17 Jun 2022

98 பக்கங்கள் 100 ரூபாய் கவர்ச்சி கவிப் புத்தகம்

98 பக்கங்கள் 100 ரூபாய் கவர்ச்சி கவிப் புத்தகம்

            ஒரு கவிதைப் புத்தகம் பார்த்தேன். தலைப்பு வித்தியாசமாக இருந்தது. வாங்கி ஒரே மூச்சில் படிக்க வேண்டும் என்ற ஆசை. அந்தக் கால விளம்பரங்களில் நான் அப்படியே சாப்பிடுவேன் மம்மி என்பார்களே அப்படி ஓர் அலாதியான புத்தகத்தைக் கரைத்துக் குடித்து விழுங்கி விடுவதற்கான ஆசை.

            தமிழில் திடீர் திடீர் என்று எழுச்சி பெறும் கவிஞர்கள் வாசகர்களிடம் அலாதியான ஆர்வத்தைத் தூண்டி விடுகிறார்கள். கவிதைப் புத்தகங்களை வெகு கவர்ச்சியாக வெளியிடுகிறார்கள்.

            போஸ்டர்களில் கவர்ச்சி நடிகைகளைப் பார்க்கும் போதே ஓடிப் போய் முத்தம் கொடுக்க வேண்டும் என்று சில நேரங்களில் உன்மத்தம் தோன்றி விடுமே. அப்படி ஓர் உன்மத்தம் அந்தப் புத்தங்களைப் பார்க்கும் போது தோன்றி விடுகிறது.

            வாங்கி வைத்த நாட்குறிப்புகளில் எதுவும் எழுதியதில்லை என்றாலும் நாட்குறிப்பு வாங்கி வைப்பது குறைந்துபடவில்லை என்பதைப் போல படிக்காது போனாலும் பரவாயில்லை, அந்தப் புத்தங்களை எல்லாம் வாங்கி வைத்து விட வேண்டுமென்ற வெறி வந்து விடுகிறது.

            கவர்ச்சியின் காந்த சக்தி அதுதான். கவர்ச்சி நடிகையோடு குடும்ப நடத்தப்  போவதில்லை என்றாலும் கனவுக்குள் ஒரு குத்துப்பாட்டு ஆடிக் கொள்வதில் யாருக்கென்ன நஷ்டம்?

            சரிதான் வாங்கி விட வேண்டும் என்ற முடிவோடு புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். பக்கங்கள் மொத்தம் 98. விலை ரூபாய் 100. இரண்டு ரூபாய் கூடுதலாகத்தான் விலை வைத்திருக்கிறார்கள்.

            அந்தக் கவியின் புத்தகத்தைச் செராக்ஸ் எடுத்தால் இரண்டு பக்கங்களை ஒரு ‘ஏ4’ பக்கத்தில் எடுத்துத் தந்து விடுவார்கள். 46 பக்கங்கள் செராக்ஸ்க்கு வரும். பத்து பக்கங்களுக்கு மேல் செராக்ஸ் எடுத்தால் ஒரு ரூபாய்தான் போடுவார்கள். 46 ரூபாய் இருந்தால் மொத்த புத்தகத்தையும் செராக்ஸ் செய்து விடலாம். ஒரு பத்து நிமிடம் செராக்ஸ் போடுவதற்குக் கொடுப்பார்களோ? அல்லது கேட்டால் முறைப்பார்களோ? யாரறிவார் பராபரமே!

            யோசித்துப் பார்த்து மண்டை குழம்பியது. நான் சற்று ஓரமாக நின்று பார்ப்பது போலப் பார்த்து மொத்த புத்தகத்தையும் படித்து முடித்து விட்டு, அப்படியே வைத்து விட்டு வந்து விட்டேன். யாராவது பார்த்தாலும் நான் படித்தது போலத் தெரியக்கூடாது என்ற முஸ்தீபுகளை நன்றாகவே செய்திருந்தேன். வாசக தர்மம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா. புத்தகமாக வாங்கியிருந்தால் 100 ரூபாய். செராக்ஸ் போடுவதாக இருந்தால் 46 ரூபாய். இன்றைய என் ராசிபலன் ‘மிச்சம்’ என நினைத்துக் கொண்டேன்.

            இப்படி ஒரு வாரத்திற்கு நான்கைந்து முறை புத்தகக் கடைகளுக்குப் போய் வந்தால் வருடத்திற்கு இருநூறு புத்தங்களையாவது ஓசியில் படித்து விடலாம். அதுவும் ஓர் அலாதியான அனுபவம்தான் இல்லையா.

            இப்போது எந்தப் புத்தகக் கடைக்குப் போனாலும் கவர்ச்சி கவி நூல்களைத் தேடுகிறேன். கவர்ச்சி என்பது சாதாரணப்பட்ட விசயமல்ல. என்னைச் சுண்டி ஈர்க்கும் காந்தம். கவர்ச்சி கவிப்புத்தகங்களில் காந்த சக்தி உள்ளது. அறிவியல் விஞ்ஞானிகள் இது குறித்து ஆராய்ந்து சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...