்கான பொருள்களை வழங்குவதுதான் சரியான போக்கு ஆகும்.

            மக்களால் வாங்க முடியாத விலைக்கு எந்தப் பொருளும் விற்க முடியாது. மக்களால் வாங்க முடியாத பொருட்கள் வியாபாரத்துக்கு உகந்ததல்ல.

            மக்களின் வாங்கும் சக்தியைத் தாண்டி அடிப்படை தேவையை நிறைவேற்றும் பொருள் விற்பனை ஆகிறதென்றால் அங்குள்ள அரசியல்வாதிகள் மக்களுக்குரிய வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அக்கறையற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது ஊழல் செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருக்க வேண்டும்.

            மக்களுக்குரிய வேலை வாய்ப்பை உருவாக்குவது, அவர்கள் வாங்கும் சக்திக்கேற்ப பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவது இரண்டும் அரசியல்வாதிகளின் முக்கிய பணிகளில் அடங்கும்.

            மக்களுக்கு இலவசமாகப் பொருட்களை விநியோகிப்பதில் அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால் அவர்கள் ஊழல் செய்வதில் ஆர்வம் காட்டப் போகிறார்கள் என்பது அதன் பின்னுள்ள கசப்பான உண்மை.

            ஒரு சரியான நிர்வாக நடைமுறையில் இலவசங்களுக்கோ, பாரபட்சமான வழிமுறைகளுக்கோ, அதிகபட்ச சட்ட குழப்பங்களுக்கோ வழியே இல்லை. சரியான நிர்வாக நடைமுறைகள் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி விடும். பாரபட்சங்களை உருவாக்கி கொள்ளையடிக்கும் நடைமுறைகளை இல்லாமல் செய்து விடும்.

            நம் அரசியல்வாதிகள் சரியான நிர்வாக நடைமுறையில் எப்போதும் உள்ளடிக் குழப்பங்களைக் கொண்டு வரவே பார்ப்பார்கள். குட்டையைக் குழப்பினால்தான் மீன்களைப் பிடிக்க முடியும் என்ற நிர்வாக நடைமுறையை நன்கு தெரிந்தவர்கள் அவர்கள்.

            சரியான நிர்வாக நடைமுறைகளுக்காக மக்களை ஏங்குபவர்களாக வைத்துக் கொண்டிருந்தால் தங்கள் வசதிக்கேற்ற நிர்வாக நடைமுறையில் மக்களை இஷ்டபடியெல்லாம் ஆள முடியும் என்ற சூட்சமம் தெரிந்தவர்கள் அவர்கள்.

            அரசியல்வாதிகள் தவறான நிர்வாக நடைமுறைகளைக் கையில் எடுக்கும் போது அதற்காகக் குரல் கொடுக்க வேண்டிய நுட்பமான சிந்தனை மக்களுக்கு வேண்டியதாக இருக்கிறது.

            வீட்டிலும் சரி, நாட்டிலும் சரி நிர்வாக நடைமுறைகளை மட்டும் சரி செய்து கொண்டே இருங்கள். மற்ற அனைத்தும் தாமாகச் சரியாகிக் கொண்டே வரும்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...