பள்ளிக்கூடம் போகாத குருவி
அன்றொரு நாள் எல்லைக்கல்லில் ஒரு குருவி அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்.
எனக்கு அதைப் பார்க்க பார்க்க கவிதை மனோபாவாம் வந்து விட்டது. கவிதா மனோபாவம் என்று
சொல்வது இன்னும் பொருந்தும். அது யாரேனும் பெண்பால் பெயரைக் குறிப்பதாக நீங்கள் நினைத்துக்
கொள்ளலாம் என்பதால் கவிதை மனோபாவம் என்று சொல்வதே சரி என்று நினைக்கிறேன்.
எல்லைக்கல்லில் ஊர்பெயரும் அதை அடைவதற்கு பயணம் செய்ய வேண்டிய
கிலோ மீட்டர் கணக்கும் எழுதப்பட்டிருந்தது. ஊர்ப் பெயரும் சின்னதுதான். அத்துடன் அதன்
கீழ் ஓர் எண். ஈரிலக்க எண்தான். சுலபமாகப் படித்து விடலாம். கிலோ மீட்டரைக் கூட நீட்டி
முழக்காமல் கி.மீ. என்று இனிசியல் செய்திருந்தார்கள். அதாவது அப்பிரிவியேசனில் குறிப்பிட்டிருந்தார்கள்.
இருந்தாலும் அந்தக் குருவிக்கு இதெல்லாம் தெரியுமோ என்ற கவலை
எனக்கு. கவிதை மனோபவாம் அதுதானே. பாரதியார் குயில்பாட்டு எழுதியிருக்கிறார். அவர் அதில்
குயிலோடு பேசுவார். அப்படி அந்தக் குருவியோடு பேசிப் பார்ப்பது என முடிவெடுத்தேன்.
ஏ குருவியே! எல்லைக்கல்லில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் ஓ குருவியே!
சாலையோரக் கல்லில் சோலை போல எண்ணி அமர்ந்திருக்கும் ஹே குருவியே! என்றேன்.
நீட்டி முழங்காதே சீக்கிரம் விசயத்திற்கு வா என அந்தக் குருவி
நினைத்திருக்குமோ என்னவோ. பறப்பதற்கான ஆயத்தங்களை அது செய்வது போல பட்டது. தமிழ்க்
கவிஞர்கள் என்றால் இந்தக் குருவிகள் மட்டமாக நினைத்துக் கொள்ளுமோ என்னவோ.
கல்லில் எழுதியிருக்கும் எண்ணும் எழுத்தும் அறிவாயோ? எண்ணும்
எழுத்தும் கண்ணெனத் தகும் அன்றோ? என்றேன்.
அவ்வளவுதான் என் மானுட சமூகமே! குருவி பறந்து விட்டது. பாவம்
அந்தக் குருவி பள்ளிக்கூடம் போகவில்லையாம்.
பாடம் படிக்காத குருவியே பிறகேன் எல்லைக்கல்லில் அமர்ந்தாய்?
நானும் படித்தவன் என்று கோதா காட்டவா? ஒரு மரக்கிளையில்அமர்ந்திருக்கலாமே! ஓ! சாலையின்
ஓரத்தில் இருந்த அத்தனை மரங்களையும்தான் வெட்டி விட்டார்களே.
இந்தக் குருவிகளுக்காக நாம் எல்லைக்கல்லை நட்டு வைத்திருக்கிறோம்
பாருங்கள். இனியாவது இந்தக் குருவிகள் எழுத்தறிவும் எண்ணறிவும் பெறுவதற்காக நாம் ஏதாவது
செய்தாக வேண்டும். கல்லை நட்டு விட்டோம். அதாவது யானையை வாங்கி விட்டோம். அங்குசம்
வாங்க யோசித்துக் கொண்டிருந்தால் முடியுமா?
*****
No comments:
Post a Comment