19 Jun 2022

எனதன்பின் வோடாபோனுக்கு ஒரு கடிதம்

எனதன்பின் வோடாபோனுக்கு ஒரு கடிதம்

(கடித இலக்கிய வளர்ச்சிக்காக…)

அன்பின் வோடபோன்,

            நலம். நலமறிய ஆவல். இந்தச் செல்போன் காலத்தில் கடிதமா? உன்னிடம் பேசுவதற்குக் கூட உன்னிடம் சிக்னல் இல்லை. மெயில் அனுப்பவும் முடியாது எந்நேரமும் ‘E’ காட்டுகிறது உன் டவர். என்ன செய்வது என் பேரன்பின் வோடபோன்?

            எனது ஆருயிர் வோடபோன் அவர்களே! வர வர ரொம்ப சுற்ற விடுகிறீர். மாடி, மரம், கோபுரம் என்று ஏற விடுகிறீர். சமயங்களில் செல்போன் கோபுரங்களிலும் ஏறி சிக்னலுக்காக அலைகிறேன். அங்கு இங்கு என்று ஏறி நான் கீழே விழாமல் இருக்க வேண்டுமே என்று அனைவரும் கவலைப்படுகிறார்கள். பிரார்த்தனையும் செய்து கொள்கிறார்கள்.

            நகரங்களில் சிறப்பான சேவை வழங்கிய ஏர்செல்லைப் போல கிராமங்களில் சிறப்பான சேவை வழங்கியவர்கள் நீங்கள். தொடர்ந்து அலுப்பு சலிப்பில்லாமல் எத்தனை காலம்தான் சிறப்பான சேவை வழங்க முடியும்? உங்களுக்கு ஏற்பட்டுள்ள அலுப்பைக் களைப்பைச் சலிப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதனாலேயே நீங்கள் இன்னொரு ஏர்செல் ஆகி விடுவீர்களோ என்று பயமாக இருக்கிறது.

            புருஷன் பொண்டாட்டி நல்லுறவைப் பேண ஒவ்வொரு புருஷனும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது தெரியுமா? எவ்வளவு கடினமாக உழைத்தென்ன எனதருமை வோடபோன்?

            உங்கள் சிக்னல் சரியில்லாமல் கஸ்டமர் கேருக்குப் போன் பண்ண சொல்லி பொண்டாட்டி படுத்தி எடுக்கிறாள். கஸ்டமர் கேருக்குப் போன் செய்வது எவ்வளவு கஷ்டம்?

            அதில் இரண்டு விதமான கஷ்டங்கள் இருக்கின்றன என்பது இதுவரை வரலாற்றில் பதியப்படாமல் இருக்கிறது. ஒன்று டவர் கிடைத்தால்தானே போன் செய்ய முடியும். இரண்டு கஷ்டப்பட்டு எப்படியோ டவர் கிடைத்து கஸ்டமர் கேருக்குப் போன் செய்தால் இதை அழுத்தவும், அதை அழுத்தவும் என்று ஒரு பெண்மணியை விட்டுச் சொல்லச் சொல்கிறீர்கள். அந்தப் பெண்மணி சொல்வதைக் கேட்டு அத்தனையையும் அழுத்தி அழுத்தி ஒரே மன அழுத்தம்.

            ஒரே ஒரு முறை அதிர்ஷ்டம் கிடைத்துக் கண்ணியன் ஆனேன். உங்கள் கஸ்டமர் கேர் பணியாளர் ஓர் ஆண் (அதிர்ஷ்டம்? / துரதிர்ஷ்டம்?) பேசினார். நன்றாகப் பேசுங்கள், உங்கள் குரல் விட்டு விட்டுக் கேட்கிறது என்றார். நான் நன்றாகத்தான் பேசுகிறேன், உங்கள் சிக்னல்தான் விட்டு விட்டு வருகிறது என்றேன்.

            அவர் ஒன்றும் கேட்காதது போலச் சொன்னதையே திரும்ப திரும்ப தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருந்தார், விட்டு விட்டுப் பேசாதீர்கள் சார், தொடர்ச்சியாகப் பேசுங்கள் சார்.

            நானும் மனம் தளராத விக்ரமாதித்யன் வேதாளத்திடம் சொல்வது போல இந்த விட்டு விட்டுதான் சார் பிரச்சனை என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். முடிவாக உங்கள் குறை எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்று விட்டு விட்டு அவரும் சொன்னார். இந்த விட்டு விட்டு இதுதான் இதுதான் இதுதான் குறை என்று சொன்னேன்.

            மறுபடியும் மறுபடியும் சார் விட்டு விட்டுக் கேட்கிறது என்றார். ஆமா சார் இந்த விட்டு விட்டு இந்த விட்டு விட்டு இந்த விட்டு விட்டுதான் குறை என்றேன் நானும், ஏதாவது ஒரு விட்டு விட்டு அவர் காதில் விழுந்தால் போதும் என்ற நம்பிக்கையின் அசைக்க முடியாத முறுக்குக் கம்பியைப் போல.

            இந்த விட்டு விட்டு விட்டு விட்டுவால்…

            உங்களுக்கு ஏதோ ஒரு குறை இருக்கிறது, மறுமுறை சிக்னல் நன்றாகக் கிடைக்கும் போது போன் பண்ணிச் சொல்லுங்கள் என்று வைத்து விட்டார்.

            வைக்கும் போது ஹேவ் எ நைஸ் டே என்றார்.

            சார் வைத்து விடாதீர்கள், என் நைஸ் டேயைப் பாழாக்கி விடாதீர்கள் என்றேன்.

            டொப். வைத்து விட்டார்.

            என் நைஸ் டே ஆரம்பமானது.

            இந்த சிக்னல் பிரச்சனையால் போனில் பேசி வம்பளக்க முடியவில்லை, சீரியஸாக சீரியல் மேட்டர் பேச முடியவில்லை, வாட்ஸாப்பில் எதுவும் டவுன்லோட் ஆகவில்லை என்று முட்டுச் சந்தில் விட்டு குத்துவதைப் போல மொத்து மொத்தென்று மொத்த ஆரம்பித்தாள் பொண்டாட்டி.

            ஒரு கஸ்டமர் கேருக்குப் போன் பண்ணி ஒழுங்கா பேசத் தெரியுதா என்று பொடணியிலே ஒரு போடு. மூர்ச்சை தெளிந்து எழ முப்பது நிமிடங்கள் ஆகி விட்டன.

            புருஷர்களை ரொம்ப கஷ்டப்படுத்துகிறார்கள் வோடாபோன் அவர்களே. அன்பின் வோடாபோன் பார்த்து ஏதாவது செய்யுங்கள். உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும். கண்ணீர் விட்டுக் கதறி அழுதபடிச் சொல்கிறேன், புருஷர்கள் பாவம் வோடபோன் அவர்களே.

இப்படிக்கு

உனதன்பின் வாடிக்கையாளன்

(பாலினம் : ஆண்)

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...