9 Jun 2022

என் எழுத்தும் என் அன்பின் வாசகரும்

என் எழுத்தும் என் அன்பின் வாசகரும்

            என்ன சார் இது, உங்களை எல்லாரும் எழுத்தாளர்ங்றாங்க. இன்னும் ஒரு புத்தகம் கூட போடாம இருக்கிறீங்க?

            என்னமோ சார் போடணும்ன்னு தோணல.

            அப்புறம் எப்படி சார் உங்களை எழுத்தாளர்ன்னு நாலு பேருக்குத் தெரியும் சொல்லுங்க?

            அதான் சார் எனக்கும் ஆச்சரியமாக இருக்கு. புத்தகம் போடாமலே என்னை எப்படி எழுத்தாளர்ன்னு சொல்றாங்கன்னு? இப்போ நீங்க சொல்றீங்க. இந்த உலகத்துல காரண காரியம் இல்லாம எவ்வளவுதான நடக்கும்?

            எழுத்துங்றது எல்லாருக்கும் வந்திடாது. உங்களுக்கு வருது. அது கடவுளோட கிருபை. நீங்க அதுக்கு ஒரு மரியாதை தரணும்ன்னா உங்க எழுத்தைப் புத்தகமா போடணும் சார்.

            என்ன சார் பண்றது? அதப் பத்தி நெனைச்சாலே ஏன்டா போடணும்ங்ற நெனைப்புதான் வருது.

            எழுதத் தெரியாதவனெல்லாம் எழுதி புத்தகம் போடுறான் சார். தன்னடக்கம் வேணும்தான். நீங்க இவ்வளவு தன்னடக்கமா இருக்கக் கூடாது. சீக்கிரமே புக் பப்ளிஷ் பண்ணுங்க சார்.

            அதாங் சார். அதுல ஒரு இன்ட்ரெஸ்ட் வர மாட்டேங்குது.

            இன்ட்ரெஸ்ட் விடுங்க சார். ஒரு புக்கை வெளியிட பத்தாயிரம் ஆவுமா? பதினைஞ்சாயிரம் ஆவுமா? எவ்ளோ தண்ட செலவு ஆவுது? அப்படி ஒரு தண்டச் செலவுன்னு நெனைச்சுப் பண்ணிட்டுப் போங்க சார்.

            அந்தத் தண்ட செலவுங்ற மேட்டர்தான் சார் இடிக்குது.                   

            அது உங்கள தூண்டு விடுறதுக்காக சொன்னது சார். உங்கள எப்படியாச்சும் ஒரு புக்கை வெளியிட வைக்கணும்ன்னு பாக்குறேன். அதுக்காகச் சொன்னேன்.

            அப்படியில்ல சார். நீங்க சொன்னது சரிதான். தண்டச் செலவுதான் சார்.

            ஐயோ சார். நீங்க ராங்கா அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டீங்க. கட்டாயம் உங்களப் போல எழுத்தாளர்கள் புத்தகம் போடணும்.  போட்டிருந்தீங்கன்னா நாலு அவார்ட்ஸ் வாங்கியிருப்பீங்க. கலைமாமணி, பத்மஸ்ரீ கூட வாங்கியிருக்கலாம். யாருக்கு என்ன இருக்குன்னு யாருக்குத் தெரியும் சொல்லுங்க? நோபல் கூட கிடைச்சிருந்தாலும் கிடைச்சிருக்கும்.

            நீங்க ரொம்ப அதிகமா சொல்றீங்க சார்.

            உங்களுக்குத் தெரியாது உங்களப் பத்தி. எங்களுக்குத்தாம் சார் தெரியும்.

            அப்பிடிங்றீங்களா? இவ்வளவு நாளா நோபலையா விட்டுட்டு இருந்தேன்?

            விதை சிறிசுதான் சார். முளைச்சால பெரிய மரமில்லையா?

            ஒரு விசயம் சார். நான் புக் பப்ளிஷ் பண்ணலையே தவிர. ப்ளாக் பப்ளிஷ் பண்றேன்.

            குட். வெரி குட். மொதல்ல அதெ காட்டுங்க.

            அடடா எப்படிப்பட்ட வாசகரைத் தவற விட்டிருக்கிறேன். இவரை நான் வாழ்வின் முற்பகுதியில் சந்தித்திருந்தால் ஒரு சில விருதுகள், ஒரு சில பட்டங்கள் எல்லாம் கிடைத்திருக்கலாம். கிடைத்திருக்கலாம் என்ன கிடைத்திருக்கும்.

காலம்தான் எவ்வளவு மோசமானது. அவரை எப்போது என்னைச் சந்திக்க வைக்கிறது பாருங்கள். நேரத்தைக் குறை சொல்லி என்னவாகப் போகிறது? எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வர வேண்டுமல்லவா. இப்போதுதான் அந்தநேரம் வந்திருக்கிறது.

            இதாங்க சார் என்னோட ப்ளாக். படிச்சுப் பாருங்க சார் என்று அவருடைய மொபைலில் எடுத்துக் கொடுக்கிறேன்.

