மூக்குக்குள் சளி தொழிற்சாலையைத் தொடங்கி விட்டார்கள்
சளி பிடித்தால் சனியன் பிடித்தது
போல என்கிறார்கள்
ஏன்
சளி பிடித்தது சனியன் பிடித்ததுபோல
இருக்கக் கூடாது
சளி என்றால் அவ்வளவு மட்டமா
கார்ப்பரோஷன் குழாய் போல
தண்ணீர் வராமல் இருந்த மூக்கு
திடீரென உடைத்துக் கொண்டோடும்
கார்ப்பரேஷன் குழாய் போலாகி விடுகிறது
அல்லது
மூட முடியாத பைப்பைப் போலாகி
விடுகிறது
கொட்டுகிறது கொட்டுகிறது
அப்படிக் கொட்டுகிறது
பத்து குடங்கள் இருந்தாலும்
பத்தாது
இன்னும் பத்து இருபது முப்பது
என வேண்டும்
அவ்வளவு குடங்களில் நிரப்பி
வைத்தாலும்
நானே குடிக்க முடியாத அந்தக்
குடத்து நீரை
பிறகேன் குடத்தில் அடைத்து
பூதத்தைப் பாதுகாப்பது போல
பாதுகாக்க வேண்டும் என்று
கர்ச்சீப்பால் துடைத்துப்
பார்க்கிறேன்
ஒன்று இரண்டு என்று ஆரம்பித்து
பத்து பதினைந்து என்று அதிகரித்து
நூறு இருநூறு என்று எண்ணிக்கை
வெடித்துக் கொண்டு போகிறது
எல்லா கர்ச்சீப்புகளும்
காயப்போட்ட அத்தனை கர்ச்சீப்புகளும்
மழையில்
ஒரே நேரத்தில் நனைவது போல
நனைந்து ஒழுகுகின்றன
நனைந்து ஒழுக ஒழுக கசக்கிக்
காயப் போட்டு
மீண்டும் மீண்டும் துடைத்துக்
கொண்டிருந்தாலும்
மூக்கிலிருந்து ஊற்றுவது
நிற்க மாட்டேன்கிறது
யாரோ மூக்குச்சளியைத் தயாரித்து
ஊற்றுவது போல
ஊற்றிக் கொண்டிருப்பதைப்
பார்த்தால்
மண்டைக்குள் யாரோ மூக்குச்சளி
தயாரிக்கும்
தொழிற்சாலையைத் தொடங்கியிருக்கிறார்களோ
என்னவோ
நம் நாட்டில்தான் எங்கு வேண்டுமானாலும்
எப்படி வேண்டுமானாலும் தொழிற்சாலை
தொடங்கலாம் என்பதால்
அது வேறு பயமாக இருக்கிறது
*****
No comments:
Post a Comment