3 Jun 2022

பொங்கு சளீஸ்வரர் ஆலயம் இருக்குமிடம் அறிவீரோ?!

பொங்கு சளீஸ்வரர் ஆலயம் இருக்குமிடம் அறிவீரோ?!

காலையில் எழுந்து பார்க்கிறேன்

இரவில் பெய்த மழை எல்லாவற்றையும் நனைத்துப் போட்டிருக்கிறது

இந்த மழைக்கு இதே வேலையாகப் போய் விட்டது

தூங்கும் நேரத்தில் வந்தால்தான்

எல்லாவற்றையும் நனைத்துப் போடலாம் என்று தெரிந்தே வருகிறது

அது பாதி டென்ஷன்

காலையில் எழுந்தது லேட்

மழை பெய்யாத இரவுகளில் இப்படி நிகழ்ந்ததில்லை

அது எப்படியோ

மழை பொழியும் இரவுகளில்

அவ்வளவு இடி மின்னல் காற்றுக்கு இடையில்

எப்படித்தான் அசந்து தூங்குகிறேனோ

அது வேறு மீதி டென்ஷன்

சரிதான் வேலையை வேகமாக செய்து

ஈடு கட்டலாம் என்றால்

அப்போதுதான் எப்போதோ வரச் சொன்ன

எலெக்ட்ரீஷியன் வந்து நிற்கிறார்

ஓடாத இயந்திரங்களுக்கு

இன்னும் சிறிது நேரத்தில் மின்சாரம் கொடுக்கப் போகிறவன் என்றும்

பெருமையாகச் சொல்லலாம்

இவரை இப்போது விட்டால் பிறகு பிடிக்க முடியாது என்று

அவர் கூட நின்று

ஆக வேண்டிய வேலைகளைச் சொல்லிக் கொண்டு இருந்தால்

அலுவலகம் கிளம்புவதற்கான நேரம் வந்து விடுகிறது

அட கடிகாரமே இன்று பார்த்தா வேகமாக ஓடுவாய்

நீ நான் காசு கொடுத்து வாங்கி வந்த கடிகாரம் போலச் செயல்படுவதில்லை

யாரிடமோ காசு வாங்கிக் கொண்டு ஓடும் கடிகாரம் போல ஓடுகிறாய்

கொஞ்சம் கூட தாமதமாகச் செல்ல முடியாத அலுவலகம்

பேட்டா காசு இல்லை என்பார் அல்லது

மாதச் சம்பளத்தில் அரை நாள் சம்பளத்தைப் பிடிப்பார்

கந்துவட்டிக்காரனைப் போல கறாராக இருக்கும் அலுவலகம்

இன்னும் டென்ஷனை அதிகம் பண்ணி விடுகிறது

இதற்கிடையில் நேற்று ஆரம்பித்த சளி

இப்போது நன்றாக வேலையைக் காட்டத் துவங்கி விடுகிறது

மூக்கிலிருந்து மேகம் பொழிவது போல

பொழிந்து கொட்டுகிறது

நேற்று இரவு பொழிந்த மழை இப்படித்தான் பொழிந்திருக்குமோ

நான் மூக்கைச் சிந்துவேனா

எலெக்ட்ரீஷினுக்குத் துணையாக நிற்பேனா

அலுவலகம் கிளம்புவேனா

இப்போது முதலில் சளி சனியனை சிந்துவது

வேலை சனியன்கள் பிறகு

உங்களுக்குப் பொங்கு சளீஸ்வரர் ஆலயம் எங்கிருக்கிறது

என்று தெரியுமோ

உதட்டுக்கு மேல் மூக்கில் இருக்கிறதந்த ஆலயம்

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...