            இது மாதிரி ப்ளாக்குக்கெல்லாம் சுஜாதா அவர்ட்ஸ்ல்லாம் கொடுக்குறாங்க சார். அதாச்சும் தெரியுமா உங்களுக்கு?

            தெரியும் சார். ஆனா இது மாதிரி ப்ளாக்குக்குக் கொடுக்குறாங்களான்னு தெரியாது சார்.

            ரொம்ப இன்பீரியரா பீல் பண்றீங்கன்னு நெனைக்குறேன். பேசிகிட்டே இருந்தா பேசிக்கிட்டே இருக்குறாப்புலத்தான் இருக்கும். நான் பிளாக்க படிக்கிறேன்.

            படிக்க படிக்க அவர் முகம் பிரகாசமாகி கருமேகம் சூழத் தொடங்கியது போல இருளத் தொடங்கியது. அவ்வபோது மின்னல் வெட்டுவது போல முகத்தில் ஒரு கர்ண கொடூரம் வந்து போனது. இடி இடிப்பது போல நாராசமாய் ச்சைய் என்ன சார் எழுத்து இதெல்லாம் என்று சத்தமிடத் தொடங்கினார்.

            சார் நாம்ம கொஞ்சம் தனியா போய் படிக்கலாமா?

            அதற்கு அவர் உடன்படாதவரைப் போலக் காணப்பட்டார்.

            அவர் தலை நரம்பு தளர்ச்சி வந்தவரைப் போல இப்படியும் அப்படியுமாக ஆடியது. அவருக்கு ஏதேனும் நரம்பு தளர்ச்சி வந்து விட்டதா? இந்த ப்ளாக்கைப் படிப்பதால் இப்படி ஆகிக் கொண்டிருக்கிறாரா? எதையும் என்னால் சரியாக அனுமானிக்க முடியவில்லை.

            ஒரு நான்கு பதிவுகள் படித்து முடித்த பிறகு வானத்தை நோக்கிக் காறித் துப்பினார். அது அவர் முகத்திலேயே திரும்ப வந்து ஒட்டிக் கொண்டது.

            சார் முகத்திலே எச்சில் என்றேன் பயந்த மேனிக்கு.

            இருக்கட்டும்யா. என்னோட முகம். என்னோட எச்சில். உன்னோட முகமா? உன்னோட எச்சிலா?

            நீங்க ஏதோ நவீன கவிதை சொல்றாப்புல இருக்குது என்று நடுங்கிக் கொண்டே சொன்னேன்.

            அவர் முகம் கோணித் திருகிக் கொண்டது. முகத்துக்கு அருகில் மொபைலை வைத்துப் படித்துக் கொண்டிருந்தவர் கைகளை எட்ட உயர்த்தி அண்ணாந்து பார்த்துப் படிக்கத் தொடங்கினார்.

            ரொம்ப பாதிக்குதுன்னா நிறுத்திக்கிடலாம் என்றேன் அதற்கு மேல் அதிர்ச்சியைத் தாங்க முடியாமல்.

            நானூறு ஐநூறு கிலோ மீட்டரை ஓரே மூச்சில் ஓடிக் கடந்தவரைப் போல அப்படி ஒரு மூச்சிரைப்பு அவருக்கு உண்டாயிற்று.

            சட்டெனக் கீழே குனிந்தவர் கையில் அகப்பட்ட கல்லை எடுத்து ரோட்டில் போய்க் கொண்டிருந்தவரை நோக்கி வீசினார்.

            எனக்குக் கிலி பிடிக்க தொடங்கியது.

            சார் விட்டுரலாம் என்றேன் காட்டுக் கத்தலாக. எதுவும் அவர் காதுக்குள் நுழைவதாகத் தெரியவில்லை.

            அவருடைய கால்கள் இரண்டும் முறுக்கிக் கொள்ள ஆரம்பித்தன. கைகளை இயந்திர காற்றாடி சுற்றுவது போல ராட்சச வேகத்தில் சுழற்றி கையிலிருந்து மொபைலைத் தரையில் போட்டு அடித்தார்.

            மொபைல் சுக்கு நூறாகத் தெறித்துச் சிதறியது.

            யாரோ அவரைப் பிடித்து சுழற்றுவது போலவோ அல்லது சூறாவளிக் காற்றில் சுழல்வது போலவோ சுழன்றார். பிறகு பொத்தெனத் தரையில் விழுந்தார். வாயிலிருந்து நுரை நுரையாக வந்தது.

            புக் பப்ளிஷ் செய்யாமல் இருந்தது சரியான முடிவுதான் என்று அவரைப் பார்த்துக் கொண்டே என் கைகளால் என் முதுகைத் தட்டிக் கொண்டு சபாஷ் சொல்லிக் கொண்டேன்.

            பக்கத்திலிருக்கும் வீட்டிற்கு ஓடிச் சென்று தண்ணீர் வாங்கி வந்து முகத்தில் தெளிப்பதா? அல்லது 108 ஆம்புலன்சுக்குப் போன செய்வதா? என்ற குழப்ப மேகம் இப்போது என்னைச் சுற்றிச் சூழ ஆரம்பித்தது.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...