7 Jun 2022

ஓர் எழுத்தாளர் உருவாகிறார்

ஓர் எழுத்தாளர் உருவாகிறார்

            அண்மையில் ஓர் இளம் எழுத்தாளர். எடுத்த எடுப்பிலேயே நாவல் எழுதியிருக்கிறார். அவரது துணிச்சல் பாராட்டத்தக்கது.

            படித்துப் பார்த்தேன். ஒவ்வொரு பக்கமும் அவ்வளவு குப்பை. யார் யாரோ துப்பறிகிறார்கள். பத்துப் பக்கங்களுக்கு ஒரு முறை காதலோ காமமோ செய்கிறார்கள்.

            இருபது பக்கங்கள் என்கிற அளவில் தலா ஒருவர் கொலையுறுகிறார். நாவல் மொத்தம் நானூறு பக்கங்கள். மொத்தம் இருபது கொலைகள். நாவலில் இருபது மாந்தர்கள் குறைந்து விடுகிறார்கள்.

            நாவலின் மொத்த மாந்தர்கள் இருபத்து இரண்டு வாசகர் மற்றும் நாவலாசிரியரையும் சேர்த்து. கடைசியில் நாவலாசிரியர் மட்டும்தான் உயிர் பிழைக்கிறார். வாசகரின் நிலை பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. நவீன நாவல்கள் இப்படித்தான் வாசகர்களையும் நாவலாசிரியரையும் கதை மாந்தர்களாக இணைத்து எழுதப்படுகின்றன.

            நாவலின் இசத்தை மட்டும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. முதல் ஐம்பது பக்கங்கள் ஒரு இசத்தையும் அடுத்த ஐம்பது பக்கங்களுக்கு வேறொரு இசத்தையும் என்று நான் லீனியர் முறையில் ஒவ்வொரு ஐம்பது பக்கங்களுக்கும் வெவ்வேறு இசங்களைப் பயன்படுத்தியிருப்பதால் நேரிட்ட குழப்பம் அது.

            இளம் எழுத்தாளர் நாவலைப் பற்றி கருத்துக் கேட்டார். படித்தவர்கள் சொல்லட்டும் சொல்கிறேன் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.

            இந்த நாவலை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்றார். நான் ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றேன்.

            யார் அந்த அவர்கள் என்று வினா எழுப்பினார். நூலை வெளியிட்டால் உங்களுக்கே தெரிய வரும் என்றேன்.

            இறுதியாக நூலை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் என்றார் என்னைப் பார்த்து. அது அவ்வளவு புதுமையாக இருக்காது, உங்களுக்கு நீங்களே சமர்ப்பணம் செய்து கொள்ளுங்கள், அது நாவல் உலகின் புது முயற்சியாக இருக்கும் என்று சொல்லி விட்டேன்.

            அடுத்து என்ன எழுதட்டும் என்று ஆலோசனை கேட்டார். இன்னொரு நாவல் நிச்சயம் வேண்டாம், சிறுகதை, கவிதை என்று ஏகப்பட்ட பக்கங்கள் இருக்கின்றன, ஏதாவது ஒரு பக்கம் போய்த் தொலையுங்கள் என்றேன். சந்தோஷமாகச் சென்றார்.

            இளம் எழுத்தாளரின் நாவலை ஆர்வமாக எதிர்நோக்குகிறேன். தமிழ் நாவல் உருட்டுகளில் நிச்சயமாக இந்த நாவல் புதிய உருட்டாக இருக்கும்.

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...