16 Jun 2022

அரிசி விளையும் அங்காடிகளும் கடைகளும்

அரிசி விளையும் அங்காடிகளும் கடைகளும்

            தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் டெல்டா மாவட்டங்கள். டெல்டா மாவட்டங்களில் நடைபெற்ற விவசாயம் முன்மாதிரியானவை மற்றும் ஒட்டு மொத்த தேசமும் மட்டுமல்லாது ஒட்டு மொத்த உலகமும் கற்றுக்கொள்வதற்கான விவசாய நுட்பங்கள் நிறைந்தவை.

            நாற்றாங்காலில் விதை விட்டு, நாற்று பறித்து, பறித்த நாற்றுகளைக் கட்டுகளாகத் தூக்கிச் சென்று வயலில் நட்டு, நடவு நட்ட வயலில் இரண்டு முறை களை பறித்து, விளைந்த நெல்லை அறுவடை செய்து, அறுவடை செய்த நெல்லைக் கட்டுகளாகக் களத்து மேட்டுக்குத் தூக்கிச் சென்று கண்டுமுதல் செய்து, கண்டுமுதல் செய்த நெல்லை வீட்டுக்கு வேண்டிய அளவு பத்தாயத்தில் நிரப்பி, எஞ்சிய நெல்லை விற்று, விற்று வந்த முதலில் அந்த வருட குடும்பச் செலவுகளைச் செய்து விவசாயம் என்பது ஒரு தொழிலாக அல்லாமல், வருமானமாக அல்லாமல் வாழ்க்கை முறையாக இருந்த பிரதேசத்தவை டெல்டா மாவட்டங்கள்.

            இப்போது இப்படி ஒரு விவசாய முறையை நீங்கள் டெல்டா மாவட்டங்களில் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். பம்புசெட்காரர்களால் மட்டும் கடைபிடிக்கும் ஒரு விவசாய முறையாக அது மாறி விட்டது. ஆற்றுப்பாசன விவசாய முறைகள் முற்றிலுமாக மாறி விட்டன.

            டெல்டா மாவட்டங்களில் அப்போதும் விதைத்தார்கள். இப்போதும் விதைக்கிறார்கள். அப்போது விதைத்தது நாற்றாங்காலில். இப்போது நேரடி விதைப்பில்.

            நாற்று பறிப்பது, நடுவது என்ற இரண்டு செயல்கள் வழக்கொழிந்து விட்டன அல்லது போய்க் கொண்டிருக்கின்றன.

            நடவுக்குப் பின் களையெடுப்பதும் குறைந்து போய் களைக்கொல்லி அடிப்பதாக மாறி விட்டது. 

            அறுவடை, கட்டுத் தூக்குதல், நெல்லடித்து கண்டுமுதல் செய்தல் முறைகளும் மாறி விட்டன.

            நெல்லறுக்கும் இயந்திரங்கள் வயலில் இறங்கினால் அத்தனை வேலைகளையும் அது ஒன்றே முடித்து விடுகிறது. எத்தனையோ தொழிலாளர்கள் ஈடுபட்டுச் செய்த உழைப்பை தனியொரு ஆளாக உறிஞ்சிக் கொண்டு இயந்திரங்களே செய்கின்றன.

            விவசாய நிலங்களிடையே இருந்த களத்துமேடுகள் காணாமல் போய் விட்டன அல்லது வயல்களோடு வயல்களாகக் கரைந்து போய் விட்டன.

            இயந்திரங்கள் அறுத்து கண்டுமுதல் செய்த நெல்லைச் சாலைகளில் கொட்டி விட்டுச் செல்கின்றன அல்லது தயார் நிலையில் இருக்கும் டிரக்குகளில் கொட்டி விட்டுச் செல்கின்றன அல்லது இயந்திரங்கள் கொட்டிய நெல்லை ஏந்திய டிரக்குகள் சாலையில் கொண்டு வந்து கொட்டுகின்றன. மொத்தத்தில் வீட்டுக்கு வந்த நெல் இப்போது வீதிக்கு வந்து விடுகிறது. வீதிக்குப் பின் உறவில்லை என்பது போல அது விவசாயிகளின் வீடுகளுக்கு வராமலே சென்று விடுகின்றது.

            கண்டுமுதல் செய்த நெல் சாலைகளில் காய வைக்கப்படுகின்றன. சாலைகளின் ஓரங்களில் குவிக்கப்படுகின்றன. தார்ப்பலீன் பாய்களால் மூடப்படுகின்றன.

            காய்ந்த நெல்லை வியாபாரிகளிடம் விற்பதாக இருந்தால் ஒரு டாட்டா ஏஸோ அல்லது லாரியோ அவற்றை மூட்டைகளாக்கிக் கொண்டு ஏற்றிச் செல்கின்றன. அரசு கொள்முதல் நிலையங்களில் போடுவதென்றால் டிரக்குகளில் அல்லது டாட்டா ஏஸ்களில் மூட்டைகளாக ஏறிச் செல்கின்றன.

            வியாபாரிகள் மூட்டை ஏற்றிச் சென்ற சில நாட்களுக்குள் பட்டுவாடா செய்கின்றனர். அரசு கொள்முதல் நிலையங்கள் சில நாட்களுக்குள் வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்கின்றன.

            யாராவது ஒரு விவசாயி ஒரு பிடி நெல்லை வீட்டுக்குக் கொண்டு செல்வாரா என்று எதிர்பார்த்து நானும் ஒவ்வொரு வருடமும் ஏமாந்து போகிறேன். அவர்கள் ஏன் எடுத்துச் செல்ல வேண்டும்? அவர்களுக்குத்தான் எத்தனை பிடி அரிசி வேண்டுமானாலும் அங்காடிகளிலும் கடைகளிலும் கிடைக்கின்றனவே.

            இந்த தலைமுறைக்கு நெல் எங்கே விளைகிறது என்பது தெரிய வேண்டியதில்லை. அரிசி எங்கே விளைகிறது என்பது மட்டும் தெரிந்தால் போதும்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...