5 Jun 2022

வலிமையற்ற வலிமை

வலிமையற்ற வலிமை

            ஒரு படத்தை எப்படி வேண்டுமானாலும் வரையலாம். அதற்குப் பலவிதமான கோணங்கள் இருக்கின்றன. பலவிதமான பார்வைகள் இருக்கின்றன.

            படத்திற்கான விதி திரைப்படத்திற்கும் அப்படியே பொருந்திப் போகும். ஒரு திரைக்கதையைப் பல கோணங்களில் எழுதலாம். முப்பது டிகிரி சாய்த்து, நூற்று இருபது டிகிரி விரித்து, தொண்ணூறு டிகிரியில் செங்குத்தாக நிறுத்தி, பூஜ்ய டிகிரியில் அப்படியே படுக்க வைத்து என்று அதற்குப் பல முறைகள் இருக்கின்றன.

            பெரும்பாலான திரைக்கதைகள் சலனமற்ற முறையில் நேர்க்கோட்டில் பயணிப்பவை. பக்கவாட்டில் பயணித்து நேர்க்கோட்டிற்குத் திரும்பும் திரைக்கதைகளும் இருக்கின்றன. தலைகீழாகப் பயணிக்கும் திரைக்கதைகளும் இருக்கின்றன. சஸ்பென்ஸ் எனும் உத்தியைப் பயன்படுத்தும் திரைக்கதைகள் நேர்க்கோட்டில் பயணிக்க முடியாது. அவை முன்னும் பின்னும் மாறி மாறி பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பன.

            ஒரு திரைக்கதை ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதாக இருந்தால் நேர்க்கோட்டில் பயணித்தால் போதும். ஒரு முடிச்சை அவிழ்ப்பதானால் அது பலவிதமாகப் பயணிக்க வேண்டியிருக்கும். நிஜமாக ஒரு முடிச்சை அவிழ்ப்பதற்குக் கைகள் முன்னும் பின்னுமாகப் பலவிதமாகப் போக வேண்டி இருப்பது போன்றதுதான் அது.

            பெரும்பாலான ஹீரோயிச மசாலா திரைப்படங்களின் பாணி நேர்க்கோட்டைச் சார்ந்தவை. அந்தப் படங்கள் முன்னும் பின்னும் பயணித்தால் ஹீரோயிசத்தைக் குப்புறத் தள்ளி விடும். 

            ஹீரோவே வில்லனாக நடிப்பதற்குக் காரணம் கதையின் பயணத்தை முன் பின் எனப் பலவிதமாக நகர்த்தலாம் என்பதற்காத்தான். ஒரு ஹீரோ நடிகரை வில்லனாக்கிக் கதை சொல்லும் போது கதை சொல்லலில் நிறைய சாத்தியக்கூறுகள் உண்டாவதைக் காண முடியும்.

            ஹெச். வினோத் இயக்கிய ‘சதுரங்க வேட்டை’ எனும் திரைப்படத்தில் அவர் பல விதமான சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்தியிருப்பார். கதையை முன், பின், இடை என்று பலவிதமாக நகர்த்திப் பலவிதமாகக் கதை சொல்லியிருப்பார். அதே வாய்ப்பை அவர் ‘வலிமை’ என்ற படத்தில் தவற விடுவதைப் பார்க்கலாம்.

            வில்லனின் பார்வையில் சொல்லியிருக்க வேண்டிய படம் ‘வலிமை’. அஜித் போன்ற நடிகரை வைத்துக் கொண்டு ஹெச். வினோத் அப்படிப்பட்ட படத்தைக் காட்ட முடியாது என்பதுதான் அந்தப் பலத்தின் பலவீனம். அஜித்தை வில்லனாக்கினாலும் அதிலும் ஒரு ஹீரோயிசத்தைத் தொடர் வேண்டிய நெருக்கடி அவருக்கு இருக்கிறது.

            ‘டிரக்ஸ் மாபியா’ குறித்த கதையில் அவர்களுக்கான அழுத்தமே அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படிக் கொடுத்திருந்தால் அந்தப் படம் தமிழுக்கு முற்றிலும் புதிய கதைத்களத்தைக் கொண்ட திரைப்படமாக அமைந்திருக்க வாய்ப்பு உண்டாகியிருக்கும்.

            ‘வலிமை’ திரைப்படத்திற்காக ஹெச். வினோத் எடுத்திருக்கும் ரெபரன்ஸ்களில் அவரது உழைப்பை நீங்கள் பார்க்க முடியும். ‘டார்க் பிரௌஸர்’ என்ற இணையச் செயலி குறித்துத் தமிழில் முதன் முதலாக விரிவாகப் பேசிய படம் அதுதான். அது பரவலான கவனத்தைப் பெறாமல் போனதற்குக் காரணம் ஹெச். வினோத் கதை சொல்லலில் செய்து கொண்ட சமாதானமாகத்தான் இருக்கும். அஜித்துக்காக அவர் தன்னுடைய பாதையைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லலாம்.

            அஜித்துக்கான பக்கா சினிமாத்தனம் எனும் மொந்தையில் தனது புதிய கள்ளை நிரப்ப முயன்று அந்தக் கள் கொடுக்க வேண்டிய விறுவிறுப்பை அவர் முற்றிலுமாக கழுவிறக்கி கை கழுவியிருக்கிறார்.

            படத்தின் துவக்கத்தில் போதை மருந்து தயாரிப்பிற்கான ஸ்கெட்சை உருவாக்கும் போது படம் குறித்த பிரமாண்ட தோற்றம் ஒரு விதமான எதிர்பார்ப்பை உண்டாக்கி விடுகிறது. அங்கிருந்து துவங்கி போதை மருந்து விநியோகத்தின் நெட்வோர்க்கை நுட்பமாகச் சித்தரிக்கும் இடத்திலும் கவனத்தைக் குவியச் செய்கிறது. அந்தப் பிரமாண்டத்தையும் கவனத்தையும் அஜித்துக்காகக் கதையைப் பின்னத் துவங்கும் போது துவளத் துவங்குவதைக் காண முடிகிறது.

            அஜித்தின் ஹீரோயிசத்துக்காக நிறைய லாஜிக் பொத்தல்களை ஹெச். வினோத் ‘வலிமை’ திரைப்படத்தில் திணித்திருப்பதை வெளிப்படையாகக் காணலாம். அதற்கு அவருக்கு நிறைய மனவலிமை தேவையாக இருந்திருக்கும்.

            அஜித்திற்காக அவர் பைக் ரேசர்கள் மேல் ஒட்டுமொத்த நிரப்பி திணித்திருக்கும் சாகசத் தன்மை நம்பகத்தன்மையை உண்டாக்குவதற்குப் பதிலாக ஒருவித சலிப்பை உண்டாக்கி விடுகிறது.

            அஜித்திற்கான கதை சொல்லலில் ஹெச். வினோத் தன்னுடைய அருமையான கதை சொல்லலைத் தவற விட்டிருக்கிறார். தனது கதை சொல்லலுக்கு ஏற்ப அவர் நடிகர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதன் மூலமாக அவர் தனித்துவமான திரைக்கதை சொல்லியாக மாறும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஹெச். வினோத் வலிமையோடு எந்த திசையில் நகரப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...